தென்னாப்பிரிக்காவின் குவாசுலு - நடால் மாகாணத்தில் கடந்த மாதம் மோசமான வெள்ளம் ஏற்பட்டது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சுமார் 435 பேர் இறந்தனர். பலரின் சடலங்களை அடக்கம் செய்ய இயலாத அளவுக்கு வெள்ளம் அனைத்தையும் வாரிக்கொண்டு சென்றது. இறுதிச் சடங்குகளைக்கூட செய்ய முடியவில்லையே எனப் பலரும் ஆற்றாமையில் தவித்தனர்.
இந்தச் சீற்றத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 43 வயதான ஸ்லின்டில் மடலாஸ் மற்றும் அவரின் இரண்டு வயதிலிருந்து 10 வயது வரை உள்ள 5 குழந்தைகள், மேலும் நான்கு குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். வெள்ளம் ஏற்படுவது தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த இவர்கள் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இருந்த வீடும் சிதைந்துபோனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொடூர வெள்ளத்தில் இன்னும் சில உடல்களை மீட்டெடுக்க முடியாமல், மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தக் குடும்பத்தில் இறந்தவர்களில், கிடைத்த ஆறு உடல்களுக்கான இறுதி அஞ்சலியை அங்குள்ள மக்கள் அனுசரித்து வருகின்றனர்.
இறப்பு என்பதே மீள முடியா துயரம். அதிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மாவும், அவரின் ஐந்து பிள்ளைகளும், மேலும் நான்கு பிள்ளைகளும் என 10 பேர் வெள்ளத்துக்கு பலியாகியிருப்பது ஆற்றாமையை ஏற்படுத்துவதாக மக்கள் கண்கள் கலங்குகின்றனர்.