Published:Updated:

இந்தோனேஷியா: `சூழ்ந்த இருட்டு; 20 கி.மீ பரவிய சாம்பல்!’- அச்சுறுத்தும் சினாபங் எரிமலை

எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்பு

``மலையைச் சுற்றி சுமார் 5 கி.மீ தொலைவு அதாவது சுமார் 3.1 மைல் தொலைவில் இருந்த 30,000 மக்கள் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்"

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா பகுதியில் அமைந்துள்ள சினாபங் என்ற எரிமலை இன்று காலையில் வெடித்துச் சாம்பலை வெளியிடத் தொடங்கியுள்ளது. எரிமலை வெடித்ததில் எந்தவிதமான உயிர் சேதங்களும் இதுவரை ஏற்படவில்லை என்றும் யாரும் காயமடையவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சினாபங் எரிமலை கடந்த சில நாள்களாக எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் குமுறிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென இன்று வெடித்துள்ளது. வெடித்ததில் வெளியான சாம்பல் துகள்கள் சுமார் 5,000 மீட்டர் அதாவது 16,400 அடி உயரத்தில் பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினாபங் எரிமலை கடந்த 2010-ம் ஆண்டும் வெடித்து சிதறியது. இதில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து 2014-ம் ஆண்டு வெடித்து சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2016-ம் ஆண்டு வெடித்ததில் சுமார் 7 பேர் இறந்துள்ளனர். முந்தைய வெடிப்புகள் அதிகளவில் உயிர் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. எனவே, இந்த முறை உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க இந்த மலையைச் சுற்றி சுமார் 5 கி.மீ தொலைவு அதாவது 3.1 மைல் தொலைவில் இருந்த சுமார் 30,000 மக்கள் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எரிமலை வெடிப்பின் ஆபத்து தொடர்பாக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சாம்பல் பரவல் தொடர்பான பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்களை முகக்கவசம் அணியவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சாம்பல் துகள்கள் வானத்தை மூடிய அளவில் திரண்டு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதனால், அந்த கிராமப் பகுதிகள் முழுவதுமே இருட்டாகக் காணப்படுகின்றன. உள்ளூர்வாசிகள் இந்த வெடிப்பு தொடர்பாக பேசும்போது, ``எரிமலை வெடித்தது இடியின் சப்தத்தைப் போன்று இருந்தது. குறைந்தது சுமார் 30 விநாடிகள் இந்த சப்தம் நீடித்தது. சினாபங் மலையை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது மிகவும் இருட்டாகக் காணப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு வெடித்ததை விடவும் தற்போது நிகழ்ந்துள்ள வெடிப்பு மிகப்பெரியது" என்று தெரிவித்துள்ளார். இந்த சாம்பல்கள் சுமார் 20 கி.மீ தூரம் வரை உள்ள கிராமங்களிலும் பரவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

14 கி.மீ உயரத்துக்குப் புகையைக் கக்கிய பிலிப்பைன்ஸ் எரிமலை! ஊரைக் காலி செய்யும் மக்கள்
அடுத்த கட்டுரைக்கு