Published:Updated:

`சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்ததற்கு சல்யூட்’ - இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு

ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ்
ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ்

மனிதாபிமான முறையில் மாத்திரைத் தடைகளை நீக்கிப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இந்தியாவின் செயலை ஐ.நா வெகுவாகப் பாராட்டியுள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,40,539 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,60,896 - ஆகவும் உள்ளது. சீனாவின் வுகான் நகரில் இந்த வைரஸ் முதன்முதலாக உறுதிசெய்யப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் இதைக் கட்டுப்படுத்த முறையான மருந்தோ அல்லது தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா டெஸ்ட்
கொரோனா டெஸ்ட்

அதனால் தங்கள் நாட்டு மருத்துவத்துறையினர் கூறும் மருந்துகளையே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். பாராசிட்டாமல் மாத்திரைகள், மலேரியா மாத்திரைகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் போன்ற பல மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளன. அதிலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துத் துறை இந்த மாத்திரைகள் கொரோனாவைக் கட்டுப்படுத்திக் குணப்படுத்துவதாக அங்கீகரித்துள்ளன. அதனால் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இந்த மாத்திரைகள்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளின் உற்பத்தி மிக அதிகமாக உள்ளது. எனவே இங்கிருந்து மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு அது அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் பிற நாட்டினருக்கு மாத்திரைகள் கொடுத்து உதவும் இந்தியாவின் செயலை ஐ.நா வெகுவாகப் பாராட்டியுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் பேசியதாவது, ‘கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் மனித நேய அடிப்படையில் பிற நாடுகளுக்கு உதவி வருகின்றன. அவர்களுக்கு நாங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை

இந்த விஷயத்தில் இந்தியாவின் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. உலக நாடுகளின் நிலையை அறிந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுக்கு இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் எங்கள் சல்யூட். இதேபோல் மற்ற நாடுகளும் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மனிதாபிமான முறையில் உதவி செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு