Published:Updated:

`எதிர்த்தால் துப்பாக்கியால் சுடுகிறார்கள்!'- கடல் கொள்ளையர்களால் கலங்கும் தமிழக மீனவர்கள்

மீனவர்களின் விசைப்படகு
மீனவர்களின் விசைப்படகு ( மாதிரி படம் )

மீனவர்கள் பிடித்துவைத்திருக்கும் மீன்களைப் பறிப்பது, மீன்பிடி உபகரணங்களை எடுத்துச்செல்வது என கடல் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் கைதேர்ந்தவர்கள். ஒரு மாதத்திற்கும் மேல் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் திறமை மிக்கவர்கள் என்பதால், பல்வேறு நாடுகளுக்குச் சென்று தங்கி மீன்பிடித் தொழில் செய்துவருகினறனர். வெளி நாடுகளில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள், கடல் கொள்ளையர்களால் மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, சர்வதேச அளவில் கடற்படை ஏற்படுத்தி, கடல் கொள்ளையர்களை அடக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா சபையிலும் குரல் கொடுத்துள்ளார், சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணி.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நம் மீனவர்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளான கத்தார், சவுதி, ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர்.

ஜஸ்டின் ஆன்றணி
ஜஸ்டின் ஆன்றணி

அந்த நாடுகளில் உள்ள முதலாளிகளுக்காக, அவர்களின் படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது, கடல் கொள்ளையர்கள் திடீரென வந்து தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களைப் பறிப்பது, மீன்பிடி உபகரணங்களை எடுத்துச்செல்வது என அட்டகாசம் செய்கிறார்கள்.

ஒருவேளை, கடற்கொள்ளையர்களை மீனவர்கள் எதிர்த்தால், உடனே துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தாமஸ் கிளேட்டஸ், மதிவளன், அனிஷ் ஆகிய மீனவர்கள் பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார் நாடுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில், குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த கப்பல் அதிகாரிகளை கடற்கொள்ளையர்கள் சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.

படகுகள்
படகுகள்

கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துவருவது, எதிர்காலத்தில் பெரும் ஆபத்தாக முடியும். எனவே, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச கடல் பகுதியில் அத்துமீறும் கடல் கொள்ளையர்களைத் தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, சர்வதேச கடல் படையை உருவாக்க வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன்.

கடந்த டிசம்பர் மாதம், ஐ.நா சபையில் அதிகாரிகள் மத்தியில் இதுகுறித்து பேச வாய்ப்பு கிடைத்தது. இதுசம்பந்தமாக தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர். எனது கருத்தை உலகின் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஆதரித்தனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு