Published:Updated:

`அவர் நவீன உலகின் சிக்கலை புரிந்துகொள்ளவேயில்லை!’ - கிரேட்டாவை விமர்சித்த புதின்

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கின் செயல் மற்றும் கருத்துகளை, விமர்சித்து ரஷ்ய அதிபர் புதின் பேசியுள்ளார்.

Greta Thunberg - Vladimir Putin
Greta Thunberg - Vladimir Putin

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி, காலநிலை மாற்றத்தின் அவசரத்தை மொத்த உலகத்துக்கும் உணர்த்தி, அதற்காக அனைத்து இளைஞர்களையும் வீதிகளில் இறங்கி போராட வைத்துள்ளார். தனி ஆளாக போராட தொடங்கிய கிரேட்டா தன்பெர்க் பின்னால் தற்போது பல மில்லியன் மக்கள் உள்ளனர். சமீபத்தில் அவர் ஐ.நா கூட்டத்தில் பேசிய உரை உலக கவனம் பெற்றது.

Greta Thunberg
Greta Thunberg
AP

``நீங்கள் (உலகத் தலைவர்கள்) என் கனவைத் திருடிவிட்டீர்கள். உங்கள் வெற்று வார்த்தைகளால் என் குழந்தைப் பருவம் காலியாக உள்ளது. மக்கள் துன்பத்தில் உள்ளனர், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்து மடிந்து வருகின்றனர். ஆனால், நீங்கள் பணம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கற்பனை கதைகளைப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என மிகுந்த ஆவேசத்துடன் பேசியிருந்தார்.

`மில்லியன் மாணவர்களின் குரல்!’ - அதிரவைக்கும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் #fridaysforfuture

கிரேட்டாவின் பேச்சைப் பலரும் பாராட்டி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கிரேட்டாவை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுதான் புதின் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

Greta Thunberg
Greta Thunberg
AP

``கிரேட்டா தன்பெர்க்கின் ஐ.நா பேச்சு பற்றிய பொதுவான உற்சாகத்தை நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நவீன உலகம் மிகவும் சிக்கலானது, மாறுபட்டது என யாரும் கிரேட்டாவுக்குக் கூறவில்லை. ஆப்பிரிக்கா மற்றும் பல ஆசிய நாடுகளில் உள்ள மக்கள், ஸ்வீடனைப் போன்ற செல்வ வளம் மிக்க நாடுகளில் வாழ விரும்புகின்றனர்.

`உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ -  ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளில் இளைஞர்கள் கவனம் செலுத்துவது மிகவும் சிறந்த விஷயம், ஆனால், சிலர் தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கான இளைஞர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. கிரேட்டாவும் சில அமைப்புகளின் சொந்த தேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறாரோ எனத் தோன்றுகிறது.

Vladimir Putin
Vladimir Putin

கிரேட்டா ஒரு கனிவான மற்றும் மிகவும் நேர்மையான பெண் என நான் நம்புகிறேன். ஆனால், இளைஞர்களை சில தீவிர சூழ்நிலைகளுக்குள் கொண்டுவராமல் பெரியவர்களே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். கிரேட்டா, உங்கள் கருத்தை வளரும் நாடுகளிடம் போய்ச் சொல்லுங்கள். ஸ்வீடனைப் போல் இல்லாமல் ஏன் இன்னும் வறுமையிலேயே உள்ளீர்கள் எனக் கேளுங்கள்” எனச் சற்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.