Published:Updated:

`பித்தப்பை அழற்சி’ - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுதி அரேபியா மன்னர்

சவுதி மன்னர்
சவுதி மன்னர்

சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் உடல்நிலை கோளாறு காரணமாக ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியா அரசை நிறுவிய கிங் அப்துலாசிஸ் பின் அப்துல் ரஹ்மானின் மகன் சல்மான் பின் அப்துல் அஜிஸ். 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி ரியாத்தில் பிறந்த இவர் தன் 19-வது வயதில் ரியாத் பிராந்தியத்துக்கு செயல் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டே அதே ரியாத் நகரின் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ரியாத் பிராந்தியத்தின் கவர்னராக செயல்பட்ட பெருமை கொண்டவர் சல்மான் பின் அஜிஸ்.

சவுதி மன்னர்
சவுதி மன்னர்

இதனையடுத்து இரண்டரை வருடங்கள் பட்டத்து இளவரசராகப் பணியாற்றிய பின் அஜிஸ், தன் சகோதரரின் மரணத்துக்குப் பிறகு அதாவது, 2015-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவின் மன்னராகப் பதவியேற்றார். அப்போது முதல் சவுதியின் மன்னராக இருந்து வரும் இவருக்கு திடீரென உடல்நிலை கோளாறு ஏற்பட்டதாகவும் பித்தப்பை அழற்சி காரணமாக ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ராயல் நீதிமன்றம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

`150 பேருக்கு வைரஸ் பாசிடிவ்; தனித் தீவில் மன்னர்!' -சவுதி அரசக்குடும்பத்தைச் சுற்றும் கொரோனா?

மருத்துவமனையில் மன்னருக்கு மேலும் பல சோதனைகள் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய அரசக்குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதைப் பற்றி வெளியில் சொல்வது மிகவும் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது மன்னருக்கு உடல்நிலை கோளாறு இருப்பதை அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளனர். இதனால் மொத்த சவுதி அரேபியாவும் கலக்கத்தில் உள்ளது.

சவுதி மன்னர்
சவுதி மன்னர்

மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இராக் பிரதமரின் ரியாத் பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. “மிகவும் முக்கியமான வருகை மற்றும் அதை வெற்றிபெறச் செய்வதற்கான விருப்பத்தை அங்கீகரிக்கும்விதமாக இராக்கில் உள்ள எங்கள் சகோதரர்களுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவில் எங்கள் தலைமை இந்தப் பயணத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது” என்று சவுதி வெளியுறவுத்துறை அமைச்சரும் இளவரசருமான பைசல் பின் ஃபர்ஹான் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அரச பிடியை இறுக்கும் பின் சல்மான்; மன்னரின் சகோதரர் கைது? - சவுதி இளவரசரைச் சுற்றும் புதிய சர்ச்சை
அடுத்த கட்டுரைக்கு