Published:Updated:

தைவான்: அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து... 46 பேரை பலி கொண்ட சோகம்

தைவானில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கௌஷியாங் (Kaohsiung) நகரத்தில், பழமையான 13 மாடிக் கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் அடுக்கு மாடி குடியிருப்பாகவும், வர்த்தக வளாகமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த கட்டடத்தில் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரு இடத்தில் ஏற்பட்ட தீ, மளமளவென்று கட்டடம் முழுவதும் பரவத் தொடங்கியது.

தைவான் தீ விபத்து
தைவான் தீ விபத்து
Twitter

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டடம் எரிந்ததால் உண்டான புகை, அந்த பகுதி முழுவதும் பரவிக் காணப்பட்டது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் இறந்த நிலையில் 32-க்கும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 60-க்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 14-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த கட்டடம் 40 ஆண்டுகள் பழமையான கட்டடம் என்றும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும்பகுதியை யாரும் வசிக்கவில்லை என்றும் கௌஷியாங் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவான் தீ விபத்து
தைவான் தீ விபத்து
Twitter

தீயில் கட்டடத்தின் பெரும்பகுதி எரிந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு வெடிக்கும் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கட்டடத்தில் மேலும் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு