Published:Updated:

`134 மரண தண்டனைகள்; சவுதி அரேபியாவின் மனித உரிமை மீறல்!' - அதிர்ச்சி தரும் ஐ.நா அறிக்கை

சவுதி அரேபியாவில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது சாதாரண நிகழ்வு.

executions
executions

உலகில் மிகக் கடுமையான சட்ட திட்டங்களை உடைய நாடு சவுதி அரேபியா. அங்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது சாதாரண நிகழ்வு.

executions
executions

சவுதியின் தண்டனை முறை பற்றிப் பல மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், அந்நாட்டின் இளவரசர் முஹமத் பின் சல்மான், தங்கள் நாட்டில் மரண தண்டனையின் எண்ணிக்கை நிச்சயம் குறைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால், சமீபத்தில் ஜெனிவாவில் வெளியிடப்பட்ட ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை, அந்நாட்டு இளவரசரின் உறுதிமொழிக்கு எதிராக அமைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இந்தாண்டில் மட்டும் சுமார் 134 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 சிறுவர்களும் அடக்கம். மேற்கொண்டு 24 பேருக்கு கூடிய விரைவில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த வகையில் 3 சிறுவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் இதில் அடக்கம்.

executions
executions

உலகம் முழுவதும் அதிகரித்துவரும் குற்றமாக கருதப்படும் போதை மருந்தை உபயோகித்ததற்காக 3 பெண்கள் உள்ளிட்ட 51 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 58 பேர் சவுதி அரேபியாவின் மிக முக்கிய குற்றங்களில் ஒன்றான ஷியா பிரிவு இஸ்லாமியத்தை பரப்பியதாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதில் 21 பாகிஸ்தானியர்கள், 15 ஏமன்காரர்கள், 5 சிரியா நாட்டவர், 4 எகிப்தியர்கள், இரண்டு ஜோர்டான் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு சோமாலியர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், கொல்லப்பட்ட இருவர் எந்த நாட்டினர் என்றே அறியப்படவில்லை.

கடந்த ஏப்ரல் 22-ல் அந்நாட்டில் மிகப்பெரிய தண்டனை வழங்கும் நிகழ்வு ஒன்று நடந்தேறியது. அன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதினெட்டு வயது குறைவானவர்களுக்கு மரண தண்டனை என்பது கூடாது என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், அன்று கொல்லப்பட்ட 37 பேர்களில் ஒருவரான முஜ்டபா –அல் சுவேகட்டுக்கு (Mujtaba al-Sweikat) வயது 17. அவர் அமெரிக்காவின் மிசிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது படிப்பைத் தொடங்க இருந்த நேரத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தார் எனக் கூறி தண்டிக்கப்பட்டார்.

Prince Mohammed bin Salman
Prince Mohammed bin Salman

இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான தண்டனையும் இளவரசர் பின் சல்மான் 2018-ல் டைம் இதழுக்குத் தண்டனைகள் குறைக்கப்படும் என்று பேட்டி கொடுத்த பிறகுதான் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பேட்டியில், ``நிச்சயமாக இந்தத் தண்டனைமுறை மாற்றப்படும். எங்கள் நாட்டில் புதிய சட்டங்களை அமல்படுத்துவதற்காக கடந்த இரண்டாண்டுகளாக பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நூறு சதவிகிதம் இல்லையென்றாலும் முடிந்தவரை தண்டனை எண்ணிக்கையைக் குறைப்போம்” என்று கூறியிருந்தார்.

Photo & News Credit: The Sun