Published:Updated:

உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!

உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

இந்தப் போருக்குத் தன்னிடம் நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கருதுகிறது ரஷ்யா.

உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!

இந்தப் போருக்குத் தன்னிடம் நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கருதுகிறது ரஷ்யா.

Published:Updated:
உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

ஒரு போர் என்ன செய்யும்? குண்டுச் சத்தம் கேட்ட அடுத்த நிமிடத்திலிருந்தே இயல்பு வாழ்க்கை குலைந்துவிடும். கடைகள் அடைக்கப்பட்டு உணவுகள் கிடைக்காது. ஏ.டி.எம் இயந்திரங்கள் பணம் தராது. மின்சாரம் தடைபடும். போக்குவரத்து நின்றுவிடும். சாலைகள் துண்டிக்கப்படும். வாசலைத் தாண்டி வெளியில் செல்வதே உயிருக்கு ஆபத்தான விஷயமாகிவிடும். நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது. கர்ப்பிணிகளுக்கு பிரசவம் இனிய அனுபவமாக நிச்சயம் இருக்காது. நேற்று வரை தன் வீட்டில் நிம்மதியாக வாழ்ந்த ஒருவரை, நிர்க்கதியான அகதியாக்கி அண்டை தேசத்தின் வீதியில் நிறுத்திவிடும். ஒரு தேசத்தை, அதன் கட்டமைப்புகளைச் சிதைக்கும். மறுநிர்மாணம் செய்ய பல தலைமுறைகள் ஆகிவிடும்.

ஆனாலும் ஆட்சியாளர்களுக்குப் போர் சலிப்பதில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக மோசமாக உலகம் அணிபிரிந்து நிற்கும் போராக ரஷ்ய-உக்ரைன் போர் இருக்கிறது. பிப்ரவரி 24 அதிகாலை இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், `நாங்கள் உக்ரைனை ஆக்கிரமிக்க போர் தொடுக்கவில்லை. அந்த நாட்டை ராணுவமயத்திலிருந்து விடுவிக்கப்போகிறோம்' என்று ஒரு விநோதமான காரணமும் சொன்னார்.

போர் தொடங்கியபிறகு நிமிடத்துக்கு நிமிடம் உலகம் மாறிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. கிட்டத்தட்ட கடந்த இரண்டு மாதங்களாகவே உக்ரைனைச் சுற்றி மூன்று எல்லைகளிலும் படைகளைக் குவித்து ஆயத்தமாகி வந்தது ரஷ்யா. உக்ரைனுக்கு ஆதரவாக அண்டை நாடுகளில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் படைகளைக் குவித்தன. ஆனால், போர் தொடங்கிய பிறகு அவர்களில் யாரும் உக்ரைனுக்கு ஆதரவாக வரவில்லை. `உலகம் எங்களைக் கைவிட்டுவிட்டது' என்று புலம்பினார் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி. 18 முதல் 60 வயது வரையுள்ள உக்ரைன் ஆண்கள் அனைவரையும் போரில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டது உக்ரைன் அரசு. முதியவர்கள் எங்கும் போக மறுத்து வீடுகளுக்குள் முடங்க, குழந்தைகளையும் பெண்களையும் அண்டை தேசங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டுப் போர்ப் பயிற்சி எடுக்கிறார்கள் உக்ரைன் ஆண்கள்.

உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!

இரண்டு உலகப்போர்களில் ஐரோப்பா உருக்குலைந்ததைப் பார்த்திருக்காத இன்றைய தலைமுறையினர், ஐரோப்பாவில் நிகழும் இந்தப் போரைக் கண்டு அதிர்ந்து நிற்கின்றனர். போர் என்பது ஏதோ ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளில் நாகரிகமற்ற மனிதர்கள் நிகழ்த்துவது என்பது அவர்களின் புரிதல். `வெள்ளைத் தோலும் நீலக்கண்களும் கொண்ட சக ஐரோப்பியர்கள் அகதிகளாக வெளியேறுவது துயர் தருகிறது' என்று புலம்புகிறார்கள். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய அகதிகளை ஏற்க மறுத்த ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் அகதிகளை ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. போலந்து நாட்டில் மட்டுமே பல லட்சம் அகதிகள் குவிந்திருக்கிறார்கள். எப்போதும் இல்லாத நடைமுறையாக போப் பிரான்சிஸ் நேரடியாக ரஷ்யத் தூதரகத்துக்குப் போய் தன் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார். போர் என்றாலே அது அநீதியானது என்றாலும், ஐரோப்பாவில் போர் நிகழ்ந்தால் உலகம் சற்று அதிகமாகவே கவலைப்படுகிறது.

இந்தப் போருக்குத் தன்னிடம் நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கருதுகிறது ரஷ்யா. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா `வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்' என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. `நேட்டோ' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற 12 நாடுகள் இணைந்தன. நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் எந்த ஒரு நாட்டின் மீது அந்நியப் படையெடுப்பு நிகழ்ந்தாலும், மற்ற நாடுகள் படைகளை அனுப்பி உதவி செய்யும். பெர்லின் சுவர் விழுந்து ஜெர்மனி ஒரே நாடாக மாறிய நேரத்தில், `கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் எந்த நாட்டையும் நேட்டோவில் சேர்க்க மாட்டோம்' என்று அப்போதைய ரஷ்ய அதிபர் கோர்பசேவிடம் வாக்குறுதி கொடுத்தது அமெரிக்கா.

உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!

1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து சிதறியது. ரஷ்யா தனி நாடாகிவிட, இன்னும் 14 பகுதிகள் தனித்தனி நாடுகள் ஆகின. உக்ரைனும் அதில் ஒன்று. ரஷ்யாவுக்கு ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை மீறி இதில் பல நாடுகளை நேட்டோவில் சேர்த்தது அமெரிக்கா. ரஷ்யாவிலிருந்து பிரிந்த அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவை நேட்டோவில் இணைந்தன. போதாக்குறைக்கு உக்ரைனும் ஜார்ஜியாவும் நேட்டோவில் சேர விரும்பின. இதனால், ரஷ்யாவைச் சுற்றி இருக்கும் எல்லா நாடுகளிலும் அமெரிக்கா தடம் பதித்ததுபோல ஆகிவிடும். இதை ரஷ்யா ரசிக்காததே பிரச்னைக்குக் காரணம்.

சோவியத் யூனியன் உடைந்தபிறகும்கூட, அந்த நாடுகள் ரஷ்யாவுடன் காமன்வெல்த் அமைப்பு ஒன்றில் இணைந்திருந்தன. நேட்டோ தூண்டிலைப் போட்டு அமெரிக்கா இங்கே மீன் பிடிக்க ஆரம்பித்தபிறகு அந்தக் கூட்டமைப்பு செயலிழந்துபோனது. தனிக்குடித்தனம் போகும் மருமகள்களுக்குப் புகுந்த வீடு பிடிக்காது அல்லவா? அந்த நிலையில்தான் ரஷ்யாவை இந்த நாடுகள் பலவும் அணுகின.

உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!

சோவியத் யூனியன் என்பது பல்வேறு இனக்குழுவினர் வாழும் பிரதேசங்களை இணைத்த பெரிய தேசமாக இருந்தது. ஜோசப் ஸ்டாலின் காலத்தில் மறுகுடியேற்றம் என்ற பெயரில் ஒவ்வொரு பிரதேசத்திலும் வேற்று இனத்தவரும் குடியமர்த்தப்பட்டனர். இப்படி ரஷ்யர்கள் பல இடங்களிலும் வாழ்கின்றனர். உதாரணமாக, உக்ரைனில் வாழ்பவர்களிலேயே ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ரஷ்ய இனத்தினர். இவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், அதைக் காரணம் காட்டி ரஷ்யா அங்கே நுழைகிறது.

நேட்டோவில் இணைய ஜார்ஜியா முயன்றபோது, அங்கு இருக்கும் அப்காசியா, தெற்கு ஒசேட்டியா பகுதிகளில் ரஷ்யர்களுக்குப் பிரச்னை ஏற்படுவதாகக் கூறி, படைகளை அனுப்பினார் புதின். மால்டோவா நாட்டில் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியில் இதேபோல பிரச்னை வந்து அங்கு ரஷ்யப் படைகள் நுழைந்தன. ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளின் எல்லையில் பிரச்னை வந்தபோதும் ரஷ்யா படைகளை அங்கு அனுப்பியது.

உக்ரைன் விஷயத்தில் ரஷ்யாவுக்குக் கூடுதல் அக்கறை உண்டு. ரஷ்யாவுக்கு மிக நீண்ட கடல் பரப்பு இருந்தாலும், ஆண்டின் பல மாதங்கள் அவை பனியில் உறைந்தே இருக்கும். ஆகவே, போக்குவரத்துக்குக் கருங்கடல் பகுதியை நம்பியிருக்கிறது. கருங்கடலில் இருக்கும் உக்ரைன் நாட்டின் செவஸ்டபுல் துறைமுகத்தை நீண்ட காலக் குத்தகைக்கு எடுத்திருந்தது ரஷ்யா. ஐரோப்பிய நாடுகளுடனும் ஆசியாவுடனும் வர்த்தகம் செய்ய அந்தத் துறைமுகம் ரஷ்யாவுக்கு அவசியம். அதனாலேயே தனக்கு இணக்கமான அரசு அங்கு இருப்பதை ரஷ்யா விரும்பியது. ஆனால், உக்ரைன் ஐரோப்பிய யூனியனிலும் நேட்டோவிலும் சேர முயன்றது. அப்படி நிகழ்ந்தால், செவஸ்டபுல் துறைமுகம் கைநழுவிப் போகும் என்பதை உணர்ந்த புதின், 2014-ம் ஆண்டு உக்ரைனைத் தாக்கி, கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார். இந்த கிரீமியாவில்தான் செவஸ்டபுல் துறைமுகம் இருக்கிறது.

உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!

இதைத் தொடர்ந்து உக்ரைன் தனது பாதுகாப்புக்காக 2019-ல் பிரிட்டனுடன் ஒப்பந்தம் போட்டது. உக்ரைனை ஒட்டிய கருங்கடல் பகுதியில் இரண்டு கடற்படைத் துறைமுகங்களை பிரிட்டன் உருவாக்கித் தருவதாக ஒப்பந்தம். இப்போது கருங்கடலில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. இந்த எல்லாவற்றையும் ரஷ்யாவுக்கான ஆபத்தாக புதின் பார்த்தார். அதுவே போரில் வந்து முடிந்திருக்கிறது. இந்தப் போரின் மூலம் கருங்கடல் பிரதேசத்தில் தன் ஆதிக்கத்தையும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யப் படைகளையும் வலுவாக நிறுத்த முயல்கிறார் புதின்.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைச் சார்ந்தே ஐரோப்பா இருக்கிறது. அதையும் தாண்டி, பல நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகளே ரஷ்யாவைப் பேச்சுவார்த்தை மேஜையை நோக்கி நகர்த்தியிருக்கின்றன. உக்ரைனுக்குக் குவியும் உதவிகளும் புதினை யோசிக்க வைத்திருக்கலாம். போரையும் நடத்திக்கொண்டு பேச்சுவார்த்தையும் நடத்தும் ரஷ்யாவின் வித்தியாசமான அணுகுமுறையை உலகம் பார்க்கிறது. கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதாரச் சூழல் ஒரு போரைத் தாங்கும் நிலையில் இல்லை. அமைதி திரும்ப வேண்டும்.

ரஷ்யா சண்டையிடுவதை நிறுத்தினால், போர் இல்லாமல்போகும்; உக்ரைன் சண்டையிடுவதை நிறுத்தினால், உக்ரைனே இல்லாமல்போகும் என்பதுதான் இப்போதைய நிலை.

*****

4 மணி நேரம் கடும் குளிர்ல உக்காந்திருந்தோம்.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சாந்தனு, உக்ரைனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள செர்னிவுட்ஸி (Chernivtsi) நகரில் மருத்துவம் முதலாமாண்டு படிக்கிறார். இந்தியத் தூதரகம் மூலம் மீட்கப்பட்டு ருமேனியா வழியாக கடந்த ஞாயிறன்று தமிழகம் வந்து சேர்ந்திருக்கிறார்.

``நினைச்சாலே கனவு மாதிரியிருக்கு சார். அந்த மாதிரி ஒரு சூழலைக் கற்பனைகூட செஞ்சு பார்த்ததில்லை. 2021 டிசம்பர்லதான் உக்ரைன் போனேன். இன்னும் முதல் செமஸ்டர்கூட முடியலே. கொரோனாவால ஆன்லைன் கிளாஸ் போய்க்கிட்டிருந்தது. ஹாஸ்டல்ல இருந்து கிளாஸ் அட்டெண்ட் பண்ணினோம். சீக்கிரமே நேரடி வகுப்புகள் தொடங்கும்னு சொல்லியிருந்தாங்க. இந்தச் சூழல்லதான் போர் வரலாம்ங்கிற பேச்சு வந்துச்சு. என்ன செய்றதுன்னு ஒரே குழப்பம்.

உலக அரசியலுக்குப் பலியாகும் உக்ரைன்!
சாந்தனு,
சாந்தனு,
ஷகீர்
ஷகீர்

20-ம் தேதிக்கு மேல கல்லூரியில, `ஊருக்குப் போறவங்க போங்க, ஆன்லைன்ல கிளாஸ் நடக்கும்'னு சொல்லிட்டாங்க. நான் 24-ம் தேதி டிக்கெட் புக் பண்ணிட்டேன். கீவ் நகரத்திலிருந்து துபாய் வழியா ஃபிளைட். நான் இருந்த இடத்திலிருந்து கீவ் 500 கி.மீ. என்கூட கர்நாடகா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த 59 பேர் அந்த ஃபிளைட்ல புக் பண்ணியிருந்தாங்க. கல்லூரி நிர்வாகம் ரெண்டு பஸ்களை ஏற்பாடு பண்ணித் தந்தாங்க. 23-ம் தேதி பஸ்ல கிளம்பினோம். கீவ் நகரத்துக்குள்ள நுழைஞ்சவுடனே ரொம்பப் பதற்றமா இருந்துச்சு. எங்கே பார்த்தாலும் ராணுவ வீரர்கள் இருந்தாங்க. விமான நிலையத்தை மூடிட்டதா சொன்னாங்க. அங்கே இருக்கிறது ஆபத்துங்கிறதால ஹாஸ்டலுக்கே திரும்ப நினைச்சோம். கீவ் நகரத்துல வேற வேற கல்லூரிகள்ல படிக்கிற 30 இந்திய மாணவர்கள், என்ன செய்றதுன்னு தெரியாம நின்னுக்கிட்டிருந்தாங்க. அவங்களையும் பஸ்ல ஏத்திக்கிட்டோம். ஆனா திரும்ப முடியாத அளவுக்கு டிராபிக். 12 மணி நேரம் பஸ் நகரவேயில்லை. அதுக்கப்புறம் ஒரு வழியா கல்லூரிக்கு வந்தோம். தூதரக வழிகாட்டுதல்படி ருமேனியா எல்லை வழியா தமிழகத்துக்கு வந்து சேர்ந்தோம்'' என்கிறார் கண்களின் பதற்றம் விலகாமல்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஷகீரும் டிசம்பரில் உக்ரைன் சென்றவர்தான். ``நானும் அதே யுனிவர்சிட்டியிலதான் படிச்சேன். `நிலைமை மோசமா இருக்கு. இந்தியா கிளம்புறவங்க கிளம்பலாம்'னு எங்களுக்கு ரெண்டு வாரம் முன்னாடிதான் சொன்னாங்க. வழக்கமா 17,000 முதல் 30,000 வரை விமான டிக்கெட் இருக்கும். எல்லோரும் புக் பண்ண முயன்றதால ஒன்றரை லட்சம் வரைக்கும் போயிருச்சு. மார்ச் 8-ம் தேதி, 49,000-க்குக் கிடைச்சுச்சு. புக் பண்ணிட்டேன். 23-ம் தேதி, `போர் தொடங்கிடுச்சு... ஹாஸ்டலை அடைக்கப்போறோம்... தேவையான பொருளை வாங்கி வச்சுக்கோங்க'ன்னு யுனிவர்சிட்டியில சொன்னாங்க. ஹாஸ்டல்ல மொத்தம் 1,000 பேர். 3 பேர் மட்டும்தான் தமிழ். ஆரம்பத்துல இருந்து இந்தியத் தூதரகம் எங்ககூட தொடர்புல இருந்தாங்க.

எங்க கல்லூரியில `இண்டியன் ஸ்டூடண்ட்ஸ் சொசைட்டி'ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அவங்களும் நம்பிக்கையா இருந்தாங்க. அதோட தலைவர் டாக்டர் அனில் சர்மாவோட முயற்சியில பஸ்ல நாங்க ருமேனியா எல்லைக்கு வந்தோம். ஆனாலும் பயங்கர டிராபிக். எல்லாரும் லக்கேஜைத் தூக்கிக்கிட்டு 8 கி.மீ நடந்தோம். வழியில பல பேர் சாலையோரத்துல சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. பெட்ரோல் பங்குகள் மட்டும்தான் திறந்திருந்துச்சு. அங்கே அத்தியாவசியப் பொருள்கள் வித்தாங்க. ஒரு பெட்ரோல் பங்குல எங்களை ஒருங்கிணைச்சு உக்கார வச்சாங்க. 4 மணி நேரம் கடும் குளிர்ல உக்காந்திருந்தோம். அதுக்குப்பிறகு தூதரக அதிகாரிகள் ருமேனியாக்குள்ள கூட்டிக்கிட்டு வந்து விமானம் ஏத்தி அனுப்பினாங்க. டெல்லியில இறங்கின பிறகுதான் பதற்றம் தணிஞ்சுச்சு'' என்கிறார் ஷகீர்.