Published:Updated:

Ghost town : "ஊரைவிட்டு வெளியே வந்தா நாங்க இறந்துடுவோம்" - ஒரு கிராமத்தின் கதறல்!|பகுதி 6

Ghost town
Ghost town

கோபத்திலிருந்த இம்பர் கிராம மக்கள் 2,000 பேர் ,1960-ம் ஆண்டு இம்பர் கிராமத்துக்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், அரசாங்கம் வானில் போர் விமானங்களைப் பறக்கவிட்டு, அவர்களை பயமுறுத்தியது.

இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் வில்ட்ஷைர் (Wiltshire) என்று ஒரு மாகாணம். இந்த மாகாணத்தின் ஒரு மூலையில் இருக்கும் சின்ன கிராமம்தான் இம்பர் (IMBER). மிகவும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், அழகாகவும் வாழ்ந்துகொண்டிருந்த இந்தக் கிராம மக்களுக்கு 1943, நவம்பர் 1-ம் தேதி இங்கிலாந்தின் 'War Office'-லிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் காலங்களில் இங்கிலாந்தின் ராணுவத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த War Office -க்குத்தான் இருந்தது. ``Imber கிராமவாசிகள் அனைவரும் உடனடியாக உங்கள் கிராமத்தைக் காலி செய்யவும். ராணுவ அவசரம்.” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. கடிதம் வந்ததும், ராணுவ வீரர்களும் வந்தார்கள். வழக்கமாகப் பல அரசுகளும் கடைப்பிடிக்கும் ஒரு யுக்திதான்… `நாட்டுக்காக… நாட்டின் நலனுக்காக இந்தத் தியாகத்தை செய்யுங்கள். சில நாள்கள் உங்கள் கிராமத்தை எங்களுக்குத் தாருங்கள். போர் முடிந்ததும் நாங்கள் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதைக் கேட்டு வேறு வழியில்லாமல், மக்களும் ஊரைக் காலி செய்தார்கள்.

Ghost town
Ghost town

போர் முடிந்தது. ஆனால், இன்றுவரை அந்த மக்களுக்கு இங்கிலாந்து அரசு அவர்கள் கிராமத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இம்பர் கிராமத்துக்குத் தோராயமாக 1,000 ஆண்டு வரலாறு உண்டு. ஓர் அழகான கிராமம். 800 வருட பழைமையான தேவாலயம் ஒன்று இம்பரில் இருந்தது. வார இறுதிகளில், ஊர் மக்கள் கூட்டமாக வந்து இங்கு வழிபடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள். ஏழைகளும் பணக்காரர்களும் கலந்தே இந்த கிராமத்தில் வாழ்ந்துவந்தார்கள். கீற்றுக் கொட்டகைகளும் இருந்தன, பங்களாக்களும் இருந்தன. அனைவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவந்தனர். அந்தக் கிராமத்தில் ஆல்பர்ட் நேஷ் ( Albert Nash ) என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குத் தன் கிராமம் என்றால் உயிர். ஆல்பர்ட்டுக்கு தன் கிராமத்தில் இருக்கும் அனைவரையும் தெரியும். கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆல்பர்ட்டையும் தெரியும். மனிதர்கள் மட்டுமல்லாமல் கிராமத்திலிருக்கும் ஆடு, மாடு, கோழிகள், நாய்கள், மரங்கள், செடி, கொடிகள் என ஆல்பர்ட்டுக்குத் தெரியாத விஷயங்களே இல்லை எனலாம்.

Ghost town
Ghost town

சமயங்களில் யாராவது வேடிக்கையாக ஆல்பர்ட் நேஷிடம், ``என்ன ஆல்பர்ட்... ஊரை உங்களுக்கு இவ்வளவு பிடிக்கிறதே… ஒருவேளை ஊரைவிட்டு உங்களை வெளியேற்றினால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டால், ``ஊரைவிட்டுல் காலடியெடித்து வைத்தால் என் உயிர் பிரிந்துவிடும்” என்று உணர்ச்சி பொங்கச் சொல்வார். ஆனால், இறுதியில் அவர் சொன்னதுதான் நடந்தது. இரண்டாம் உலகப் போர் சமயம். ஜெர்மானியப் படைகள் பெரும் வீச்சில் முன்னேறிக்கொண்டிருந்தன. மேற்கு ஐரோப்பா முழுக்க ஜெர்மனின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. அந்தச் சமயம், இங்கிலாந்து படையும், அமெரிக்கப் படையும் இணைந்து `Operation Overlord’ என்ற பெயரில் ஜெர்மனுக்கு எதிரான ஒரு திட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

இந்த Military Operation-க்கு அவர்கள் நிறைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்காக, வில்ட்ஷைர் (Wiltshire) மாகாணத்தின் பல பகுதிகளிலும் ராணுவப் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1943-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி… இம்பர் (Imber) கிராமத்திலிருந்து 4 மைல் தூரத்தில் போர் விமானங்களைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதலுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 6 Spitfire வகை போர் விமானங்களும், 6 Hurricane ரக போர் விமானங்களும் இதில் ஈடுபட்டிருந்தன.

தரையில் அவர்களுக்கான Dummy Targets வைக்கப்பட்டு அதை நோக்கி அவர்கள் சுட வேண்டும் என்பது தான் பயிற்சி. 11 போர் விமானங்கள் பயிற்சியைத் திட்டமிட்டபடி சரியாக முடிக்க… கடைசி Hurricane விமானத்தை அமெரிக்க ராணுவ வீரர் William Mclachlan ஓட்டிக்கொண்டு வந்தார். தரையில் இருந்த Dummy Targets-க்கு பதிலாக, மனிதர்கள் இருந்த இடத்தில் தவறுதலாக குண்டுகளைப் போட்டார். இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். 70 பேருக்கும் மேல் படுகாயமடைந்தார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு, ராணுவம் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிகளில் எந்த மக்களும் இருக்கக் கூடாது என்று முடிவுசெய்தது War Office. அதன் பொருட்டுத்தான் இம்பர் (Imber) கிராமத்தை காலி பண்ணச் சொன்னது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், திரும்பவும் ஊர் திரும்பிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் ஊர் மக்கள். ஆனால், இங்கிலாந்து அரசாங்கம் அந்தப் பகுதி முழுவதுமாக `நிரந்தர ராணுவ பயிற்சிப் பள்ளி”யாக அறிவித்தது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்பட்ட போர்களுக்கு ஏற்றவாறு, அந்த ஊரை மாற்றி அமைத்தார்கள். அதாவது, பனிப்போர் காலத்தில் அது ரஷ்ய நகரமாக மாறியது, ஆப்கன் போரின்போது ஆப்கானிஸ்தானின் கிராமமாக மாற்றியமைக்கப்பட்டது. இப்படியாக, அந்த ஊரை மாற்றி ராணுவம் தனக்கான பயிற்சிகளை மேற்கொண்டது. இம்பர் மேற்கொண்ட இந்தப் பல உருமாற்றங்கள், பல நூறு வருடங்களாக அங்கு வாழ்ந்துவந்த அந்த மக்களைப் பெரும் கோபத்துக்குள்ளாக்கியது. கோபத்தி்லிருந்த Imber கிராம மக்கள், 2,000 பேர் , 1960-ம் ஆண்டு இம்பர் கிராமத்துக்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், அரசாங்கம் வானில் போர் விமானங்களைப் பறக்கவிட்டு, அவர்களை பயமுறுத்தியது. காவல்துறை குற்றவாளிகளைக் கையாள்கிற மாதிரி அந்தப் பூர்வகுடி மக்களைக் கையாண்டு அந்தப் போராட்டத்தைக் கலைத்தது.

Ghost town
Ghost town

1961-ம் ஆண்டு, வருடத்துக்கு மூன்று நாள்கள் மட்டும் கிராம மக்களை ஊருக்குள் அனுமதிப்போம் என்று அரசாங்கம் அறிவித்தது. மீண்டும் 1980-ம் ஆண்டு `Greenham Common Camp’ எனும் அமைப்பைச் சேர்ந்த நான்கு பெண்கள், இம்பர் கிராமத்துக்குள் நுழைந்து, அந்தக் கிராமத்தை உரிய மக்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்தார்கள். ஆனால், அரசாங்கம் அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களையும் சிறையிலடைத்தது. ``இது வெறும் கிராம மீட்புக்கான போராட்டம் மட்டும் கிடையாது, இது அரசின் சர்வாதிகாரத்துக்கு எதிரான குரல்” என்று இம்பருக்காகப் போராடும் பலரும் சொல்கிறார்கள். ஊரைக் காலி பண்ணிப் போன ஆறு வாரங்களில் ஆல்பர்ட் நேஷ் மரணத்தைத் தழுவினார். அந்த ஆறு வாரங்களும் அவர் யாரிடமும், எதுவும் பேசவில்லை.

Ghost town
Ghost town

``ஒருவேளை நான் இறந்துவிட்டால் என்னை இம்பருக்குக் கொண்டு சென்று அந்த மண்ணில் புதையுங்கள்” என்று மட்டும் சொல்லியிருந்தார். அவர் இறந்ததும், அரசாங்கத்திடம் பெரும் சண்டையிட்டு ஊர்மக்கள் அவரை இம்பரில் கொண்டு புதைத்தார்கள். அனுதினமும் வெடிக்கப்படும் குண்டு மழைகளுக்கு நடுவே அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார் ஆல்பர் நேஷ்.

``போரில் எங்கள் நாடு வென்றது. ஆனால், எங்கள் கிராமம் சுதந்திரத்தை இழந்தது” என்ற அவரின் குரல், குண்டுச் சத்தங்களைத் தாண்டி அரசின் காதுகளுக்கு எட்டவேயில்லை.

பகுதி 6-க்குச் செல்ல...

Ghost Town: தப்பிக்க நினைச்சா மரணம்; வாழ நினைச்சா துயரம்! -  மிரட்டும் மிதக்கும் நகரம்! | பகுதி 6
அடுத்த கட்டுரைக்கு