உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் 2022 இறுதி மகிழ்ச்சியாக முடிந்து, 2023 மகிழ்ச்சியாகத் தொடங்கும் என எதிர்பார்ப்பதுபோலவே, உக்ரைன் மக்களும் இந்த போர் முடிந்துவிடாதா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருப்பார்கள். ஆனால், பிப்ரவரி 24-ல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் இந்த ஆண்டோடு முடிவதற்கான அறிகுறிகளாக ரஷ்ய தரப்பிலிருந்து எதுவும் வெளிப்படவில்லை.
மாறாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து கண்டணங்கள் தெரிவிப்பதும், ரஷ்யா அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாகத் தொடர்கிறது. இந்த நிலையில் உலக தலைவர்கள் தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்ள, ரஷ்யா மீது பொருளாதார தடைவிதித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) ஆகியோருக்கு புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க மாட்டார் என ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov), ``அவர்களுடன் தற்போது எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. தொடர்ச்சியாக அவர்கள் மேற்கொண்டுவரும் நட்புறவுக்கு விரோதமான நடவடிக்கைகளால் அதிபர் புதின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார்" எனத் தெரிவித்தார்.