Published:Updated:

70 நாள்களை நெருங்கும் போர்... எப்போது முடிவுக்கு வரும்?

உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

சில தினங்களுக்கு முன்னர், உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலைக் கைப்பற்றியது ரஷ்யா.

70 நாள்களை நெருங்கும் போர்... எப்போது முடிவுக்கு வரும்?

சில தினங்களுக்கு முன்னர், உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலைக் கைப்பற்றியது ரஷ்யா.

Published:Updated:
உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

ரஷ்யா - உக்ரைன் போர் 70 நாள்களை நெருங்கிவிட்டது. தொடர்ச்சியாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திவந்தாலும், போரின் தீவிரம் மட்டும் குறையவில்லை. இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் உலகமும் முழுவதும் எழுந்திருக்கும் கேள்வி. பதில்தான் இன்னும் கிடைக்கவில்லை. இந்தப் போரில் கடந்த வாரம் நடந்த சில சம்பவங்கள் இங்கே...

“ஐ.நா-வை அவமதிக்கும் செயல்!”

கடந்த ஏப்ரல் 29 அன்று உக்ரைனின் தலைநகர் கீவ்-வுக்கு அருகில் போரால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ், ``உக்ரைன், மிகக் கொடூரமான வலிகளைத் தாங்கி நிற்கிறது’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்து சற்றுத் தொலைவிலுள்ள பகுதிகளில் குண்டுமழை பொழிந்தது ரஷ்யா. ரஷ்யாவின் இந்தச் செயல் சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றிப் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் ஐ.நா-வை அவமதிக்கும் செயல்’’ என்று கொந்தளித்திருக்கிறார். கடந்த சில நாள்களாகத் தலைநகர் கீவ்-வில் தாக்குதல்களை நிறுத்திவைத்திருந்த ரஷ்யா, ஐ.நா பொதுச்செயலாளர் வந்து சென்ற பின்னர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல்களில் ரயில் நிலையங்கள், குடியிருப்புக் கட்டடங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகியிருக்கின்றன.

ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி

உக்ரைனில் ஏஞ்சலினா ஜோலி!

ஐ.நா-வின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்புத் தூதரான ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, கடந்த ஏப்ரல் 30 அன்று, உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அங்கு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களை உற்சாகப்படுத்தியவர், தன்னார்வலர்களிடம் போர் பாதிப்புகள் பற்றி கேட்டறிந்தார். ``லிவிவ் நகரம் முழுவதும் மனநல மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். தினமும் ஒவ்வொரு மருத்துவரும் 15 நபர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்’’ என்று தன்னார்வலர்கள் ஏஞ்சலினாவிடம் தெரிவித்தனர். இது குறித்து ஏஞ்சலினா, ``மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன். யாராவது இந்த மக்களுக்கு ஆறுதல் கூறினால், அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வைத் தரும்’’ என்று கூறியிருக்கிறார்.

கைப்பற்றப்பட்ட மரியுபோல்!

சில தினங்களுக்கு முன்னர், உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலைக் கைப்பற்றியது ரஷ்யா. இதையடுத்து, அங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், மருந்துகள் இல்லாமல் தவித்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. `மரியுபோலிலுள்ள எங்கள் சொந்தங்களை மீட்க வேண்டும்’ என்று தலைநகர் கீவ்-விலுள்ள மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, மே 1-ம் தேதியிலிருந்து அந்நகரிலுள்ள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், மரியுபோலிலுள்ள இரும்பு ஆலை ஒன்றில், சுமார் ஆயிரம் பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ, “இரும்பு ஆலையிலுள்ள மக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும்” என்று ரஷ்ய அதிபர் புதினிடம் நேரில் சென்று வலியுறுத்தியதை அடுத்து, அங்கிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டுவருகின்றனர். கிழக்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் தீவிரத் தாக்குதல் நடத்திவந்த நிலையில், ``நீங்கள் ரஷ்யாவில் அடிமைகளாக வாழ்வதைவிட, நமது மண்ணில் அழிவதே சிறப்பு. கிழக்குப் பகுதியில் தீவிரமாகப் போரிடுங்கள்’’ என்று உக்ரைன் வீரர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி.

70 நாள்களை நெருங்கும் போர்... எப்போது முடிவுக்கு வரும்?

கோஸ்ட் ஆஃப் கீவ் - கட்டுக்கதை!

உக்ரைன் விமானப்படையைச் சேர்ந்த விமானி ஸ்டெபான் தரபல்கா என்பவர், கடந்த மார்ச் 13-ம் தேதி இறந்துவிட்டார் என்ற செய்திகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. போர் தொடங்கிய முதல் நாளிலேயே ரஷ்யாவின் ஆறு போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர் இவர்தான் என்றும், இவரைத்தான் உக்ரைன் ராணுவம் `கோஸ்ட் ஆஃப் கீவ்’ என்று அழைக்கிறது என்றும் ஊடகத்தில் செய்திகள் வெளியாகின. இவர் உயிரிழப்பதற்கு முன்பாக தனி ஆளாக 40 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினார் என்றும் செய்திகள் கசிந்தன. இந்த நிலையில், `` `கோஸ்ட் ஆஃப் கீவ்’ என்பது மக்கள் உருவாக்கிய பெயர். கோஸ்ட் ஆஃப் கீவ் பற்றிய தகவல்களெல்லாம் கட்டுக்கதைகள்’’ என்று தெரிவித்திருக்கிறது உக்ரைன் விமானப்படை!

புலம்பெயர்ந்த 30 சதவிகித மக்கள்!

போர் காரணமாக உக்ரைனிலிருந்து 1.1 கோடி மக்கள் வெளியேறியிருப்பதாக ஐ.நா அறிவித்திருக்கிறது. இதில் சுமார் 50.3 லட்சம் மக்கள் போலந்து, ஹங்கேரி, ரஷ்யா, ருமேனியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்; 60.5 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே பல்வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்திருக்கின்றனர் என்கிறது ஐ.நா. தற்போது வரை உக்ரைன் மக்கள்தொகையில் சுமார் 30 சதவிகிதம் பேர் புலம்பெயர்ந்திருக்கின்றனர். கடந்த சில நாள்களாகப் போர் தீவிரமடைந்திருப்பதால், புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று கவலை தெரிவிக்கின்றனர் சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism