செங்கடல் என்பது ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்திருக்கிறது. இந்த செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர்.
கடலுக்கு அடியில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் தானியங்கி எந்திரத்தின் மூலம் 10 மணி நேரமாக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு ஆய்வின் இறுதியில் கடலுக்கு அடியில் 1.1 கிலோமீட்டர் ஆழத்தில் 1 லட்சம் சதுர பரப்பளவில் வித்தியாசமான ஒரு பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அப்பகுதியில் ஆக்சிஜன் வாயு கிடையாது என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்திருக்கிறது. மேலும், அந்த பகுதி முழுவதும் அதிக அளவிலான உப்புத்தன்மை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடலின் பிற பகுதிகளில் உள்ள உப்பின் அளவை விட 3 முதல் 8 மடங்கு இந்தப் பகுதியில் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதாகவும், அதுமட்டுமின்றி இந்தப் பகுதி முழுவதும் ஹைட்ரஜன் சல்பைட் என்ற விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும், இந்த பகுதிக்குள் மீன்கள் உட்பட உயிருடன் செல்லும் எந்த ஒரு உயிரினமும் உடனடியாக உயிரிழந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் நீரில் விஷத்தன்மை கொண்ட கொடிய வேதிப்பொருள் கலந்துள்ளதால் அங்கு நுழையும் உயிரினங்கள் நிச்சயம் உயிரிழந்துவிடும் அல்லது அங்கு நுழையும் உயிரினங்கள் உடனடியாக மயக்கமடைந்து பின் உயிரிழக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உயிருடன் செல்லும் எந்த உயிரினத்திற்கும் இப்பகுதி மரணத்தை ஏற்படுத்தும் இந்தப் பகுதியை கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்நிகழ்வு கடல்சார் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.