ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் நிறுவனர் ஒலெக் ஒய் டிங்கோவ் (Oleg Y Tinkov). உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை விமர்சிக்கும் வகையில் தனது சமுக வலைதளங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ரஷ்யா 'பைத்திக்காரத்தனமாக' உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது என்பது போல் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ரஷ்ய அரசிடமிருந்து தனக்கு நிறைய மிரட்டல் வந்ததாகவும் தனக்குச் சொந்தமான வங்கியை தேசியமயமாக்குவதாக அதிகாரிகள் பலர் தன்னை அச்சுறுத்தியதாகவும் கூறினார்.
இதனால் அச்சம் அடைந்த டிங்கோவ் மிகவும் மலிவான விலைக்கு தனது வங்கியின் 35% பங்குகளை ஒரு ரஷ்ய சுரங்க அதிபருக்கு விற்றுள்ளார். அதைத் தொடர்ந்து ரஷ்ய பாதுகாப்பு அமைப்பில் உள்ள இவரது நெருங்கிய நண்பர்கள் இவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ளனர். இதையடுத்து தான் தங்கியிருந்த நகரிலிருந்து தப்பி ஓடி தற்போது தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து, தன் இருப்பிடத்தைக் குறிப்பிடாமல் 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்தான் இவற்றை எல்லாம் தெரிவித்திருக்கிறார்.
