Published:Updated:

`மரபுக்கும் மனிதநேயத்துக்கும் இடையிலான போராட்டம்’ - பாராட்டுகளைக் குவித்த சீக்கிய மருத்துவர்கள்

மருத்துவர் சஞ்சீத் சிங்
மருத்துவர் சஞ்சீத் சிங்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தங்கள் மரபை மீறி தாடியை எடுத்துள்ளனர் சீக்கிய மருத்துவர்கள்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடினமான நேரத்தில் உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்கள் தங்களின் பல்வேறு சுக, துக்கங்கள், குடும்பங்களை மறந்து இரவுபகலாக கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கப் போராடி வருகின்றனர். இவர்களின் வரிசையில் கனடாவைச் சேர்ந்த சில சீக்கிய மருத்துவர்கள் தங்கள் வழக்கத்துக்கு மாறாகத் தாடியை எடுத்துள்ளனர்.

சீக்கியர்கள்
சீக்கியர்கள்
மாதிரிப் புகைபடம்

தங்கள் நம்பிக்கைக்கும் மனிதநேயத்துக்கும் இடையிலான போராட்டத்தில் அவர்கள் மனிதநேயத்துக்கு முன்னுரிமை வழங்கி தங்கள் தாடியை எடுத்துள்ளனர். சீக்கிய மதத்தில் தலைப்பாகை அணிவது, உடை, வெண்கலக் கையணி போன்றவையுடன் இயற்கையாக வளரும் முடியை வெட்டக்கூடாது என்பதும் ஒரு மரபு. ஆனால் கனட சீக்கிய மருத்துவர்கள், தங்களுக்கு இருக்கும் தாடியால் கொரோனா போரில் முன்னணியில் நின்று வேலை செய்ய முடியவில்லை என்பதற்காக இதைச் செய்துள்ளனர்.

Vikatan

மெக்கில் பல்கலைக்கழக சுகாதார மையத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவரான சஞ்சீத் சிங் மற்றும் அவரது சகோதரரும் அதே மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராகப் பணி புரியும் ராஜீத் சிங்கும், இதுபற்றிக் கூறும்போது, “நாங்கள் எடுத்தது மிகவும் கடினமான முடிவுதான். ஆனால் இந்த நேரத்தில் இது மிகவும் தேவை என நாங்கள் கருதுகிறோம். எங்களுக்கு இருக்கும் தாடியால், முகமூடி கொண்டு முழுவதும் முகத்தை மூடமுடியவில்லை. அதனால் கொரோனா நோயாளிகளுக்கு அருகில் சென்று சிகிச்சையளிக்க முடியாமல் ஒதுக்கப்பட்டோம். எங்கள் மதத்தில் சேவை செய்வது மிகவும் பெரிதாகக் கருதப்படும். எனவே இந்த நேரத்தில் சேவையைத் தேர்ந்தெடுத்து, தாடியை எடுத்துவிட்டோம்” எனக் கூறியுள்ளனர்.

மருத்துவர் சஞ்சீத் சிங்
மருத்துவர் சஞ்சீத் சிங்

இந்த மருத்துவர்களின் செயல் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கனடாவில் இதுவரை 63,496 பேர் பாதிக்கப்பட்டு 4,232 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

`கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டோம்!’ -உரிமைகோரும் இத்தாலி நிறுவனம்
அடுத்த கட்டுரைக்கு