Published:Updated:

தயார்நிலையில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள்... கருங்கடலில் காத்திருக்கும் கப்பல்கள்...

வீரர்கள்
பிரீமியம் ஸ்டோரி
வீரர்கள்

அதிகரிக்கும் ரஷ்யா - உக்ரைன் போர்ப் பதற்றம்!

தயார்நிலையில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள்... கருங்கடலில் காத்திருக்கும் கப்பல்கள்...

அதிகரிக்கும் ரஷ்யா - உக்ரைன் போர்ப் பதற்றம்!

Published:Updated:
வீரர்கள்
பிரீமியம் ஸ்டோரி
வீரர்கள்

2022-ம் ஆண்டை உலகமே கொண்டாட்டங்களுடன் வரவேற்றபோது, உக்ரைன் - ரஷ்யா மட்டும் மிகுந்த பதற்றத்துடன் எதிர்கொண்டன. கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய அந்தப் பதற்றம், இப்போது போர்ப் பதற்றமாக மாறி, பற்றியெரியத் தொடங்கியிருக்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் அப்படி என்னதான் பகை?

1991-ல் சோவியத் யூனியன் 15 நாடுகளாகச் சிதறியபோது, அதில் ஒரு நாடாக உருவானதுதான் உக்ரைன். அதனாலேயே மொழி, கலாசாரம், பண்பாட்டுரீதியாக ரஷ்யாவுடன் நெருக்கமான பிணைப்பைக்கொண்டிருக்கிறது உக்ரைன். அதேசமயம், உக்ரைன் நாட்டு மக்களோ இரு வேறு அரசியல் நிலைப்பாடு களைக்கொண்டிருக்கிறார்கள். ரஷ்ய எல்லையை ஒட்டிய கிழக்கு, தெற்குப் பகுதியில் வாழும் உக்ரைன் மக்கள் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டுடனும், மேற்குப் பகுதியை ஒட்டிய உக்ரைன் மக்கள் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டுடனும் இருக்கிறார்கள். உக்ரைன் மக்களின் இந்த இரு வேறு நிலைப்பாடுகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவும் போட்டிபோடுவதுதான் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம்.

தயார்நிலையில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள்... கருங்கடலில் காத்திருக்கும் கப்பல்கள்...
தயார்நிலையில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள்... கருங்கடலில் காத்திருக்கும் கப்பல்கள்...

இன்னொரு பக்கம், புவிரீதியாக ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட எல்லையில் அமைந்திருக்கிறது உக்ரைன். எனவே, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உக்ரைனைத் தங்களது களமாகத் தேர்வுசெய்திருக்கும் அமெரிக்க, ஐரோப்பியக் கூட்டு நாடுகள், அந்த நாட்டை தங்களது நேட்டோ கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள ஆதரவு தெரிவித்தன. வேகமான பொருளாதார வளர்ச்சிக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு சேர ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்த உக்ரைன், நேட்டோ கூட்டமைப்பில் இணையவும் ஆர்வம் காட்டியது. ஆனால், ரஷ்யா இதைக் கடுமையாக எதிர்க்கிறது. தனது நாட்டின் பூகோளப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமானால், உக்ரைனைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது ரஷ்யாவின் எண்ணம். ஏற்கெனவே தனது அண்டை நாடுகளான போலந்து, லாட்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகியவை நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துவிட்ட நிலையில், உக்ரைனும் நேட்டோவில் இணைந்தால், அது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகலாம் என்றும் அஞ்சுகிறது ரஷ்யா.

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தோமானால், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உக்ரைன் தனி நாடான பிறகும் அதனுடன் நட்பு நாடாகத்தான் இருந்தது ரஷ்யா. 2004-ல் ரஷ்யா சார்புடைய விக்டர் யானுகோவிச் உக்ரைன் அதிபராகப் பொறுப்பேற்றபோதுதான் முதல் பிரச்னை வெடித்தது. அவர் பதவியேற்றதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய சார்புடைய எதிர்க்கட்சியினரும், மக்களும் `ஆரஞ்சு புரட்சி’ எனும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து, அதிபர் மாற்றப்பட்டு ஐரோப்பிய சார்புடைய விக்டர் யுஷ்சென்கோ அதிபரானார். அதன் பின்னர் 2010-ல் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட விக்டர் யானுகோவிச், உக்ரைன் அதிபரானார். தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையெழுத்தாகவிருந்த ஐரோப்பா - உக்ரைன் பொருளாதார ஒப்பந்தத்தை யானுகோவிச் புறக்கணித்தார். மேலும், ரஷ்யத் தலைமையிலான பொருளாதார ஒன்றியத்துடன் உக்ரைனை இணைத்துக்கொண்டார்.

தயார்நிலையில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள்... கருங்கடலில் காத்திருக்கும் கப்பல்கள்...

இதன் விளைவாக, 2013 இறுதியில் உக்ரைனில் மீண்டும் ஐரோப்பிய ஆதரவு மக்களின் புரட்சி வெடித்தது. இந்த முறை போராட்டத்தின் தீவிரத்தால் 2014, பிப்ரவரியில் நாட்டைவிட்டே வெளியேறினார் யானுகோவிச். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ரஷ்யா, அடுத்த ஒரு மாதத்துக்குள் உக்ரைனின் தெற்குப் பகுதியான க்ரீமியன் தீபகற்பத்தை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடுமையாகக் கண்டித்தன. மேலும், ஜி-8 நாடுகள் கூட்டமைப்பிலிருந்து ரஷ்யாவை அதிரடியாக நீக்கின.

இந்த நிலையில், 2019-ல் உக்ரைன் அதிபராகப் பொறுப்பேற்ற அமெரிக்க-ஐரோப்பிய சார்புடைய வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைனை இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, தனது ராணுவத் துருப்புகளை ரகசியமாக உக்ரைன் எல்லையை நோக்கி நகர்த்தியது. இதையடுத்து, ஜோ பைடன், ‘‘உக்ரைன் தாக்கப்பட்டால், ரஷ்யா இதுவரை காணாத பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்று எச்சரித்தார். அதற்கு பதிலடி கொடுத்த புதின், ‘‘நாங்கள் எங்கள் ஏவுகணைகளை அமெரிக்காவின் அண்டை நாடுகளின் எல்லையில் நிலைநிறுத்தாத நிலையில், அமெரிக்கா மட்டும் தனது ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்கு அருகில் நிறுத்தியது ஏன்?’’ என்று சூடானார். மேலும் அவர், ``உக்ரைனுடன் மோதலை ரஷ்யா விரும்பவில்லை. ஆனால், ‘உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் சேர்க்க மாட்டோம்’ என்று அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்ய வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். புதினின் இந்த நிபந்தனையை அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன.

தயார்நிலையில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள்... கருங்கடலில் காத்திருக்கும் கப்பல்கள்...

இதையடுத்து, ஒரு லட்சம் படைவீரர்களை உக்ரைன் எல்லையில் நிறுத்தியிருக்கிறது ரஷ்யா. உக்ரனைக் குறிவைத்து கருங்கடலில் காத்திருக்கின்றன ரஷ்ய போர்க்கப்பல்கள். எதிர்முனையில் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கின்றன. தன்னுடைய நாட்டு மக்களுக்கும் ஆயுதப்பயிற்சி கொடுத்துவருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. ‘அமெரிக்கர்களே... உடனடியாக உக்ரைனைவிட்டு வெளியேறுங்கள்’ என்று எச்சரித்திருக்கிறார் ஜோ பைடன்.

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் இரு நாட்டு மோதல் மட்டுமல்ல... அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளும் போர்க்களத்தில் இறங்கக் காத்திருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அது மூன்றாம் உலகப்போருக்கே வழிவகுக்கும். இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது!