Published:Updated:

தமிழர், இந்தியர் வாக்குகளைக் குறிவைத்து நகரும் பிரிட்டன் தேர்தல்... பி.ஜே.பி தலையிடுகிறதா?

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிற நிலையில் அங்கே ப்ரெக்ஸிட் போன்ற உள்நாட்டு விவகாரங்களைத் தாண்டி வெளிவிவகாரங்களும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

 பிரிட்டன் தேர்தல்
பிரிட்டன் தேர்தல்

2016-ம் ஆண்டு ப்ரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பிறகிருந்தே பிரிட்டனில் அரசியல் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழவை `ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ ஐந்து ஆண்டுகள் கால அளவு கொண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்போது மூன்றாவது பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது பிரிட்டன். இந்தத் தேர்தல் பிரிட்டனின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. கன்சர்வேடிவ், லேபர் ஆகியவை பிரதானமான இரு கட்சிகளாக விளங்குகின்றன. 650 நாடாளுமன்ற இடங்களுக்கு டிசம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்

2015-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற ப்ரெக்ஸிட் வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக தெரசா மே பிரதமராகப் பதவியேற்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ப்ரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிப்பதே தெரசா மேவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த நிலையில் 2017-ம் ஆண்டு திடீரென முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தெரசா மே முடிவெடுத்தார். ஆனால், கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. மற்ற சிறு கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியே அமைந்தது.

அதைத் தொடர்ந்தும் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் கடந்த ஜூன் மாதம் தெரசா மே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் புதிய பிரதமராகப் பதவியேற்றார். ஆனாலும் ப்ரெக்ஸிட் சர்ச்சை முடிந்ததாக இல்லை. ப்ரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தத்துக்கு போரிஸ் ஜான்சனாலும் நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற அக்டோபர் 31 காலக்கெடுவாக இருந்தது.

therasa may - boris johnson
therasa may - boris johnson

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் முடக்கியது போரிஸ் ஜான்சன் அரசு. இதற்கு எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேறுவழியின்றி போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது. புதிய ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டன் சந்திக்கும் மூன்றாவது பொதுத்தேர்தல் இது.

எப்படியும் இந்த முறை பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்பதில் இரண்டு பிரதானக் கட்சிகளும் குறியாக இருக்கின்றன. ப்ரெக்ஸிட்டையும் கடந்து வெளி விவகாரங்கள் இந்தத் தேர்தலில் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கின்றன. பிரிட்டன் வந்துசென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக போரிஸ் ஜான்சனை ஆதரித்து சர்ச்சையைக் கிளப்பினார். உள்நாட்டு விவகாரத்தில் டிரம்ப் அத்துமீறித் தலையிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் கடுமையாக எதிர்த்தார். அதைக் கடந்தும் இந்தியா, இலங்கை விவகாரங்கள் பிரிட்டன் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.

Overseas friends of BJP
Overseas friends of BJP

தற்போது இந்திய ஆளுங்கட்சிக்கு ஆதரவான `Overseas friends of BJP அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிட்டன் தேர்தலில் லேபர் கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து, அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் எனச் சர்வதேச அளவில் குரல்கள் எழுந்துள்ளன. லேபர் கட்சியின் கூட்டத்திலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லேபர் கட்சி இந்தியாவின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதாக `Overseas friends of BJP' தலைவர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியர்களின் வாக்குகள் கணிசமாக உள்ள 45க்கும் மேற்பட்ட தொகுதிகளில் லேபர் கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சிக்கு நாங்கள் ஆதரவானவர்கள் என்றாலும், இதில் அவர்களின் நேரடி தலையீடு கிடையாது என்றும் விளக்கமளித்துள்ளார்.

இதற்கு லேபர் கட்சியும் விரைந்து எதிர்வினையாற்றியுள்ளது. லேபர் கட்சியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனிநபர் முன்மொழிந்தது. இதில் தலைமைக்கு சம்பந்தம் கிடையாது. காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்தான். ஆனால், காஷ்மீர் மக்களின் தனி மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் லேபர் கட்சியின் நிலைப்பாடு என அதன் தலைவர் ஐயன் லேவரி விளக்கமளித்துள்ளார்.

ஹௌடி மோடி
ஹௌடி மோடி

அமெரிக்காவில் நடைபெற்ற ஹௌடி மோடி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்ததாக சர்ச்சை எழுந்தது. அதன்பிறகு மோடியின் கருத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் கொடுத்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் சர்ச்சையாக வெடித்தன. தற்போது பிரிட்டன் தேர்தலில் அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவும் மறைமுகமாக தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பாரதிய ஜனதா கட்சி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்தியர்கள் போலவே பிரிட்டனில் புலம்பெயர்ந்து சென்ற இலங்கைத் தமிழர்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளன. அதைக் கவர்வதற்கும் இரண்டு கட்சிகள் முனைந்து வருகின்றன. இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கும் தீர்வு காணப்படும் என கன்சர்வேடிவ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழர்களின் இருநாடு பிரச்னைக்கான தீர்வு என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ஏற்கெனவே பிரிட்டனுக்குள்ளுமே தனி ஸ்காட்லாந்துக்கான கோரிக்கை இருந்துவருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் பிரதானக்கட்சிகள் மௌனம் காத்து வருகின்றன. லேபர் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் பா.ஜ.க தீவிரமாக வேலை செய்வதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் குற்றம்சாட்டியுள்ளார். வலதுசாரி கட்சிகள் உலக அளவில் வளர்வது ஆபத்தான போக்கு என்றும் பேசியுள்ளார்.

பிரிட்டன் தமிழர்கள்
பிரிட்டன் தமிழர்கள்

வாக்கு விகிதத்திலும், வெற்றி பெற்ற இடங்களிலுமே கடந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் மிகவும் சிறிய வித்தியாசமே இருந்ததால், இந்தத் தேர்தல் முடிவுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. பிரிட்டனில் 'Marginal seats' எனச் சொல்லப்படுவது மிகக் குறைவான வித்தியாசத்தில் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய இடங்கள். 650 இடங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்கள் இதுபோன்ற 'Marginal seats' எனச் சொல்லப்படுகிறது. தமிழர்கள், இந்தியர்களின் வாக்குகளைக் குறிவைத்து காய்கள் நகர்த்தப்படுகின்றன. யாருடைய பகடை வெல்லும் என்பதைத் தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும். நாளை தேர்தல் நடக்கிறது. நாளை மறுநாளே எல்லாம் தெரிந்துவிடும்.

தொடரும் பிரெக்ஸிட் குழப்பம்... பிரிட்டன் வெளியேறுமா, வெளியேறாதா?