Published:Updated:

`சமையல் வேலை... மருத்துவருக்கு உதவி!’ -அரச பணிகளைத் துறந்து சேவை செய்யும் ஸ்வீடன் இளவரசி #Corona

இளவரசி சோஃபியா
இளவரசி சோஃபியா

ஸ்வீடன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி சோஃபியா, தன் அரச பணிகளைத் துறந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்துவருகிறார்.

மனித குலத்தை வீட்டுக்குள் சிறைவைத்திருக்கும் கொரோனா, ஏழை, பணக்காரர், நாட்டின் தலைவர், பிரபலம், சினிமா நட்சத்திரம் போன்ற எதையுமே பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனா ஊரடங்கால் உலகப் பணக்காரர்களின் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு இருக்கும் அதே அளவுக்கு பணக்காரர்களின் உதவியும் அதிக அளவிலேயே உள்ளது. பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கிவருகின்றனர்.

இளவரசி சோஃபியா
இளவரசி சோஃபியா

பண உதவியையும் தாண்டி, தானே களத்தில் இறங்கி சேவை செய்துவருகிறார், ஸ்வீடன் இளவரசி. ஸ்வீடன் வார்ம்லேண்டின் டச்சஸாக இருப்பவர் இளவரசி சோஃபியா. 35 வயதாகும் இவர், அந்நாட்டின் மாடல் அழகியாகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் உள்ளார். 2015-ம் ஆண்டு, ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப்பை திருமணம் செய்துக்கொண்டு, அந்நாட்டின் அரச குடும்பத்தின் உறுப்பினரானார்.

`கதிகலங்கிய ஸ்பெயின்; தள்ளி நிற்கும் ஸஹாரா!’ - மலைக்கவைக்கும் மலை நகரம் #Corona

இவர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்துவருகிறார். உலகை உலுக்கும் கொரோனா வைரஸால் ஸ்வீடனில் இதுவரை 12,500-க்கும் அதிகமானவர் பாதிக்கப்பட்டு 1,300-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தக் கடுமையான சூழலில், பண உதவியையும் தாண்டி வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், இளவரசி அந்தஸ்து மற்றும் அரச வேலைகளைத் துறந்து, இந்தப் பணியில் இறங்கியுள்ளார்.

சோஃபியா
சோஃபியா
AP

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சோஃபியா ஹெமெட் மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அங்கு, முறையாக சேவை செய்வதற்காக நான்கு நாள் ஆன்லைனில் பயிற்சிபெற்று, நேற்று முன் தினம் முதல் பணிக்குச் சேர்ந்துள்ளார். மருத்துவமனையில் பணி செய்யும் பிற பணியாளர்களைப்போல் சோஃபியாவும் ஒரே மாதிரியான யூனிபார்ம் அணிந்துள்ளார். இளவரசி என்பதால் கொரோனா நோயாளிகளை நேரடியாக நெருங்கும் பணி இவருக்கு வழங்கப்படவில்லை.

` ஒரு மாத பென்ஷன்; சுகாதாரப் பணியாளர்களுக்கு மாஸ்க்..!' - அசரவைக்கும் 95 வயது மூதாட்டியின் சேவை

மாறாக, அங்கு இருக்கும் மருத்துவர்களுக்கு உதவுவது, கிருமிநாசினி தெளிப்பது, நோயாளிகளுக்குத் தேவையான உணவு தயாரிப்பது, சுத்தம்செய்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். இதுமட்டுமல்லாது, அந்த மருத்துவமனையில் சோஃபியா போன்ற பல தன்னார்வலர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதிலும் இளவரசி கலந்துகொண்டு பயிற்சியளித்துவருகிறார். சோஃபியா ஹெமெட் மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர், இளவரசி அங்கு வேலைசெய்வதை அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளார்.

இளவரசி சோஃபியா
இளவரசி சோஃபியா
AP

' தற்போது நாம் காணும் நெருக்கடியில், சுகாதார பணியாளர்களின் பெரும் சுமையைக் குறைத்து, அவர்களுக்கு உதவிசெய்ய இளவரசி விரும்புகிறார். அவர் ஒரு தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறார்’ என ஸ்வீடன் அரச குடும்பம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு