Published:Updated:

திண்டாடும் இலங்கை... திணறும் பாகிஸ்தான்... அவஸ்தையில் மக்கள்!

மகிந்த ராஜபக்சே, இம்ரான் கான்
பிரீமியம் ஸ்டோரி
மகிந்த ராஜபக்சே, இம்ரான் கான்

- அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

திண்டாடும் இலங்கை... திணறும் பாகிஸ்தான்... அவஸ்தையில் மக்கள்!

- அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

Published:Updated:
மகிந்த ராஜபக்சே, இம்ரான் கான்
பிரீமியம் ஸ்டோரி
மகிந்த ராஜபக்சே, இம்ரான் கான்

இந்தியாவுடன் பூகோளரீதியாகவும், அரசாங்கரீதியாகவும் நெருங்கிய தொடர்பிலிருக்கும் இரண்டு அண்டை நாடுகளான பாகிஸ்தானும் இலங்கையும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இரண்டு நாடுகளிலும் பொருளாதாரப் பிரச்னைகள், அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இலங்கை, பாகிஸ்தானில் என்ன நடக்கிறது?

திண்டாடும் இலங்கை... திணறும் பாகிஸ்தான்... அவஸ்தையில் மக்கள்!

இலங்கை

ஊரடங்கு... அவசரநிலை... சமூக ஊடகங்களுக்குத் தடை!

அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு, சீனாவிடம் பெற்ற அதீத கடன், அரசின் நிர்வாகக் கோளாறு, கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. `இந்தப் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று, ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும்’ என முதலில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க, பின்னர் மக்களும் போராட்டத்தில் களமிறங்கினர். கடந்த மாதத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், கடந்த வாரத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டையே முற்றுகையிட்டனர்.

மக்களும் எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராகத் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்ததால், ராணுவத்தைக் களமிறக்கியது அரசு. ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட, போலீஸ், ராணுவ வாகனங்கள் கொளுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர். போராட்டங்கள் வீரியமடைந்ததால், கடந்த வாரம் 36 மணி நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின்போதும் போராட்டங்கள் ஓயவில்லை. ஊரடங்கை மீறியதாக 600-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டனர். ஏப்ரல் 2-ம் தேதி முதல் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையை, ஏப்ரல் 5-ம் தேதி திருப்பப் பெற்றுக்கொண்டது அரசு.

போராட்டங்கள் பரவாமலிருக்க, சமூக ஊடகங்களுக்குத் தடைவிதித்தது இலங்கை அரசு. பின்னர், எதிர்ப்புகள் கிளம்ப, தடை நீக்கப்பட்டது. இலங்கையில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ராஜபக்சே அரசுக்கு எதிரான இந்தப் போராட்டங்களால் மீண்டும் ஒன்றிணைந்திருக்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும் ராஜபக்சே அரசுக்கும், குடும்பத்துக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேலா ஜெயவர்தனே, குமார் சங்ககாரா உள்ளிட்டோரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

திண்டாடும் இலங்கை... திணறும் பாகிஸ்தான்... அவஸ்தையில் மக்கள்!

பதவி விலகிய அமைச்சரவை!

நிலைமை கைமீறிப் போனதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவைத் தவிர அமைச்சரவையிலிருந்த 26 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்தவர்களில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும், சகோதரர் பசில் ராஜபக்சேவும் அடக்கம். இதையடுத்து, ``அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் அமைச்சர் பொறுப்புகளை ஏற்று, நாட்டின் நிலைமையைச் சரிசெய்ய முன்வர வேண்டும்’’ என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்புவிடுத்தார். ``இலங்கையை இந்த நிலைமைக்குத் தள்ளியவர்களின் அமைச்சரவையில் நாங்கள் இடம்பெற மாட்டோம். கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அவர்களது அமைச்சரவையில் பணியாற்றி, மக்களை ஏமாற்ற மாட்டோம். மக்கள் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் கடமை’’ என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் மட்டுமே தற்காலிக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். அதிலும், நிதியமைச்சராகப் பதவியேற்ற அலி சப்ரி, 24 மணி நேரத்துக்குள்ளாகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதிகாரிகள் சிலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவருகின்றனர். இதற்கிடையில், சிக்கன நடவடிக்கையாகச் சில நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடியிருக்கிறது இலங்கை.

திண்டாடும் இலங்கை... திணறும் பாகிஸ்தான்... அவஸ்தையில் மக்கள்!

நாடகமாடும் ராஜபக்சேக்கள்?

அமைச்சர்கள் மட்டும் பதவி விலகியிருப்பது குறித்து விமர்சிக்கும் போராட்ட இளைஞர்கள், ``மக்கள் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க, அமைச்சர்களை மட்டும் ராஜினாமா செய்யவைத்து இரண்டு ராஜபக்சேக்களும் நாடகமாடுகிறார்கள். இலங்கையைப் படுகுழியில் தள்ளிய இந்த இருவரும் ராஜினாமா செய்யும் வரை அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்’’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். #GoHomeRajapakshas #GoHomeGota ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளும் இலங்கையில் தொடர்ச்சியாக ட்விட்டர், ஃபேஸ்புக்கில் டிரெண்டாகிவருகின்றன. இந்த நிலையில், ``எந்தச் சூழ்நிலையிலும் அதிபர் பதவி விலக மாட்டார்’’ என்று அரசுத் தரப்பில் திட்டவட்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

225 உறுப்பினர்களைக்கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 157 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது ராஜபக்சே அரசு. மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, ஆளும் இலங்கை பொதுசன முன்னணிக் கட்சியின் கூட்டணியிலிருந்த சில கட்சிகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுவருகின்றன. ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் சிலரே, தாங்கள் சுயேச்சை எம்.பி-யாகச் செயல்பட விரும்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதனால் பெரும்பான்மையை இழந்துவிட்டது ஆளும் இலங்கை பொதுசன முன்னணி. ஆட்சியை இழக்க விரும்பாத கோத்தபய ராஜபக்சே, கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது. நாட்டின் நிலைமை சரியில்லை என்பதால், கோத்தபய ஆட்சியை இழந்தால், யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் பெருங்குழப்பம் நீடிக்கிறது.

மக்களின் பரிதாப நிலை!

இலங்கை மக்களில் பெரும்பாலானவர்கள், ராஜபக்சே குடும்பத்தின்மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பதையே கள நிலவரங்கள் சொல்கின்றன. போராட்டக்காரர்கள் சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``இலங்கையை இந்த நிலைமைக்குத் தள்ளியது ராஜபக்சே குடும்பம்தான். நாட்டைக் கொள்ளையடித்து, அழித்துவிட்டனர். நாங்கள் எதிர்க்கட்சிகளையும் நம்பத் தயாராக இல்லை. இனி இலங்கையின் நிலைமையை எந்தவொரு கட்சியாலும் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கில்லை. எங்களின் எதிர்காலம் என்னவாகும் என்றே தெரியவில்லை’’ என்று கண்ணீர்விட்டுக் கதறுகிறார்கள்.

தற்போது அரசாங்கம் என்ற ஒன்றே இல்லை என்ற நிலைதான் இலங்கையில் நீடிக்கிறது. சில துறைகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிபரும் பிரதமரும் தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடிவருகிறார்கள். `இலங்கையின் இந்த நிலை எப்போது சரியாகும்?’ என்ற கேள்விக்கு இப்போதுவரை யாரிடமும் பதில் இல்லை!

****

பாகிஸ்தான்

நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

இலங்கை அளவுக்கு இல்லாவிட்டாலும், பாகிஸ்தானிலும் பிரதான பிரச்னையாக இருப்பது பொருளாதார நெருக்கடிதான். இலங்கையைப்போலவே, பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கியக் காரணங்களுள் சீனாவிடம் பெற்ற அதீத கடனும் ஒன்றாக இருக்கிறது. `ராணுவத்தின் உதவியோடு ஆட்சிக்கு வந்தார்’ என்று குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாளடைவில் ராணுவத்தோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். கூடவே, பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொள்ள, இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் களமிறங்கின. விலைவாசி உயர்வால் மக்கள் மத்தியிலும் இம்ரான் கானின் இமேஜ் சரியத் தொடங்கியது. இதுதான் சரியான நேரம் என்று முடிவுசெய்து, இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன எதிர்க்கட்சிகள். இம்ரான் கானின் `பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்’ (பி.டி.ஐ) கட்சியோடு கூட்டணியிலிருந்த சில கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் பக்கம் சாய்ந்தன. இதனால், 176-ஆக இருந்த இம்ரான் கான் ஆதரவு உறுப்பினர்களின் பலம் 164-ஆகக் குறைந்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையையும் இழந்தது பி.டி.ஐ கூட்டணி.

திண்டாடும் இலங்கை... திணறும் பாகிஸ்தான்... அவஸ்தையில் மக்கள்!

தப்பித்த இம்ரான்!

இந்த நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு முன்பாகத் தொலைக்காட்சியில் பேசிய இம்ரான் கான், ``இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் சர்வதேசச் சதி. அமெரிக்காவின் கொள்கைகளை நான் தொடர்ந்து விமர்சித்துவருவதால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறது அந்நாடு’’ என்றார். இதையடுத்து, ஏப்ரல் 3-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பேசிய துணை சபாநாயகர் குவாசிம் சூரி, ``இம்ரான் கான் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், வெளிநாட்டுச் சதி இருப்பதாகத் தெரிகிறது. இது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 5-க்கு எதிரானது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தேசியப் பாதுகாப்புக்குப் பிரச்னை ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, இந்தத் தீர்மானத்தை ரத்துசெய்து உத்தரவிடுகிறேன்!’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்!

துணை சபாநாயகரின் உத்தரவால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியினருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 25 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கின்றன எதிர்க்கட்சிகள். இதற்கிடையில் இம்ரான் கான், ‘நாடாளுமன்றத் துணை சபாநாயகரின் முடிவை ஒவ்வொரு பாகிஸ்தானியரும் வரவேற்றிருக்கிறார்கள். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர்தல் நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். பாகிஸ்தானை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்விக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட அதிபர் ஆரிஃப், ``பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிடுகிறேன். இடைக்கால பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கானே பிரதமராக நீடிப்பார்’’ என்று அதிரடிகாட்டியிருக்கிறார்.

இம்ரான் கான் தரப்பிலிருந்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான குல்சார் அகமதுவை இடைக்காலப் பிரதமராகப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தரப்பிலிருந்தும் இடைக்காலப் பிரதமராக ஒருவரைப் பரிந்துரைக்குமாறு அதிபர் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீஃப், ``பிரதமரும் அதிபரும் பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். எனவே, நாங்கள் இதில் பங்கேற்கப்போவதில்லை. உச்ச நீதிமன்றத்தை நாடி, தீர்வுகாணவிருக்கிறோம்’’ என்றிருக்கிறார். இந்த நிலையில், 90 நாள்களில் பாகிஸ்தானில் தேர்தல் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

திண்டாடும் இலங்கை... திணறும் பாகிஸ்தான்... அவஸ்தையில் மக்கள்!

மிரட்டிய அமெரிக்கா?

“தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரி டொனால்டு லு-தான், தனது ஆட்சிக்கு எதிரான வெளிநாட்டுச் சதியில் ஈடுபட்டவர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இம்ரான் தப்பித்துவிட்டால், பாகிஸ்தான் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் வழியாக அவர்தான் மிரட்டல் விடுத்தார்’’ என்று இம்ரான் கான் சொல்லியிருக்கிறார். இதை அமெரிக்கா மறுத்துள்ளது. ``பாகிஸ்தான் மக்களின் அனுதாபத்தைப் பெறவே இப்படியெல்லாம் பொய் சொல்லிவருகிறார் இம்ரான் கான்’’ என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

இம்ரான் கானின் திட்டம்!

இந்த நிலையில் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய இம்ரான், ``நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகாமல், உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கின்றன. இது தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற எதிர்க்கட்சிகளின் அச்சத்தையே காட்டுகிறது’’ என்று பேசியிருக்கிறார். பாகிஸ்தான் அரசியலை உற்றுநோக்கும் சிலர், ``எதிர்க்கட்சிகளும் அமெரிக்காவும் இணைந்துதான் இம்ரானின் ஆட்சியைக் கலைத்துவிட்டார்கள் என்று பாகிஸ்தான் மக்களிடம் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறது பி.டி.ஐ கட்சி. இதன் மூலம் மக்கள் மத்தியில் அனுதாப அலையை ஏற்படுத்தி, அதிக இடங்களில் ஜெயித்துவிடலாம் என்ற திட்டத்திலிருக்கிறார் இம்ரான் கான். பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையே இருந்துவருகிறது. எனவே, எப்படியும் பி.டி.ஐ அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துவிட்டால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என இம்ரான் திட்டமிட்டுவருகிறார்’’ என்கிறார்கள்.

திண்டாடும் இலங்கை... திணறும் பாகிஸ்தான்... அவஸ்தையில் மக்கள்!

பாகிஸ்தான், இலங்கை என இரு நாடுகளும் அரசியல்வாதிகளின் சுயலாபத்தால்தான் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. நாடு வீழ்ச்சியடைந்த பின்னும் மக்களுக்காகச் சிந்திக்காமல், தங்களை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகளை என்ன செய்வது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism