Published:Updated:

ரஷ்யா: `உலகின் முதல் கொரோனா தடுப்பூசி’ - சொந்த மகளுக்குச் சோதனை செய்து வெளியிட்ட புதின்!

ரஷ்யா அதிபர்
ரஷ்யா அதிபர் ( AP )

உலகின் முதல் கொரொனா தடுப்பூசியைத் தயாரித்து அதிகாரபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் மனிதனின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதித்து அனைத்து விஷயங்களையும் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உலகில் இரண்டு கோடி மக்களைப் பாதித்து, பல லட்சக்கணக்கானவர்களின் உயிரைப் பறித்த கொரோனா வைரஸுக்கான, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாட்டு விஞ்ஞானிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் எந்த மருந்தும் அதிகாரபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.

சோதனை
சோதனை
AP

இந்நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெளியிடுவதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. `உலகில் முதல்முறையாக கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு தடுப்பூசி பதிவு செய்யப்பட்டது’ என ரஷ்ய அதிபர் புதின் இன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தடுப்பூசி தொடர்பாக அவர் பேசியபோது, ``இது உலகுக்கு மிகவும் முக்கியமானபணி, இந்தத் தடுப்பூசியின் வளர்ச்சியில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். இது மிகவும் திறம்படச் செயல்படுகிறது. நிலையான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது. நான் மீண்டும் சொல்கிறேன் இந்த மருந்து அனைத்து சோதனைகளையும் கடந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

“நடப்பாண்டில் கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பில்லை..!” - மருத்துவ ஸ்டார்ட்அப் சொல்லும் உண்மை!

ரஷ்யா உருவாக்கியுள்ள இந்தப் புதிய தடுப்பூசி அந்நாட்டு அதிபரின் இரண்டு மகளில் ஒருவருக்கும் செலுத்தி சோதனை செய்யப்பட்டதாகவும், அவர் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் முதலில் முதியவர்களுக்கு இதைச் செலுத்தி சோதனை செய்து, அவர்களின் எதிர்ப்புச் சக்தி சோதிக்கப்படும், பிறகு அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இது வெளியிடப்படும் ரஷ்ய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள்
தன்னார்வலர்கள்
AP

ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கமலேயா (Gamaleya) ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசியின் பரிசோதனைகள் ஜூன் 18-ல் தொடங்கப்பட்டுள்ளன. 38 தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் குழு ஜூலை 15-ம் தேதியும் இரண்டாம் குழு ஜூலை 20-ம் தேதியும் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த மருந்து சோதனை செய்யப்பட்ட அனைவரும் தற்போது நலமாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நம்பிக்கையை அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா: `இந்தியாவால் உலகுக்கே கோவிட்-19 தடுப்பூசி தயாரித்து வழங்க முடியும்!’ - பில்கேட்ஸ்
அடுத்த கட்டுரைக்கு