Published:Updated:

தகர்க்கப்பட்ட ‘மாஸ்க்வா’ - தீவிரமடையும் போர்!

உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

தலைநகர் கீவ்-வைச் சுற்றியுள்ள பகுதிகளில் 900 சடலங்கள் சிதறிக்கிடப்பதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

தகர்க்கப்பட்ட ‘மாஸ்க்வா’ - தீவிரமடையும் போர்!

தலைநகர் கீவ்-வைச் சுற்றியுள்ள பகுதிகளில் 900 சடலங்கள் சிதறிக்கிடப்பதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி மூன்று மாதங்களாகியும் போரின் தீவிரம் குறையவில்லை. போர் நிறுத்தத்துக்கான அறிகுறிகளும் தென்படவில்லை. கடந்த வாரம் ரஷ்யாவின் முன்னணிப் போர்க் கப்பலான `மாஸ்க்வா’ தாக்கப்பட்டதையடுத்து, போர் மேலும் உக்கிரம் அடைந்துள்ளது. இந்தப் போரில் கடந்த வாரம் நடந்த சில முக்கியச் சம்பவங்கள் இங்கே...

தகர்க்கப்பட்ட ‘மாஸ்க்வா’ - தீவிரமடையும் போர்!

தகர்க்கப்பட்ட `மாஸ்க்வா’ கப்பல்!

ரஷ்யாவின் அதிநவீன போர்க் கப்பலான மாஸ்க்வா, கருங்கடலில் முகாமிட்டு உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திவந்தது. இந்தக் கப்பலில் எதிரி நாட்டின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் நவீன ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏப்ரல் 15 அன்று உக்ரைன் ராணுவம் கருங்கடலில் நடத்திய தீவிரத் தாக்குதலில் மாஸ்க்வா கப்பல் தகர்க்கப்பட்டு, கப்பலில் இருந்த 510 பேரில், 452 பேர் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் ஊடகம் செய்தி வெளியிட்டன. இது குறித்து அறிக்கை வெளியிட்ட ரஷ்யா, `மர்ம ஏவுகணைத் தாக்குதலில் மாஸ்க்வா போர்க் கப்பல் சேதமடைந்திருக்கிறது. ஆனால், கப்பலில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர்’ என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ``அந்தக் கப்பலில் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவை கடலில் மூழ்கியிருந்தால், கதிர்வீச்சு ஆபத்து ஏற்படலாம்’’ என்று பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள் சர்வதேச ஆயுத வல்லுநர்கள்.

மூன்றாம் உலகப் போர்?

ரஷ்ய அரசு ஊடகமான `ரஷ்யா ஒன்’ தொலைக்காட்சியில் பேசிய பிரபல செய்தியாளர் வோல்கா, ``மாஸ்க்வா போர்க் கப்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். உக்ரைன் தலைநகர் கீவ்-வுக்குப் பல நாடுகளிலிருந்து தலைவர்கள் வந்து செல்கின்றனர். அங்கு ஒற்றைக் குண்டு வீசுவதன் மூலம் இதைத் தடுக்க முடியும்” என்று மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். தொடர்ந்து ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், `அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்திருக்கிறது. மாஸ்க்வா கப்பலை உக்ரைன் தகர்த்துவிட்டதால் கீவ், மரியுபோல் நகரங்களிலுள்ள உக்ரைனின் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திவருகிறது. கார்கிவ் நகரத்திலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்திவருகிறது ரஷ்யா.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

ஜெலன்ஸ்கி எச்சரிக்கை!

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததால், போர் முடிவுக்கு வரும் என்று பலரும் நம்பினார்கள். ஆனால், மாஸ்க்வா போர்க் கப்பல் தகர்க்கப்பட்ட பிறகு, ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில் தொலைக்காட்சியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``ரஷ்யப் படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பெரிய தாக்குதல்களை நடத்த வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்தப் போரில் அடுத்த சில நாள்கள் முக்கியமானதாக இருக்கும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

கொல்லப்பட்ட 900 பொதுமக்கள்!

தலைநகர் கீவ்-வைச் சுற்றியுள்ள பகுதிகளில் 900 சடலங்கள் சிதறிக்கிடப்பதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்திருக்கிறது. `பெரும்பாலான சடலங்களில் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. போர்க் கப்பல் தகர்க்கப்பட்டதற்கு பதிலடியாக இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டுவருகிறது ரஷ்யா’ என்று உக்ரைன் காவல்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. முன்னதாக, ``ரஷ்யத் தாக்குதலில், உக்ரைனைச் சேர்ந்த 198 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து மோசமான போர்க் குற்றங்களில் ஈடுபட்டுவருகிறது ரஷ்யா’’ என்று அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார்.

தகர்க்கப்பட்ட ‘மாஸ்க்வா’ - தீவிரமடையும் போர்!

23,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு?

ரஷ்யா ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `உக்ரைன் வீரர்களில் 23,300 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விமானங்களைத் தாக்கி அழிக்கும் 249 ஏவுகணைகள், 136 விமானங்கள், 471 ஆளில்லா விமானங்கள், 2,171 சிறப்பு ராணுவ வாகனங்கள், 998 பெரிய ரகத் துப்பாக்கிகள், 2,308 பீரங்கிகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டிருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உக்ரைனோ, `தங்கள் தரப்பிலிருந்து சுமார் 3,000 ராணுவ வீரர்கள் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர்’ என்று சொல்லிவருகிறது.

வறுமையில் 170 கோடி மக்கள்!

உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஐ.நா-வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ``ரஷ்யா - உக்ரைன் போரால் 170 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படும் நிலை ஏற்படும். இந்தப் போரால், வளர்ந்துவரும் நாடுகள்மீது மௌனத் தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. உலக அளவில் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில்தான் கோதுமை, பார்லி 30 சதவிகிதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஐந்தில் ஒரு பங்கு சோளமும், அதிக அளவு சூரியகாந்தி எண்ணெயும் இந்த இரு நாடுகளில்தான் உற்பத்தியாகின்றன. இந்தப் போரால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு, விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டிருப்பதால், விலைவாசி விண்ணை முட்டியிருக்கிறது. கோதுமை, சோளத்தின் விலை 30 சதவிகித உயர்வைச் சந்தித்திருக்கின்றன. கச்சா எண்ணெய் விலையும் 60 சதவிகிதம் உயர்வடைந்திருக்கிறது. இதன் காரணமாக ஐந்தில் ஒரு பங்குக்கும் மேலான மக்கள் வறுமை, பசி, பட்டினி ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்’’ என்று எச்சரித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism