Published:Updated:

பொருளாதாரம்... போராட்டம்... இலங்கை அரசியல் சதுரங்கம்! - ஆடும் கோத்தபய ராஜபக்சே

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
பிரீமியம் ஸ்டோரி
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

ராஜபக்சேவின் பூர்வீக வீடு உட்பட அவரது குடும்பம் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான சொத்துகள் என 50 இடங்களுக்கும் மேல் ஒரே நேரத்தில் தீவைக்கப்பட்டிருக்கின்றன

பொருளாதாரம்... போராட்டம்... இலங்கை அரசியல் சதுரங்கம்! - ஆடும் கோத்தபய ராஜபக்சே

ராஜபக்சேவின் பூர்வீக வீடு உட்பட அவரது குடும்பம் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான சொத்துகள் என 50 இடங்களுக்கும் மேல் ஒரே நேரத்தில் தீவைக்கப்பட்டிருக்கின்றன

Published:Updated:
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
பிரீமியம் ஸ்டோரி
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

ஈழப் போர் முடிந்து சரியாக 13 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இலங்கையின் பல்வேறு பகுதிகளும் வன்முறைக்காடாக மாறியிருக்கின்றன. அன்று அதிகாரத்திலிருந்த மகிந்த ராஜபக்சே அரசு, தமிழ் மக்கள்மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியது. மே, 2009-ல் `ஈழப் போர் முடிந்துவிட்டது; இனி இலங்கைக்கு வளர்ச்சிப் பாதைதான்’ என்று சிங்கள மக்களை உற்சாகப்படுத்தினார் மகிந்த. ஆனால் தற்போது, அதே சிங்கள மக்களால், ஆட்சிப் பொறுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். அதிபர் கோத்தபய, தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அரசியல் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். மக்களோ, எல்லாவித தட்டுப்பாடுகளாலும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, தங்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளையும் மீறி, மீண்டும் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.இதுவரை காட்சியிலேயே இல்லாத ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக திடீரெனப் பதவியேற்றிருக்கிறார். இலங்கையின் தற்போதைய நிலை என்ன... அடுத்தடுத்து அரசியலில் காட்சிகள் எப்படி மாறும் என இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள், களத்திலிருக்கும் போராட்டக்குழு, சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எனப் பல தரப்பிடமும் விசாரித்தோம்.

பொருளாதாரம்... போராட்டம்... இலங்கை அரசியல் சதுரங்கம்! - ஆடும் கோத்தபய ராஜபக்சே

ராஜபக்சே குடும்பத்துக்குள் வெடித்த பூகம்பம்!

சுதந்திரத்துக்குப் பிறகு இலங்கை சந்தித்த மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி இதுதான். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்களது தினசரித் தேவைகளைச் சரிவர பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் அவதிப்பட்டுவந்தனர் இலங்கை மக்கள். ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்கவியலாமல், அரசுக்கு எதிராகப் போராட வீதியில் இறங்கினர். இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளடைவில் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பரவியது. குடும்பம் குடும்பமாக இலங்கையின் பழைய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் காலி முகத்திடலில் முகாம் அமைத்து, அமைதியாகப் போராடிவந்தனர். `அதிபர், பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும்; வெளிநாடுகளில் இருக்கும் ராஜபக்சேக்களின் சொத்துகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்’ என்பது போராடும் மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டுமென்ற மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெறவே, இது பற்றிக் கூடிப் பேசியது ராஜபக்சே குடும்பம். ``நீ பதவி விலகு... நான் சமாளித்துக்கொள்கிறேன்’’ என மகிந்தவும் கோத்தபயவும் மாறி மாறிச் சொல்ல, ராஜபக்சே குடும்பத்துக்குள் பூகம்பம் வெடித்தது. ராஜபக்சே சகோதரர்களில் மூத்தவரான சமல், கோத்தபய பக்கம் நிற்க, இளைய சகோதரர் பசிலோ, மகிந்தவுக்காகப் பேசியிருக்கிறார். இதனால் ராஜபக்சே குடும்பம் மட்டுமல்ல, `இலங்கை பொதுசன முன்னணி’ கட்சியும் இரண்டாகியிருக்கிறது. ``யார் பேச்சையும் கேட்காமல் செயற்கை உரங்களுக்கு உடனடித் தடை விதித்தது, வரிக்குறைப்பை அமல்படுத்தியது என இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முக்கியக் காரணமே நீதான். அதனால் நீதான் பதவி விலக வேண்டும்’’ எனத் தம்பி கோத்தபயவிடம் கொந்தளித்திருக்கிறார் மகிந்த.

மகிந்த, கோத்தபய இருவரும் ஒருசேரப் பதவி விலகினால், இனி இலங்கை அரசியலில் ராஜபக்சே குடும்பம் தலைதூக்கவே முடியாது என்பதைத் தனக்குச் சாதகமாக்கி, சில வாதங்களை முன்வைத்திருக்கிறார் கோத்தபய. ``நாட்டின் உச்சபட்ச அதிகாரம் என் கையில்தான் இருக்கிறது. நான் பதவி விலகினால், நம் சாம்ராஜ்ஜியமே சரிந்துவிடும். அதனால், நீ பதவி விலகுவதுதான் சரி. அப்போதுதான் போராடும் மக்கள் சற்று சாந்தமடைவார்கள். நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்’’ என்றிருக்கிறார் கோத்தபய. இறுதியாக, வேறு வழியில்லாமல், மே 9 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த. ராஜினாமா செய்வதற்கு முன்பாக இலங்கை முழுவதுமிருக்கும் தனது ஆதரவாளர்களைத் தலைநகருக்கு வரவழைத்து, பதவி விலகும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ``உங்கள் முகத்தைவைத்துத்தான் கோத்தபய அதிபரானார். அவரை வளர்த்துவிட்டதே நீங்கள்தான். அதனால் நீங்கள் பதவி விலகக் கூடாது. அவர்தான் விலக வேண்டும்’’ எனச் சில ஆதரவாளர்கள் கோபத்துடன் கூறியிருக்கிறார்கள். ஆனால், மகிந்தவோ பதவி விலகுவதில் உறுதியாக இருந்திருக்கிறார். அதன்படி பதவியும் விலகினார்.

மகிந்தவின் சூழ்ச்சி!

பதவி விலகியதோடு நிறுத்திக்கொள்ளாமல், தன் தொண்டர்களைத் தூண்டிவிட்டு அமைதியாகப் போராடிய மக்கள்மீது தாக்குதல் நடத்தச் செய்திருக்கிறார் மகிந்த. அதன் விளைவாகத்தான் கடந்த வாரம் இலங்கை பற்றி எரிந்தது. கோத்தபய ஆதரவாளர்களுக்கும், இலங்கை மக்களுக்கும் தான் யாரெனக் காட்ட நினைத்துத்தான் மகிந்த இப்படிச் செய்ததாகச் சொல்கிறார்கள். ``தனது ஆதரவாளர்களோடு சேர்த்து, இலங்கையின் வட்டரெக்க சிறைச்சாலையிலிருந்து தனக்குச் சாதகமான 56 குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு போராட்டக் களத்துக்குள் ஊடுருவச் செய்திருக்கிறார் மகிந்த’’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். “மகிந்த ஆதரவாளர்கள் மக்களைத் தாக்கியபோது, ராணுவமும் காவல்துறையும் வேடிக்கைதான் பார்த்தன” என்கிறார்கள் சம்பவ இடத்திலிருந்தவர்கள். “போராட்டத்தைக் கலைக்க ராஜபக்சே சகோதரர்கள் கையாண்ட உத்திதான் இந்தக் கலவரம்” என்கிறார்கள் போராடும் மக்கள். பதவி விலகுவதில் சண்டை போட்டுக்கொண்டாலும், தற்போது மக்களிடமிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்காக ராஜபக்சே சகோதரர்கள் ஒன்றுகூடிவிட்டதாகவே தெரிகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய எதிர்க்கட்சியினர் சிலர், ``ராஜபக்சேவின் பூர்வீக வீடு உட்பட அவரது குடும்பம் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான சொத்துகள் என 50 இடங்களுக்கும் மேல் ஒரே நேரத்தில் தீவைக்கப்பட்டிருக்கின்றன. எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றுதான் மக்களே போராடிவருகிறார்கள். அவர்களுக்கு எப்படி இத்தனை கட்டடங்களைக் கொளுத்தும் அளவுக்கு எரிபொருள் கிடைத்திருக்க முடியும்... தீ வைக்கப்பட்டபோது எந்த உயிர்ச் சேதமுமில்லை, வீடுகள் முழுவதும் எரிபொருள் ஊற்றப்பட்டு, சரியாக எரிக்கப்பட்டிருக்கின்றன. இது திட்டமிடப்பட்டு ராஜபக்சே ஆதரவாளர்களால் செய்யப்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களை வன்முறையாளராகச் சித்திரிக்க வேண்டும். அதன் மூலம் ராணுவத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும். கூடவே, தங்கள்மீது அனுதாபம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மூன்று காரணங்களுக்காக ராஜபக்சே குடும்பமே இதைத் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். ஆனால், ராஜபக்சேக்களிடம் எஞ்சியிருக்கும் சொற்ப ஆதரவாளர்களைத் தவிர, இவர்கள்மீது அனுதாபப்பட நாட்டில் யாருமேயில்லை’’ என்கிறார்கள்.

``அப்படியென்றால், மக்கள் எங்குமே தீவைப்பில் ஈடுபடவில்லையா?’’ என்ற கேள்விக்கு, ``இதைத் தொடங்கியது ராஜபக்சே ஆதரவாளர்கள்தான். மக்களும் ஒருசில இடங்களில் தீவைப்பில் ஈடுபடத்தான் செய்தனர். அமைதியாகப் போராடிவந்தவர்களைத் தாக்கியதால் கொதிப்படைந்த சில இளைஞர்கள், தங்களது நியாயமான கோபத்தை வெளிக்காட்டத்தான் செய்வார்கள்’’ என்றனர். வன்முறைகள் சற்று அடங்கியிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் காலி முகத்திடலில் 24 மணி நேரமும் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் இலங்கை மக்கள்.

பொருளாதாரம்... போராட்டம்... இலங்கை அரசியல் சதுரங்கம்! - ஆடும் கோத்தபய ராஜபக்சே

வலுக்கும் தட்டுப்பாடு... எச்சரித்த மத்திய வங்கி ஆளுநர்!

கலவரத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, `இங்கே மருந்துகள் இல்லை’ எனத் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறார்கள். ``இங்கு நோய்வாய்ப்பட்டு வருபவர்களுக்கே கொடுப்பதற்கு மருந்து மாத்திரைகள் இல்லை. இந்த நேரத்தில் வன்முறையில் காயம் ஏற்பட்டவர்களுக்கு எப்படி மருத்துவம் பார்ப்பது... சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை மனதில் கொண்டாவது இந்த வன்முறைகளை நிறுத்துங்கள்!’’ என்றிருக்கிறார்கள் மருத்துவர்கள் காட்டமாக. மருந்துகளைப்போலவே உணவுப்பொருள்கள், பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடுகளும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ``அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால், பொருளாதாரம் மேலும் மோசமடையும். எரிபொருள் நெருக்கடி, மின்தடை மேலும் தீவிரமடையும். இரண்டு வார காலத்துக்குள் நாட்டில் நிலையான ஆட்சி உருவாகவில்லையென்றால், நான் பதவி விலகிவிடுவேன்’’ என்று எச்சரித்திருக்கிறார்.

சொதப்பிய சஜித்... அரியணை ஏறிய ரணில்!

``அதிபரின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டுமெனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்திருப்பதால், அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இந்த வாரத்துக்குள் புதிய பிரதமர், அமைச்சரவை நியமிக்கப்படும்’’ என்று கூறியிருந்தார் அதிபர் கோத்தபய.

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவோ, ``ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொள்வேன்’’ என்று சொல்லிவந்தார். எனவே, சஜித் வழிக்கு வர மாட்டார் என்று முடிவுக்குவந்த கோத்தபய, தனது குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் வேலைகளில் இறங்கினார். சஜித் வசமிருந்த பல கூட்டணிக் கட்சிகள், ரணில் பக்கம் தாவின. அந்த நிலையில், சஜித் பிரேமதாசா, ‘`பிரதமராகப் பதவியேற்க நான் தயார்’’ என்று கூறினார். ஆனால், காலம் கடந்துவிட்டது. ரணில் பிரதமராக அரியணை ஏறிவிட்டார். 13.05.2022 அன்று புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்கிறார்கள்.

இது பற்றி இலங்கை அரசியல் நோக்கர்கள், ``பதவியேற்புக்கு முன்பு ரணில் விக்ரமசிங்கவை கோத்தபய சந்தித்துப் பேசினார். அப்போது, `காலி முகத்திடலில் நடக்கும் போராட்டங்களைக் கலைக்கக் கூடாது. அங்கு போராட்டம் நடந்தால்தான் இலங்கையில் ஜனநாயகம் இருக்கிறது என்று நம்பி, நிதியுதவி செய்ய உலக நாடுகள் முன்வருவார்கள். இதை ஏற்றுக்கொண்டால் நான் பிரதமர் பதவியேற்பேன்’ என்ற நிபந்தனையை வைத்தார் ரணில். போராட்டம் கலைக்கப்படக் கூடாது என்று ரணில் சொல்வதில் அவரது சுயநலமும் ஒளிந்திருக்கிறது. காலி முகத்திடலில் ‘கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்’ என்றுதான் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டம் மேலும் வலுத்தால், அழுத்தம் தாங்காமல் கோத்தபய நிச்சயம் பதவி விலகிவிடுவார். பின்னர், பிரதமர் பதவியிலிருக்கும் தானே அதிபராகிவிடலாம் என்பதுதான் ரணிலின் திட்டம்’’ என்றனர்.

பொருளாதாரம்... போராட்டம்... இலங்கை அரசியல் சதுரங்கம்! - ஆடும் கோத்தபய ராஜபக்சே

ரணில் பதவியேற்பின் சர்வதேச அரசியல்!

“பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட்டாலும், ரணிலுக்குச் சிக்கல்கள் நீடிக்கின்றன. அவரது கட்சியிலுள்ள ஒரே எம்.பி அவர் மட்டுமே. எனவே, பெரும்பான்மை அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும் அவரது கிரீடம் பறிக்கப்படலாம். மேலும், ரணில் பதவியேற்பின் பின்னணியில் அமெரிக்க - சீன - இந்திய முக்கோண அரசியல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நேற்று (11.05.2022) சஜித், சீனத் தூதுவரை சந்தித்ததும், அதிரடியாக இன்று ரணில் பதவியேற்ற சில விநாடிகளிலேயே அமெரிக்கா அவருக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பதிலும் சர்வதேச அரசியல் உள்ளது. சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு என்பதில், அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே புள்ளியில் ரணிலை ஆதரிக்கின்றன. அவரின் முதல் பயணம் இந்தியாவுக்குத்தான்” என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள்.

மீண்டெழுமா இலங்கை?

இந்த நாற்காலிப் போராட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்பதையே அரசியல் கட்சிகள் மறந்துபோய்விட்டன. இதற்கான எந்தவொரு தெளிவான திட்டமும் அவர்களிடம் இல்லை. கிழக்கு மாகாண எம்.பி சாணக்கியன் நம்மிடம், ``நாட்டில் நிலையான, ஸ்திரமான ஆட்சியும் அமைதியும் ஏற்பட்டால்தான் உலக நாடுகளும், நிதி நிறுவனங்களும் நிதியுதவி செய்ய முன்வருவார்கள். எனவே, நாட்டில் போராட்டங்கள் முடிவுக்கு வந்து அமைதி திரும்பினால் மட்டுமே பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும்’’ என்றார்.

கோத்தபயவின் அரசியல் சதுரங்கம்!

அதிபர் பதவியேற்றவுடன் தன் மீதிருந்த சில வழக்குகளை நீக்கிவிட்டார் கோத்தபய. இருந்தும், நீக்க முடியாத பல வழக்குகள் அவர்மீது இன்னமும் இருக்கின்றன. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில், ஈழப் போரை முன்னின்று நடத்தியதால், கோத்தபய புரிந்த போர்க் குற்றங்கள் அவரை விடாமல் துரத்துகின்றன. அதனால், வெளிநாடுகளுக்கும் அவரால் தப்பிச்செல்ல முடியாது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அதிபர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதுதான் கோத்தபயவிடம் இருக்கும் ஒரே வழி. எனவே, எத்தனை போராட்டங்கள் நடந்தாலும், அவ்வளவு எளிதில் அவர் பதவி விலக மாட்டார் என்று அடித்துச் சொல்கிறார்கள் கோத்தபயவுக்கு நெருக்கமானவர்கள்.

நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதால், இலங்கை அரசியலில் அடுத்தடுத்து என்ன நடக்க வேண்டுமென்பதைத் தீர்மானிப்பவராக இருப்பது கோத்தபயதான். அரசியல் சதுரங்கத்தின் இரண்டு பக்கங்களிலிருந்தும் அவரே காய்களை நகர்த்திவருகிறார். ஆனால், இந்த நிலை நீண்டகாலத்துக்கு நீடிக்காது என்பதையும், காட்சிகள் எப்போது வேண்டுமானாலும் தனக்கு எதிராக மாறலாம் என்பதையும் அவர் உணர்ந்துதான் இருக்கிறார். வேறு வழியில்லாமல்தான், ஜனநாயகவாதி என்ற முகமூடியை அணிந்துகொண்டு, ஓர் அரசியல் நாடகத்தை நடத்திவருகிறார் கோத்தபய.

ராஜபக்சே குடும்பத்தின் பிடியிலிருந்த இலங்கையின் ஒட்டுமொத்த அதிகாரமும், தற்போது கோத்தபய என்ற தனிநபரின் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இவருக்கு வைக்கப்படும் செக் மேட்டில்தான் இலங்கையின் ஜனநாயகம் உறுதிசெய்யப்படும்!

திரிகோண மலையில் மகிந்த?

பிரதமரின் அலரி மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திரிகோணமலைக்குத் தப்பிச் சென்று, தஞ்சமடைந்திருக்கிறது மகிந்த ராஜபக்சே குடும்பம். இதை இலங்கை அரசும் உறுதிப்படுத்தியிருக்கிறது. உலகின் மிகவும் பாதுகாப்பான இடங்களில், திரிகோண மலையிலுள்ள இலங்கை கடற்படை முகாமும் ஒன்று. மகிந்த உட்பட ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் சிங்கள மக்களுக்கு பயந்து, பாதுகாப்பாகத் தஞ்சமடைந்திருப்பது தமிழ்ப் பகுதிகளில்தான். சிங்கப்பூர், துபாய்க்கு மகிந்தவின் குடும்பம் தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அதேசமயம், இலங்கையிலிருந்து வெளியேற மகிந்த மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட 15 பேருக்குக் கொழும்பு நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது!

இந்தியா பக்கம் கோபம் திரும்பும்!

``இந்தியா, ராஜபக்சே குடும்ப ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது. ராஜபக்சே அரசுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கியதால்தான், தற்போதுவரை கோத்தபய ஆட்சியிலிருக்கிறார். இந்தியா தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்துக்கு ஆதரவான நிலையிலிருந்தால், இலங்கை மக்களின் கோபம் இந்தியா பக்கமும் திரும்பும்’’ என்கிறார்கள் போராடிவரும் சில இளைஞர்கள். இந்நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து இலங்கையை நோக்கி உதவிகளை அனுப்பிவருகிறது. இப்பணிக்காக நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது!

உகாண்டாவில் முதலீடு!

ராஜபக்சே குடும்பத்தின் பெரும்பாலான முதலீடுகள் உகாண்டா நாட்டில் குவிந்திருப்பதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. கேஃப் சிலோன், ஸ்டீல் போல் கன்ஸ்ட்ரக்‌ஷன், ரோஸ் மோர் எஸ்டேட் எனப் பல்வேறு நிறுவனங்களில் ராஜபக்சே குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நம்மிடம் பேசிய இலங்கையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், “2013-ம் ஆண்டு, உகாண்டாவுக்கான இலங்கைத் தூதராக வேலுப்பிள்ளை கண்ணநாதன் நியமிக்கப்பட்டார். இவர் மூலமாகத்தான் ராஜபக்சே குடும்பத்தின் சொத்துகள் உகாண்டாவில் முதலீடு செய்யப்பட்டன. அந்த நாட்டிலுள்ள நான்கு எழுத்து வங்கியின் மூலமாகப் பெரும் தொகை அங்கே பதுக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் இயங்கும் பாலியல் வெப்சைட் நிறுவனத்திலும்கூட முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம், இலங்கையிலிருந்து மூன்று தனி விமானங்களில் உகாண்டாவுக்குப் பெரும் தொகை பறந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தெல்லாம் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்றார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism