Published:Updated:

நாடு இல்லை... ஆனால் மன்னர் உண்டு... தென்னாப்பிரிக்க ஜுலு இனக்குழுவில் நடக்கும் வாரிசுச் சண்டைகள்!

குட்வில்  - மன்ட்ஃபோம்பி
பிரீமியம் ஸ்டோரி
குட்வில் - மன்ட்ஃபோம்பி

தென்னாப்பிரிக்காவின் பெருமைமிகு பழங்குடி இனக்குழுக்களுள் ஒன்றுதான் ஜுலு. 1800-களில் உலகின் வலிமை மிகுந்த இனக்குழுக்களுள் ஒன்றாக இருந்தது

நாடு இல்லை... ஆனால் மன்னர் உண்டு... தென்னாப்பிரிக்க ஜுலு இனக்குழுவில் நடக்கும் வாரிசுச் சண்டைகள்!

தென்னாப்பிரிக்காவின் பெருமைமிகு பழங்குடி இனக்குழுக்களுள் ஒன்றுதான் ஜுலு. 1800-களில் உலகின் வலிமை மிகுந்த இனக்குழுக்களுள் ஒன்றாக இருந்தது

Published:Updated:
குட்வில்  - மன்ட்ஃபோம்பி
பிரீமியம் ஸ்டோரி
குட்வில் - மன்ட்ஃபோம்பி

நாடே இல்லாத ராஜ்ஜியம்; அதிகாரமே இல்லாத மன்னர்; இருந்தும், அரியணைக்காக நடக்கும் சண்டைகள்... இதைக் கேட்கும்போது ஒரு விடுகதைக்கான கேள்விபோல இருக்கலாம். ஆனால், உண்மையிலேயே இப்படியான விஷயங்கள்தான் தென்னாப்பிரிக்காவிலுள்ள குவாஜுலு-நடால் மாகாணத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த மாகாணத்திலுள்ள ஜுலு பழங்குடி இனத்துக்கென தனி நாடோ, எல்லையோ, அரசு அதிகாரமோ கிடையாது. ஆனாலும், அந்த இனக்குழுவுக்கான ‘மன்னர் அரியணைக்காக’ மிகப்பெரிய சண்டைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஓராண்டுக்கு மேல் நீடித்த இந்த அரியணைச் சண்டையில், மறைந்த மன்னர் குட்வில் ஸ்வெலிதினியின் மூன்றாவது மனைவி வழி மகன் மிசுஜுலு ஸ்வெலிதினி வெற்றிபெற்றிருக்கிறார். புதிய மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், குவாஜுலு-நடால் மாகாணத்தில் ஆட்டம் பாட்டமெனக் கொண்டாட்டம் களைகட்டினாலும், சண்டைகளும் ஒருபக்கம் நடந்தபடியிருக்கின்றன!

மிசுஜுலு ஸ்வெலிதினி
மிசுஜுலு ஸ்வெலிதினி

ஜுலு - சிறிய ஃப்ளாஷ்பேக்!

தென்னாப்பிரிக்காவின் பெருமைமிகு பழங்குடி இனக்குழுக்களுள் ஒன்றுதான் ஜுலு. 1800-களில் உலகின் வலிமை மிகுந்த இனக்குழுக்களுள் ஒன்றாக இருந்தது. 1816-ல் தனது சகோதரனைக் கொன்று, ஜுலு இனக்குழுவின் மன்னரானார் ஷாகா கா சென்சங்ககோனா. ஆங்காங்கே சிதறிக்கிடந்த ஜுலு மக்களை ஒருங்கிணைத்து, எல்லைகளை வரையறுத்து, ஜுலு ராஜ்ஜியத்தை முறையாக உருவாக்கியது ஷாகாதான். அவரது 12 ஆண்டுக்கால ஆட்சியில்தான் ஜுலு இனக்குழுவின் படைபலம் வலிமைபெற்றது. 1828-ல், அரியணைக்காகத் தனது மருமகனால் கொலை செய்யப்பட்டார் ஷாகா.

1879-ல், தங்களது ராஜ்ஜியத்துக்கு எதிராகப் படையெடுத்துவந்த பிரிட்டிஷ் துருப்புகளை ஓட ஓட விரட்டியது ஜுலு படை. இந்த வெற்றி ஜுலு இனக்குழுவை உலக அளவில் புகழ்பெறச் செய்தது. எப்போதுமே ஜுலு இனக்குழுவின் அரியணைக்குக் கடும் போட்டியும் மோதல்களும் நிலவும். இந்த மோதல்களில், பல தலைகள் உருண்ட வரலாறும் உண்டு. தென்னாப்பிரிக்கா ஜனநாயக நாடாக மாறிய பின்னர், ஜுலு இனக்குழுவுக்கான அதிகாரங்கள் பறிபோயின. தனிநாடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டங்களும் தோல்வியில் முடிந்தன.

தற்போதைய நிலவரப்படி, தென்னாப்பிரிக்காவில் சுமார் 1.2 கோடி ஜுலு மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இது, அந்நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு. எனவே, யார் ஆட்சிக்கு வந்தாலும் ஜுலு இனக்குழுவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத் தேர்தல்களில், ஜுலு மக்களின் வாக்குகள் மிக முக்கியமானவை. ஜுலு மக்கள் மத்தியில் மன்னருக்கு அதீத செல்வாக்கு உண்டு என்பதால், அரசியல் கட்சிகள் அரியணையிலிருப்பவர்களுக்கு உரிய மரியாதை வழங்குவது தற்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. மேலும், ஜுலு மன்னருக்குக் கீழ் இயங்கும் அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துகளும் உண்டு.

குட்வில்  - மன்ட்ஃபோம்பி
குட்வில் - மன்ட்ஃபோம்பி

6 மனைவிகளும்... குடும்பப் பிரச்னையும்..!

சரி, நிகழ்காலக் கதைக்கு வருவோம்... 1968-ல் ஜுலு இனக்குழுவுக்கு மன்னரான குட்வில்லுக்கு மொத்தம் ஆறு மனைவிகள். அந்த ஆறு பேரில், மூன்றாவது மனைவியான மன்ட்ஃபோம்பி, ஜுலு இனத்தைச் சேர்ந்தவராக இல்லாவிட்டாலும், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தார். காரணம், இவர் ஸ்வாஸிலாந்து (Swaziland) ராஜ குடும்பத்திலிருந்து வந்தவர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் குட்வில். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட கையோடு, யார் அடுத்த மன்னர் என்பதற்கான சண்டைகள் தொடங்கின.

இந்த நிலையில், `ராணி மன்ட்ஃபோம்பி அடுத்த மன்னரைத் தேர்வுசெய்யலாம்’ என்று குட்வில் எழுதிய உயில் ஒன்று கிடைத்தது. அனைவரும் எதிர்பார்த்தபடி தன் மகன் மிசுஜுலுவைக் கைகாட்டினார் மன்ட்ஃபோம்பி. ஆனால், குட்வில்லின் மேலும் இரண்டு வாரிசுகள் அரியணைக்குப் போட்டிபோட, ஆட்டம் சூடுபிடித்தது. மன்னரின் வாரிசுகளான சிமாகடே ஸ்வெலிதினியும், புஸாபஸி ஸ்வெலிதினியும், ``மன்ட்ஃபோம்பி, எஸ்வாதினி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், மிசுஜுலுவை 100 சதவிகிதம் ஜுலு இனத்தைச் சேர்ந்தவராக ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் மன்னராக அவர் இருக்கக் கூடாது’’ என்றனர்.

சிமாகடே ஸ்வெலிதினி
சிமாகடே ஸ்வெலிதினி

`சிமாகடேதான் மன்னரின் மூத்த மகன். எனவே, அவர்தான் மன்னராக வேண்டும்’ என்று ஒரு தரப்பினரும், `மன்னருடன் மிக நெருக்கமாக இருந்த புஸாபஸிதான் அடுத்த மன்னராக இருக்க முடியும்’ என்று மறு தரப்பினரும் வாதிட்டனர். `அரச குடும்பத்தில் வலுவான ஆதரவு பெற்றிருக்கும் மிசுஜுலுதான் மன்னராக வேண்டும்’ என்று மன்ட்ஃபோம்பியின் ஆதரவாளர்கள் எதிர்வாதம் செய்ய, மூன்றாகப் பிரிந்தது மன்னர் குடும்பம். இந்த விவகாரம் பெரிதாகவே, தென்னாப்பிரிக்க அரசு இதில் தலையிட்டது. `உயிலில் சொல்லப்பட்டிருக்கும்படி மிசுஜுலுவைப் புதிய மன்னராக அங்கீகரிக்கிறேன்’ என்றார் தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமஃபோசா. இதை எதிர்த்த மன்னரின் மற்றொரு மகனான எம்போனிசி உயர் நீதிமன்றத்தை நாட, தீர்ப்பு மிசுஜுலுவுக்குச் சாதகமாக வந்தது.

இதையடுத்து, ஆகஸ்ட் 20-ம் தேதி ஜுலு இனத்தின் புதிய மன்னராகத் தன் குடும்பத்தினர் முன்னிலையில் முடிசூட்டிக்கொண்டார் மிசுஜுலு. கோலாகலமாக நடந்த இந்த விழாவை நிறுத்தக் கோரி, மிசுஜுலுவின் சகோதரிகள் சிலர் நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தனர். அதில், `தந்தையின் உயில் போலியானது’ என்று சொல்லப்பட்டிருந்தது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் `பாரம்பர்ய தினமான’ செப்டம்பர் 24 அன்று, மக்கள் மத்தியில் மிசுஜுலுவுக்கு முடிசூட்டுவிழா நடத்தப்படவிருக்கிறது. அந்த விழாவுக்குள்ளாக, குடும்பச் சண்டைகள் ஓய்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஸாபஸி ஸ்வெலிதினி
புஸாபஸி ஸ்வெலிதினி

ஜனநாயக நாடுகளிலேயே அதிகாரத்துக்காகப் போட்டியும் மோதல்களும் நிலவும்போது, பல நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஜுலு இனக்குழுவில் நடக்கும் அதிகாரச் சண்டைகளில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லைதானே!