Published:Updated:

`வெட்டப்பட்ட விரல்கள்; அமிலத்தில் கரைக்கப்பட்ட உடல்!’- கஷோகி கொலையில் சவுதியின் தீர்ப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி

சவுதி அரச குடும்பத்தில் இளவரசருக்கு எதிரானவர்களுடன் ஜமாலுக்கு நல்ல நெருக்கம் இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`பலிகொடுக்கும் விலங்கு வருகிறது’ - பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மரணம் தொடர்பான ஐ.நா விசாரணை ஆணையத்தில் அக்டோபர் 2, 2019-ல் துருக்கி அரசு சமர்ப்பித்த 45 நிமிட ஆடியோ டேப்பில் இருந்த அந்த வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரான ஜமால் கஷோகி, சவுதி மன்னர் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். சவூதியில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததை உணர்ந்த ஜமால், அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சர்வாதிகாரப் போக்கைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். சவுதி அரச குடும்பத்தில் இளவரசருக்கு எதிரானவர்களுடன் ஜமாலுக்கு நல்ல நெருக்கம் இருந்தது.

தூதரகத்துக்குள் கஷோகி செல்லும் காட்சி
தூதரகத்துக்குள் கஷோகி செல்லும் காட்சி

இந்நிலையில் அக்டோபர் 2-ம் தேதி 2018-ல் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருக்கும் சவுதி தூதரகத்துக்குத் தன் திருமணம் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காகச் சென்றார். அவருடைய வருங்கால மனைவியான ஹேட்டிஸ் சென்ஜியும் உடன் சென்றிருந்தார். கஷோகி மட்டும் தூதரகத்துக்குள் செல்ல சென்ஜி வெளியில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் கஷோகி வெளியில் வராததால், சென்ஜி உள்ளே சென்று விசாரித்தார். கஷோகி சென்று வெகுநேரமாகிவிட்டது என்ற பதிலே அவருக்குக் கிடைத்தது.

கஷோகி வெளியில் வரவில்லை உள்ளேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரைக் காணவில்லை என்றுதான் முதலில் சொல்லப்பட்டது. கஷோகி கொல்லப்பட்டதாக துருக்கி அரசு அறிவித்த பின்னரே, இந்த விவகாரம் பூதாகரமானது. கஷோகியின் கொலையில் சவுதி அரசுக்குத் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. கஷோகி கொலைக்கு சவுதி இளவரசர் சல்மான்தான் காரணம் எனத் திட்டவட்டமாகக் கூறிய துருக்கி அரசு, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது.

சவுதி இளவரசர்
சவுதி இளவரசர்

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ரகசியப் பாதுகாவலர்கள் `கஷோகியைக் கொலை செய்து அவரது உடலை சூட்கேஸில் அடைத்து வைத்தனர்' எனத் துருக்கி வெளியிட்ட ஆதாரங்கள் சொல்லின. கஷோகி கொலைசெய்யப்பட்டதும் அவரது விரல்கள் இளவரசருக்குப் பரிசளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆரம்பத்தில் கஷோகி கொலை செய்யப்பட்டதை சவுதி அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பத்திரிகையாளர் கஷோகி கொலையில் எனது பங்கு என்ன?' - முதல்முறையாக மௌனம் கலைத்த சவுதி இளவரசர் சல்மான்

ஐ.நா விசாரணை உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில்தான் கொல்லப்பட்டார் என்பதை சவுதி அரசு ஒப்புக்கொண்டது. தூதரக அதிகாரிகளுக்கும் கஷோகிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்ததாக விளக்கம் சொல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் நீண்டநாள்களாக மௌனம் காத்து வந்த சவுதி இளவரசர் சல்மான், துருக்கியின் குற்றச்சாட்டை மறுத்ததோடு கஷோகி கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

போராட்டம்
போராட்டம்

கஷோகி மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது ஐ.நா விசாரணை ஆணையத்தில் துருக்கி அரசு சமர்ப்பித்த 45 நிமிட ஆடியோ மூலம் தெரியவருகிறது. தூதரகத்துக்குள் நுழைந்ததும் அங்கே நடக்கப்போகும் விபரீதங்களை கஷோகியும் உணர்ந்துள்ளார்.

துருக்கி சமர்ப்பித்த ஆடியோவில், `பலி கொடுக்கப்படும் விலங்கு வருகிறது' என கஷோகியைப் பார்த்து சிலர் கேலி செய்வது பதிவாகியுள்ளது. `எனக்கு ஏதேனும் ஊசி போடப்போகிறீர்களா?' என கஷோகி குரல் கேட்கிறது. `ஆம்' என்ற பதில் வருகிறது. சில நிமிடங்களில் ஒருவர் மூச்சு விடவே திணறும் சத்தம் கேட்கிறது. உடல் மற்றும் இடுப்புப் பகுதி இந்த பைக்குள் நுழையாது எனச் சிலர் பேசிக்கொள்கின்றனர். இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி

சவுதி அமைச்சரவையில் உயர்மட்ட பதவியில் இருக்கும் 11 பேர் ஜமால் கஷோகி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளதாக சவுதி அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு விவரம் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். இளவரசரின் உயர் ஆலோசனைக் குழுவில் இருந்த ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு