Published:Updated:

`சுற்றிவளைக்கப்பட்ட தலைநகர் காபூல்.. திணறும் ராணுவம்!' - தாலிபன்கள் வசமாகிறதா ஆப்கானிஸ்தான்?

தாலிபன்
தாலிபன்

அமெரிக்காவின் தலையீட்டால் 2001-ல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து 'மீண்டும் நாங்கள் காபூலைக் கைப்பற்றுவோம்!' என்று சூளுரைத்து விட்டு வெளியேறிய தாலிபன்கள் 20 வருடங்கள் கழித்து தற்போது காபூலை முழுமையாகக் கைப்பற்றவிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தாலிபன்களுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு வந்த அமெரிக்கப் படைகள் காரணமாக இதுவரை அமைதி காத்து வந்த தாலிபன்கள் தற்போது அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறி வருவதைத் தொடர்ந்து மீண்டும் அந்நாட்டைக் கைப்பற்றத் தீவிரம் காட்டி வருகின்றன.

அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனத் தலைவரான ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் அளித்த குற்றத்திற்காகத் தாலிபன்களுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ஆப்கானிஸ்தானுக்கு 2001-ல் அனுப்பி வைத்தது. அமெரிக்கப் படைகளின் ஆயுத பலத்திற்கு முன்பு எதிர்த்துப் போரிட முடியாமல் போன தாலிபன்கள் அதுவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காபூல், காந்தஹார், ஜலாலாபாத் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களைத் தாலிபன் எதிர்ப்பு படைகளிடமும், அமெரிக்கப் படைகளிடமும் முழுமையாக ஒப்படைத்து விட்டு வெளியேறினர்.

ஜோ பைடன் |
ஜோ பைடன் |
Andrew Harnik

அமெரிக்கப் படைகளின் உதவியுடன் தாலிபன்களை அடக்கிய ஆப்கானிஸ்தான் அரசு அதற்குப் பிறகு, பயங்கரவாதிகளிடம் இருந்து அந்நாட்டை முழுமையாகக் கைப்பற்றியது. இருப்பினும், தாலிபன்களை முழுமையாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக இருந்து வந்தது. அமெரிக்காவுக்கும் தாலிபன்களுக்கும் இடையேயான இந்த மிக நீண்ட போரில் தாலிபன்களைக் கண்காணித்து வரும் நான்காவது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவார்.

அமெரிக்கப் படைகளின் கண்காணிப்பு ஆப்கானிஸ்தான் முழுவதும் பலமாக இருந்து வந்ததால் தாலிபன்கள் இத்தனை ஆண்டு காலமாகப் பதுங்கி இருந்தனர். ஆனால், தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டு வந்த படைகளை அங்கிருந்து திரும்பப்பெறுவதாகச் சமீபத்தில் அறிவித்தார். அதையடுத்து, அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. 90 சதவீத அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், பதுங்கியிருந்த தாலிபன்கள் தற்போது பாயத் தொடங்கியிருக்கின்றனர்.

வெளியேறிய அமெரிக்கா; கால்பதிக்கும் சீனா; தாலிபன்களால் ரத்த பூமியான ஆப்கானிஸ்தான்! - என்ன நடக்கிறது?

2001-ல் அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களால் சரணடைந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வெளியேறிய போது 'மீண்டும் காபூலைக் கைப்பற்றுவோம்!' என்று சூளுரைத்து விட்டு தாலிபன்கள் வெளியேறினார்கள். சரியாக 20 வருடங்கள் கழித்து தாலிபான்கள் தற்போது தலைநகர் காபூலை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். காபூலில் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றி விட்ட நிலையில், தாலிபான்கள் காபூலை முழுமையாகக் கைப்பற்ற இன்னும் சில பகுதிகளே இருப்பதாகக் கூறப்படுகிறது.

தாலிபன்களின் படை பலத்திற்கு முன்பு எடுபடாத ஆப்கானிஸ்தான் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து வந்த பகுதிகளைப் தாலிபன்களிடம் பறிகொடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் ஜலாலாபாத் உள்ளிட்ட பெரு நகரங்களைத் தாலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் அரசின் வசமிருக்கும் தலைநகர் காபூலையும் கைப்பற்ற முனைப்புக் காட்டி வருகின்றனர். முன்னதாக, ஜலாலாபாத் மற்றும் பல்வேறு முக்கிய நகரங்களைத் தாலிபன்கள் கைப்பற்றி விட்டதாக அதிபர் அஷ்ரப் கனி அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் நேற்று கூறியிருந்தனர்.

இது தொடர்பாக அதிபர் அஷ்ரப் கனியின் முன்னாள் மூத்த ஆலோசகர் எம். ஷபிக் ஹம்தம், "ஜலாலாபாத் நான் பிறந்த நகரம், உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தும் தாலிபன்களின் வசம் சென்று விட்டது. வியாபாரம் வழக்கம் போல் நடக்கின்றன. மேலும் தாலிபன்கள் அந்த மாகாணத்தில் உள்ள பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இறைவனும் உலகமும் அவர்களைப் பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து, அவர் மாறி விட்டனர் என்பதை நிரூபிக்க வேண்டும் "என்று கூறியிருக்கிறார்.

ஆப்கான் தலைநகர் காபூல்
ஆப்கான் தலைநகர் காபூல்

நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தலைநகர் காபூல் மற்றும் அதன் அண்டை நகரங்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆப்கானில் மீதமிருக்கும் அமெரிக்கப் படைகளுக்கான தளபதி மற்றும் பொறுப்பாளர் ரோஸ் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டு ஆப்கான் படைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர்.

இருப்பினும், ஆப்கானில் தாலிபன்கள் ராணுவத்தினர் மீது மட்டுமல்லாமல் பொதுமக்கள் மீதும் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான நகரங்கள், எல்லைப் பகுதிகள், விமான நிலையங்கள் மற்றும் தூதரகங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்று விட்டதைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தூதரக அதிகாரிகள் அவரவர் நாட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆப்கானிஸ்தானின் 90 சதவீத நிலப்பரப்பைத் தாலிபான்கள் கைப்பற்றி விட்டதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Vikatan

தலைநகர் காபூலில் முக்கிய பகுதிகளான இஸ்லாம் குவாலா, அபு நாசர் பராஹீ போர்ட், தோர்குந்தி, சராஞ் உள்ளிட்ட பகுதிகள் தாலிபன்கள் வசம் சென்று விட்டதாகக் இன்று காலை முதல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், நாலாப்பக்கமுகம் தாலிபன்கள் காபூல் நகரத்தைக் குறி வைத்து முன்னேறி வருவதாகவும், தலைநகரின் முக்கிய பகுதிகளைத் தாலிபன்கள் கைப்பற்றி விட்டதாகவும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தற்போது தகவல் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "ஆப்கான் தலைநகர் காபூல் தாலிபன்கள் வசம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தாலிபன்கள் எந்த வித பயங்கரவாதத்தையும் கையாளவில்லை. அமைதியான முறையில் அவர்கள் காபூலை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். எனவே, காபூல் நகர மக்கள் அச்சமடைய வேண்டாம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆப்கன் படைகள் களத்தில் இருக்கின்றன" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`சுற்றிவளைக்கப்பட்ட தலைநகர் காபூல்.. திணறும் ராணுவம்!' - தாலிபன்கள் வசமாகிறதா ஆப்கானிஸ்தான்?
`சுற்றிவளைக்கப்பட்ட தலைநகர் காபூல்.. திணறும் ராணுவம்!' - தாலிபன்கள் வசமாகிறதா ஆப்கானிஸ்தான்?

அதே போல், தாலிபான்கள் தரப்பில் விளக்கக் குறிப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்ற வேண்டும் என்ற திட்டம் தங்களுக்கு இல்லையென்றும், அங்கு ஆப்கன் படைகளால் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல்களின் விளைவாகவே தாங்கள் காபூலைக் கைப்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், தலைநகரில் வசிக்கும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், தாங்கள் அமைதியான முறையில் அதிகார மாற்றத்திற்கு காத்திருப்பதாகவும் தாலிபன்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் இன்று அல்லது நாளை ஒரு நாளில் முழுமையாகத் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விடும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை விட்டுக்கொடுக்க ஆப்கன் அரசு தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தாலிபன்- ஆப்கன் மோதல்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு