Published:Updated:

நைஜீரியா: மக்களைக் கொன்று குவிக்கிறதா காவல்துறை?! - மருத்துவக் கல்லூரிகளில் குவியும் மனித உடல்கள்

என்ன நடக்கிறது நைஜீரியாவில்?
என்ன நடக்கிறது நைஜீரியாவில்?

நைஜீரியாவில் காவல்துறை அமைப்பான சார்ஸ்-ன் தலைமையில் அப்பாவிப் பொதுமக்கள் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டு கொல்லப்படுவதாகவும், அவர்களது உடல்கள் சட்டவிரோதமாக மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுவருவதாகவும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதலால் உயிரிழக்கும் எண்ணிக்கையைவிடவும், நைஜீரிய காவல்துறையின் அமைப்பான (SARS) சார்ஸ்-ன் அடக்குமுறைத் தாக்குதல்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் கடந்த சில வருடங்களாக, சார்ஸ் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நைஜீரிய மக்கள் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

SARS காவல்துறை அமைப்பு

நைஜீரியாவில் 1992-ல் கொள்ளை, வாகனத் திருட்டு, கடத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பயன்பாடு உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு நைஜீரிய அரசின் முன்னெடுப்பின் பேரில் காவல்துறையினால் சார்ஸ் பிரிவு (The Special Anti-Robbery Squad) உருவாக்கப்பட்டது. நாட்டில் கொள்ளைச் சம்பவங்களைக் குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட சார்ஸ் அமைப்பு, நாளடைவில் பொதுமக்களைத் துன்புறுத்தும் மக்கள் விரோத அமைப்பாக உருவெடுத்தது. ஆட்சியாளர்கள் சார்ஸ் அமைப்பின் மீதான கட்டுப்பாடுகள், வரைமுறைகளைத் தளர்த்தி உதவியதால் அந்த அமைப்பு குற்றங்களைக் குறைக்கிறோம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள்மீது பொய் வழக்குகள் பதிந்து, சிறைச்சாலைகளில் அடைத்துத் துன்புறுத்தி, சித்ரவதை செய்தது.

மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறைப் பிரிவின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து, கடந்த பல வருடங்களாக நைஜீரிய மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர். அதன் விளைவாக, கடந்த ஆண்டு சார்ஸ் அமைப்பைத் தடை செய்வதாக நைஜீரிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்ட போதிலும், தற்போது வரையிலும் அந்த அமைப்பின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்துவருகிறது.

SARS
SARS

மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுபவர்களைக் குறிவைத்து, குற்ற வழக்குகளில் கைதுசெய்யும் சார்ஸ் அமைப்பு அவர்களை அடித்துத் துன்புறுத்தி, சட்டத்துக்குப் புறம்பாகத் தூக்கிலிடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது எனப் பொதுமக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நைஜீரிய காவல்துறையினரின் அராஜகமான, மிருகத்தனமான மக்கள் விரோதப் போக்கு தொடர்பாக இங்கிலாந்தைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் 2010-ம் ஆண்டு முதல் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.

அந்த நிறுவனத்தின் ஆய்வில், நைஜீரிய காவல்படை மற்றும் சார்ஸ் அமைப்பின் மூலம் ஒவ்வொரு வருடமும் 500-க்கும் மேற்பட்டோர் சட்டத்துக்குப் புறம்பான மரண தண்டனை மூலம் கொல்லப்பட்டுவருவதும், மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்போர் தொடர்ச்சியாக மாயமாகிவருவதும் தெரியவந்தது.

சார்ஸ்
சார்ஸ்

அதேபோல், நைஜீரிய காவல்படையாலும், சார்ஸ் அமைப்பினராலும் கைதுசெய்யப்படும் அப்பாவி மக்கள் சிறைச்சாலைகளில் கொடுமைப்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுவருவதாகவும், அவர்களின் உடல்கள் சட்டவிரோதமாக நைஜீரிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் உடற்கூறாய்வு பயிற்சிக்காக வழங்கப்பட்டுவருவதாகவும் ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

மருத்துவக் கல்லூரிகளும், மனித உடல்களும்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதன் காரணமாக, ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் புதிதாக நைஜீரியாவில் கட்டப்பட்டிருக்கின்றன. அதிக அளவிலான மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதால் நைஜீரியாவில் மருத்துவத்துறைக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அதன் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளில் மனித உடல்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தட்டுப்பாட்டுக்கு நைஜீரிய மக்களின் மதமும் சம்பிரதாய வழக்கங்களும் காரணம் என்று சொல்லலாம்.

ஏனென்றால், நைஜீரியாவில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெரும்பாலும் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லாமல் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே புதைத்துவிடுவார்கள். நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் யாராவது உயிரிழந்துவிட்டால்கூட அவர்களின் உடல்கள் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு முறையாக அடக்கம் செய்யப்பட்டுவிடும். அதன் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளில் மனித உடல்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

உடல்
உடல்

ஆய்வும் சர்ச்சையும்!

நைஜீரியாவில் காவல்துறை அமைப்பான சார்ஸ்-ன் தலைமையில் அப்பாவிப் பொதுமக்கள் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டு கொல்லப்படுவதாகவும், அவர்களது உடல்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுவருவதாகவும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருவதால், ஆம்னஸ்டி நிறுவனத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் பலவும் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் இறங்கின. அந்த வகையில் நைஜீரியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நைஜீரியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பணியின்போது, நைஜீரியாவின் கலாபார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ மாணவர் ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, உடற்கூறாய்வு வகுப்பு ஒன்றின்போது மருத்துவப் பயிற்சிக்குக் கொண்டுவரப்பட்ட உடல்களில் தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் உடல் இருந்ததைக் கண்டு தான் அதிர்ந்துபோய்விட்டதாகக் கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக, பிரபல செய்தி நிறுவனமான பிபிசி-க்கு கலாபார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ மாணவர் என்யா எக்பே அளித்துள்ள பேட்டியில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவின் கலாபார் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவராக என்யா எக்பே இருந்தபோது உடற்கூறாய்வு வகுப்புக்காகத் தனது சக நண்பர்களுடன் பயிற்சி அறைக்குச் சென்றதாகவும், அங்கு மேஜையின் மீது உட்கூறாய்வு பயிற்சிக்கு வைக்கப்பட்டிருந்த உடல்களில் தனது நெருங்கிய நண்பரான டிவைன் என்பவரின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் என்யா எக்பே கூறியிருக்கிறார்.

தொடர்ந்து, தனது நெருங்கிய நண்பரின் உடலில், மார்புப் பகுதியில் இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மனம் நொந்து அங்கிருந்து அழுதபடி வேகமாக வெளியேறியதாகவும் கூறியிருக்கிறார். ஏழு வருடங்களாக நெருங்கிப் பழகிய தனது நண்பரின் உடல் மட்டுமன்றி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில், ஏராளமான அப்பாவி இளைஞர்களின் உடல்கள் அங்கிருந்ததாகவும் என்யா எக்பே தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, உயிரிழந்த தனது நண்பர் டிவைனின் பெற்றோருக்குத் தான் தகவல் தெரிவித்ததாகவும், அதற்குப் பிறகு டிவைனின் பெற்றோர் பல்வேறு காவல் நிலையங்களுக்கு ஏறி இறங்கி, பல சிக்கல்களுக்குப் பிறகு தங்களது மகன் டிவைனின் உடலை மீட்டு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்ததாகவும் என்யா எக்பே கூறியிருக்கிறார்.

என்யா எக்பே
என்யா எக்பே

மருத்துவக் கல்லூரியில் அடிக்கடி ரத்தக்கறை படிந்த காவல்துறை வாகனங்களில் ஏராளமான மனித உடல்கள் சட்டவிரோதமாக இறக்கப்பட்டுவந்ததாகவும் எக்பேயும் அவருடன் படித்த பல மாணவர்களும் கூறியிருக்கின்றனர். என்யா எக்பே ஏழு வருடங்களுக்கு முன்பு தனது நண்பரின் உடலை உடற்கூறாய்வு மையத்தில் பார்த்ததால் மன உளைச்சலில் சுமார் ஒரு வருட காலம் கல்லூரிக்குச் செல்லாமல் இருந்ததாகவும், பின்னர் ஒருவழியாகப் படித்துத் தேறி இன்று ஒரு தனியார் ஆய்வு மையத்தில் மருத்துவராகப் பணி புரிந்துவருவதாகவும் செய்தி நிறுவனத்தின் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதன் மூலம், நைஜீரியாவில் சட்டவிரோதமாக மனித உடல்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு காவல்துறையினரால் வழங்கப்பட்டுவருவது உறுதியாகியிருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் நைஜீரிய அரசைச் சாடிவருகின்றனர். நைஜீரியாவில், அரசுப் பிணவறைகளில் உரிமை கோரப்படாத உடல்களை மட்டுமே மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், சார்ஸ் மற்றும் நைஜீரிய காவல்துறையினர் அப்பாவிப் பொதுமக்களைக் காரணமில்லாமல் கைதுசெய்து, கொலை செய்துவிட்டு அவர்களின் உடல்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கிவருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நைஜீரியா: சுற்றி வளைத்து தாக்கிய எதிரிகள்.. போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் தற்கொலை!

ஏற்கெனவே, நைஜீரிய காவல்துறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளையில், மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்யா எக்பேவின் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

- குயின்ஸி வில்ஃபிரடா / யோகேஸ்வரி.அ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு