Published:Updated:

`பெண்களுக்கு இனி யார் அனுமதியும் தேவையில்லை!' - சவுதி இளவரசர் அதிரடி உத்தரவு

'ஆண்களின் அனுமதி இல்லாமல், சவுதி அரேபியப் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லலாம்' என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சவுதி பெண்கள்
சவுதி பெண்கள்

சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக, மன்னர் சல்மானின் இளைய மகனான முகமது பின் சல்மான், சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார் . இவர், இளவரசராகப் பதவியேற்ற பின், அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அதன்படி, பெண்கள் கார் ஓட்ட அனுமதி, சவுதியில் திரையரங்கம், விண்வெளித் திட்டம் போன்றவை அதிரடியாகச் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

சவுதி பாஸ்போர்ட்
சவுதி பாஸ்போர்ட்
wikipedia

அந்த வரிசையில் தற்போது, ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் தனியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, வெளிநாடு செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், பல வருடங்களாக இருந்த நடைமுறை உடைக்கப்பட்டு, உலக நாடுகளின் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சவுதி அரேபியா. அந்த நாட்டுப் பிரஜையாக உள்ள 21 வயது நிறைந்த எந்த ஒரு பெண்ணும், யாரின் அனுமதியும் இன்றி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்து, அரசு இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை அங்குள்ள பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அங்குள்ள பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், அவரின் தந்தை, பாதுகாவலர் அல்லது கணவர் ஆகியோர் அனுமதித்தால் மட்டுமே முடியும். பாஸ்போர்ட் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றாலும் இதே நடைமுறைதான். ’சவுதிப் பெண்கள், வாழ்நாள் முழுவதும் சுதந்திரம் இல்லாமலே வாழ்கிறார்கள், அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ என அந்நாட்டுப் பெண்கள் அமைப்பு 10 வருடங்களுக்கும் மேலாகப் போராடிவந்தது. அதன் பலனாகவே, தற்போது இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் முகமது பின் சல்மான்
இளவரசர் முகமது பின் சல்மான்

சவுதி மன்னரின் இந்த முடிவுக்கு, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருந்தும் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பர்ய நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்க்கப்பட்டுவருவதாக, மற்றொரு புறம் விமர்சனங்களும் எழுந்துள்ளன.