உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரைத் தொடங்கியது. பலகட்ட பேச்சுவார்த்தை நடவடிக்கைகள், உலக நாடுகளின் கண்டனம் என எதுவும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. அதனால் உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளிடம் அடைக்கலம் தேடிவருகின்றனர். மேலும், இந்தப் போரால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்திருக்கின்றனர். இந்த நிலையில், அகதிகளின் குழந்தைகளுக்காக, ரஷ்யப் பத்திரிகையாளர் ஒருவர் தனது நோபல் பரிசை 103.5 மில்லியன் டாலருக்கு விற்றிருக்கிறார்.

பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ் ரஷ்யாவின் நோவயா கெஸெட்டா என்ற ரஷ்யப் பத்திரிகையின் ஆசிரியர். 2021-ல் "கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்காக" பிலிப்பைன்ஸின் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவுடன் இணைந்து நோபல் பரிசை வென்றிருந்தார். அந்த நோபல் பரிசைத்தான் அவர் விற்பதற்கு முடிவு செய்தார். இவரின் முடிவை, அமைதிக்கான நோபல் பரிசுகளை வழங்கும் நார்வே நோபல் நிறுவனத்தின் இயக்குநர் ஓலாவ் நஜோல்ஸ்டாட்- விடம் கூறியபோது, பதக்கத்தை விற்பதற்கு ஒப்புதல் அளித்து, "பத்திரிக்கையாளரின் தாராள மனிதாபிமானச் செயலை பாராட்டுகிறேன்" எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதைத் தொடர்ந்து, இந்த நோபல் பரிசை ஏலத்தில் விற்பதற்கு ஹெரிடேஜ் எனும் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. நியூயார்க்கில் நடந்த இந்த ஏல விற்பனையில், இதுவரை அடையாளம் காணப்படாத தொலைபேசி ஏலதாரர் ஒருவர் இந்த நோபல் பரிசை 103.5 மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறார். நோபல் பரிசை விற்ற தொகை முழுவதும், ரஷ்யாவின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக, குழந்தைகளுக்கு உதவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான UNICEF-க்கு பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ் வழங்கியிருக்கிறார்.

இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த நோபல் அமைதிப் பதக்கம் இது. இதற்கு முன்னதாக சாதனை DNA-வைக் கண்டறிய உதவிய அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சனுக்கு 1962-ம் ஆண்டு வழங்கப்பட்ட பதக்கம் 2014 -ல் 4.76 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.