Published:Updated:

தை‘வானில்’ பறந்த சீனப் போர் விமானங்கள்! - அதிகரிக்கும் போர்ப் பதற்றம்...

தைவான்
பிரீமியம் ஸ்டோரி
தைவான்

இரண்டாம் உலகப்போரின் முடிவில், சியாங் கை ஷெக்கின் ‘சீனக் குடியரசு’ அமைப்பைத்தான் சீனாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

தை‘வானில்’ பறந்த சீனப் போர் விமானங்கள்! - அதிகரிக்கும் போர்ப் பதற்றம்...

இரண்டாம் உலகப்போரின் முடிவில், சியாங் கை ஷெக்கின் ‘சீனக் குடியரசு’ அமைப்பைத்தான் சீனாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

Published:Updated:
தைவான்
பிரீமியம் ஸ்டோரி
தைவான்

“கடந்த 40 வருடங்களில் இல்லாத அச்சுறுத்தலை இப்போது நாம் சந்தித்திருக்கிறோம். நமது வான் எல்லையில் சீனப் போர் விமானங்கள் அத்துமீறி நுழைவது போர்ப் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது...” - தைவானின் நாடாளுமன்றக்குழுவில் அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் சியூ குவோ-செங் உதிர்த்த வார்த்தைகள் இவை. அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து அடுத்தடுத்த நாள்களில் 150 சீனப் போர் விமானங்கள் தைவானின் வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததைத்தான் அமைச்சர் சியூ பதற்றமாகக் குறிப்பிடுகிறார். நீண்டகாலமாகவே நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்த தைவான் - சீனா பிரச்னை தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது.

தை‘வானில்’ பறந்த சீனப் போர் விமானங்கள்! - அதிகரிக்கும் போர்ப் பதற்றம்...

தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்தப் பதற்றம் இப்போது முளைத்ததல்ல. சீனாவின் குயிங் அரச வம்சத்தின் ஆளுகையிலிருந்த தைவான் தீவு, 1895-ல் நடந்த முதலாவது சீனா - ஜப்பான் போரில் ஜப்பான் வெற்றிபெற்றதால் அந்த நாட்டின் வசம் சென்றது. இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் வீழ்த்தப்படும் வரை தைவான் தீவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனாவால் முடியவில்லை. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன், மாவோ தலைமையிலான புரட்சிப் படைகளின் கை சீனாவில் ஓங்கியது. மாவோ படைகளிடம் சிக்காமலிருக்க தைவானில் தஞ்சம் புகுந்த சீனத் தலைவர் சியாங் கை ஷெக், 1949-ல் ‘சீனக் குடியரசு’ அரசாங்கத்தை தைவானில் நிறுவினார். மொத்த சீன நிலப்பரப்புக்கும் தாங்கள்தான் தலைவர்கள் என சியாங் கை ஷெக் தரப்பினர் சொந்தம் கொண்டாடினர். அதை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மேலும், தாங்கள் நிறுவிய ‘சீன மக்கள் குடியரசு’ கட்டுப்பாட்டில்தான் தைவான் தீவு இருப்பதாக, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் தரப்பு கூறிவருகிறது. அப்போது ஆரம்பித்த பிரச்னை இப்போது வரை முடியவில்லை.

சீனா - தைவான் பிரச்னையின் பின்னணியைப் பற்றிப் பேசும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள், “இரண்டாம் உலகப்போரின் முடிவில், சியாங் கை ஷெக்கின் ‘சீனக் குடியரசு’ அமைப்பைத்தான் சீனாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. பாதுகாப்பு சபையிலும் இடமளிக்கப்பட்டது. பிற்பாடு தைவானுக்கு சியாங் கை ஷெக் தப்பிச் சென்றபோதும், ஐ.நா-வின் இந்த நிலைப்பாடு மாறவில்லை. அதேநேரத்தில், சீனாவில் ஆட்சியைப் பிடித்த மாவோவின் ‘சீன மக்கள் குடியரசு’ அமைப்பின் ஆதிக்கம் சர்வதேச அளவில் விஸ்தாரமானது. சீன நிலப்பரப்பில் முழு ஆதிக்கத்தை நிறுவியதாலும், ராணுவரீதியாக வலுப்பெற்றதாலும், ‘சீன மக்கள் குடியரசு’ அமைப்பை சீனாவின் ஒற்றைத் தலைமையாக ஏற்றுக்கொள்ளவேண்டிய நெருக்கடி சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டது. இதனால், 1971-ல் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் எண்.2758-ன்படி, ‘சீன மக்கள் குடியரசை’ சீனாவின் ஒற்றைத் தலைமையாக அங்கீகரித்தது ஐ.நா. இதை உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டன. ஐ.நா-வில் சத்தமில்லாமல் நிராகரிக்கப்பட்டது தைவானிலிருந்து செயல்பட்ட சீனக் குடியரசு அமைப்பு!

90-களில் தைவானின் தலைவராக இருந்த லீ டெங் ஹுய், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். இதன்படி தேர்தல் நடத்தப்பட்டு, ஜனநாயக முறைப்படி 1996-லிருந்து ஆட்சியாளர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். கம்யூனிச பொலிட் பீரோ ஆட்சி முறையைக் கடைப்பிடிக்கும் சீனா இதை விரும்பவில்லை. தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லிவரும் ஒரு நிலப்பரப்பில், ஜனநாயகம் பூத்ததை தங்கள் ஆட்சி முறைக்கு அச்சுறுத்தலாகவே சீனா பார்க்கிறது. தவிர, 2016 அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற சாய் இங் வென், `தைவான் ஒரு சுதந்திர அமைப்பு’ என்கிற கோஷத்தை வலுவாக முன்வைத்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தை‘வானில்’ பறந்த சீனப் போர் விமானங்கள்! - அதிகரிக்கும் போர்ப் பதற்றம்...

தைவான் அரசுடன் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ள, ‘ஒரு நாடு இரு அமைப்பு முறை’ என்ற திட்டத்தை ஜனவரி 2019-ல் முன்வைத்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். ஆனால், அதை சாய் இங் வென் ஏற்க மறுத்துவிட்டார். இந்தப் பிரச்னையின்போதே இரண்டாவது முறையாக 2020-ல் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார் சாய் இங் வென். அப்போதிலிருந்தே தைவானின் வான் எல்லைக்குள் சீனப் போர் விமானங்கள் பறப்பது அதிகரித்தது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வான பிறகு, தைவான் ராணுவத்துக்கு அமெரிக்கா அளிக்கும் ராணுவப் பயிற்சி, ஆயுத உதவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கெல்லாம் எச்சரிக்கைவிடுப்பது போலத்தான், கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 150 போர் விமானங்களை தைவானின் வான் எல்லைக்குள் அனுப்பி அதிரடி காட்டியிருக்கிறது சீனா. இதற்கு தைவான் அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், உலக அளவில் 15 நாடுகள் மட்டுமே அவர்களை அங்கீகரித்திருப்பதால், தைவானின் குரல் சர்வதேசத்தை எட்டவில்லை. இந்த விவகாரத்தில் அமெரிக்கா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே காட்சிகள் மாறும்’’ என்கிறார்கள்!

சியூ குவோ-செங்
சியூ குவோ-செங்

ஒருவேளை ராணுவ நடவடிக்கை மூலமாக தைவானைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா முயன்றால், அமெரிக்க ராணுவத்தின் தயவை நாடும் தைவான் அரசு. ஆனால், மற்றொரு வியட்நாம் காட்சிகளைச் சந்திப்பதற்கும், சீனாவைத் தேவையில்லாமல் பகைத்துக் கொள்வதற்கும் அமெரிக்கா விரும்பவில்லை. இந்த விவகாரத்தில், பின்னணியிலிருந்து மட்டுமே உதவ அமெரிக்கா முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 2014-ல் உக்ரைனின் ஆளுகைக்குள் இருந்த க்ரீமியாவைத் தன் ராணுவ நடவடிக்கையால் ரஷ்யாவின் ஓர் அங்கமாக மாற்றிக்கொண்டது ரஷ்ய அரசு. அப்போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன் நிறுத்திக்கொண்டன. அதேபோல, தைவானை சீனா கைப்பற்றினாலும், சீனாவுடன் இருக்கும் வணிகத் தொடர்புகள் காரணமாக அதை எத்தனை நாடுகள் எதிர்க்கும் என்பது கேள்விக்குறிதான்!