உக்ரைன் - ரஷ்யா இடையே தொடர்ந்து வரும் யுத்தம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய வீரர்கள் 498 பேர் போரில் பலியாகியிருப்பதாகவும், 2,000 உக்ரைன் வீரர்கள் இறந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
அதேபோல, நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``6 நாள்களாக நடந்து வரும் போரில் இதுவரை 6,000 ரஷ்ய வீரர்கள் உக்ரைன் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்" எனக் கூறியிருந்தார்.
உக்ரைனில் நடந்து வரும் கோரத்தாக்குதலால் உக்ரைன் நாட்டு மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் மக்களிடம் சரணடைந்தார். அவருக்கு உக்ரைனிய மக்கள் குடிக்க டீ கொடுத்தும், உண்ண உணவு கொடுத்து அவரை ஆறுதல்படுத்தினர்.
மேலும், அவருடைய தாயாரை வீடியோவில் அழைத்துப் பேசச் செய்துள்ளனர். அவரும் தன் மகனுக்கு எல்லாம் சரியாகி விடும் மகனே என ஆறுதல் கூறுகிறார். இதைக் கண்ட அந்த ராணுவ வீரர் உடைந்து அழும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
