Published:Updated:

இலங்கை நீதிபதிகளைச் சந்திக்க ஐ.நா தூதருக்கு திடீர் தடை!

இரா.தமிழ்க்கனல்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிறப்புத் தூதர் கிளமெண்ட் வூல், இலங்கையில் நேரடிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கிளமெண்ட் வூல்
கிளமெண்ட் வூல்

இலங்கையின் நிலைமையை ஆய்வுசெய்வதற்காக வந்த ஐ.நா தூதரின் ஒரு சந்திப்புக்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் மூலம் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்தத் தடையை விதிக்கக் காரணமாகச் செயல்பட்டுள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவுடன் ஐ.நா. சிறப்புத் தூதர் கிளமெண்ட் வூல்
இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவுடன் ஐ.நா. சிறப்புத் தூதர் கிளமெண்ட் வூல்

இலங்கையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும் சிறுபான்மை மக்கள்மீது ஆயுதத் தாக்குதல் நீடித்துவருகிறது. கடந்த ஏப்ரலில், கிறித்துவர்களின் `இயேசு உயிர்த்தெழுந்த நாள்’ அன்று, தொடர் குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதையடுத்து நாட்டில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

அடுத்த ஆண்டு ஜூனில் ஐநா மனித உரிமைப் பேரவையின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இலங்கையில் சுதந்திரம் மற்றும் அமைதியாகக் கூடுவதற்கான உரிமையின் நிலைமைகுறித்த அறிக்கை அதில் தாக்கல்செய்யப்பட உள்ளது.

கேப்பாப்பிலவு கிராமத்தில் போராடும் தமிழர்களைச் சந்தித்த கிளமெண்ட் வூல்
கேப்பாப்பிலவு கிராமத்தில் போராடும் தமிழர்களைச் சந்தித்த கிளமெண்ட் வூல்

இதையொட்டி, நிலைமையை நேரில் ஆய்வுசெய்வதற்காக, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிறப்புத் தூதர் கிளமெண்ட் வூல் தலைமையிலான குழுவினர், கடந்த 18-ம் தேதி முதல் இலங்கையில் நேரடிப் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளைமறுநாள் வெள்ளியன்று, அவரின் பயணம் நிறைவுபெற உள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களைச் சந்தித்த வூல், உள்ளூர் அரசு அதிகாரிகள், முக்கிய அரசுத் துறைகளின் பிரமுகர்களையும் சந்தித்துப் பேசினார். இதன் ஒரு பகுதியாக, இலங்கையின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளையும் அவர் சந்தித்துப் பேசுவதாக இருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே-வும் பிரச்னையைக் கிளப்பினார்.

கேப்பாப்பிலவு கிராமத்தில் போராடும் தமிழர்களைச் சந்தித்த கிளமெண்ட் வூல்
கேப்பாப்பிலவு கிராமத்தில் போராடும் தமிழர்களைச் சந்தித்த கிளமெண்ட் வூல்

அயல்நாட்டுக் குடிமகன் ஒருவருக்கு, இலங்கையின் நீதிபதி பதில் அளிப்பது, நீதிமன்ற அவமதிப்பாகும் என்று குறிப்பிட்டனர். அதையடுத்து, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூர்ய இதில் தலையிட்டு, சந்திப்பை ரத்துசெய்யுமாறு வெளியுறவு, நீதித் துறைகளின் அமைச்சகங்களைக் கேட்டுக்கொண்டார். அதன்பேரில், அச்சந்திப்பு ரத்துசெய்யப்பட்டதாக இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜயசூர்ய தெரிவித்தார்.