சிரியாவின் (Syria) வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள 'இட்லிப்' (Idlib) என்ற இடத்தில் கடந்த சில வாரங்களாகவே வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சிரிய விமானப் படை மற்றும் ரஷ்யப் படை நடத்திய தாக்குதலில் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால், அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் இட்லிப் நகரைச் சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்ளில் பரவி மனதை உருகவைக்கும்விதமாக இருக்கிறது.
அந்த நகரத்தில் வசிக்கும் ஒரு தந்தை, தன் 4 வயதுக் குழந்தையிடம் இந்தத் தாக்குதலால் பயப்படக் கூடாது என்றுகூறி `சிரிக்கும் விளையாட்டு' ஒன்றை விளையாடுகிறார். அந்த நகரத்தின் மீது ஒவ்வொரு முறை குண்டு விழும்போதும் சிரிக்க வேண்டும். இதுதான் விளையாட்டு. இதை நம்பி ஒவ்வொரு முறை வெடிகுண்டு விழும்போதும் அந்தக் குழந்தை சிரிக்கிறது. இதை அந்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதைக் காணும்போது, குழந்தைகளுக்கு ஏற்ற உலகத்தை உருவாக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் உலகத்தைப் பாதுகாக்கக்கூட முடியவில்லை என்ற இயலாமையே எழுகிறது.
மனிதத்தைவிட அதிகாரம்தான் முக்கியம் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் சுயநலமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயலாமையில் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழிதான் என்ன?
அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பு கேட்பது ஒன்றே ஒன்றுதான்... `போர்களை நிறுத்துங்கள்..!'