Published:Updated:

இருபாலர் கல்விக்குத் தடைவிதிக்கும் தாலிபன்கள்! ஷரியத் சட்டப்படிக் கல்வி?!

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் ( Kathy Gannon )

அறிவித்தபடி பெண்களை கல்வி கற்க அனுமதித்துள்ள தாலிபன்கள் ஆண்களும் பெண்களும் ஒரே வகுப்பறையில் படிக்கத் தடை விதித்துள்ளனர்

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது முதல் அங்கு வசிக்கும் பெண்களின் நிலை பெரும் கேள்விக்குறியானது. இதுவரை பெண் செயற்பாட்டாளர்கள், நீதிபதிகள், தாலிபன்களால் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் நிச்சயம் ஹிஜாப் அணிய வேண்டும், ஆண் துணையில்லாமல், வெளியே செல்லக்கூடாது எனக் கட்டுபாடுகள் விதித்துள்ள தாலிபன்கள் இனிவரும் நாள்களில் பெண்கள் கல்வி கற்கவும் இஸ்லாமிய சட்டப்படி வேலைக்கு செல்லவும் அனுமதிக்கப்படுவர் எனவும் கூறியிருந்தனர். அறிவித்தபடி பெண்களை கல்வி கற்க அனுமதித்துள்ள தாலிபன்கள் ஆண்களும் பெண்களும் ஒரே வகுப்பறையில் படிக்கத் தடை விதித்துள்ளனர். மேலும் பெண்கள் பயிலும் பல்கலைகழங்கங்களுக்குத் தாலிபன்கள் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Wali Sabawoon

பெண்கள் அபயா, நிகாப் அல்லது புர்கா நிச்சயம் அணிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு பெண் ஆசிரியர்கள்தான் கற்பிக்க வேண்டும். பெண் ஆசிரியர்கள் இல்லாத பட்சத்தில் வயது முதிர்ந்த, நல்ல குணம் வாய்ந்த ஆண்கள் கற்பிக்கலாம். ஆண்களும் பெண்களும் தனித்தனியான நுழைவு வாயில்களை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் நம் ஊரிலேயே பாலின பாகுபாடு கற்பிக்கும் சில தனியார் பள்ளிகளில் இருப்பவைதான். ஆனால் இவற்றுக்கு மேலாக ஆண்களும் பெண்களும் ஒரே வகுப்பில் இருந்தால் இடையில் திரைச்சீலையைப் பயன்படுத்திப் பிரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடையும் விதித்துள்ளது தாலிபன் அரசு.

ஆப்கானிஸ்தான் பெண்களின் சுதந்திரம் குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்ததால், அவற்றுக்கு பதிலளிக்கும் வண்ணம் தாலிபன் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், "ஆப்கானிஸ்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். புர்கா இல்லாமல் கல்வி நிலையங்களுக்கு அனுப்பஇயலாது. அமெரிக்காவின் கருத்துக்களை எங்கள் மீது திணிக்காதீர்கள் அது எங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது" எனத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான்: தாலிபன்கள் ஆட்சி அமைக்க திணறுவது ஏன்?! - முழுப் பின்னணி

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் திரைச்சீலை கொண்டு மறைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தன் வகுப்பறை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தாலிபன்கள், பல்கலைகழக ஆசிரியர்கள் தனியார் கல்லூரி நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த சந்திப்பில் பேசிய தாலிபான் உயர்கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி, "வரும் நாட்களில் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஷரியத் சட்டப்படி தான் மேற்கொள்ளப்படும்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு