Published:Updated:

“நாங்கள் அனைவருமே தலைவர்கள்தான்!”

தாய்லாந்து புரட்சிப் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
தாய்லாந்து புரட்சிப் போராட்டம்

தாய்லாந்தில் வெடித்த புரட்சிப் போராட்டம்...

சுற்றுலாப் பயணிகள் வருகையால் எப்போதும் கோலாகலமாக இருக்கும் தாய்லாந்து, இப்போது போர்க்களமாக மாறியிருக்கிறது. காரணம், அந்நாட்டு மக்கள் முன்னெடுத்திருக்கும் புரட்சிப் போராட்டம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தாய்லாந்தில் நடைபெறும் முடியாட்சியில், அரசுத் தலைவராகப் பிரதமரும், நாட்டின் தலைவராக மன்னரும் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பிரதமர், அரசு தொடர்பான பெரும்பாலான முடிவுகளை எடுப்பார். ஆனாலும், பிரதமரின் முடிவுகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் சர்வ வல்லமைகொண்டவர் மன்னர்.

கடந்த 2016-ம் ஆண்டு, தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, தாய்லாந்தின் மன்னராக முடிசூட்டிக்கொண்டார் மகா வஜிரலோங்கார்ன். கடந்த ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில், சர்ச்சைக்குரிய முறையில் வெற்றிபெற்று தாய்லாந்தின் பிரதமரானார் பிரயுத் சான்-ஓ-சா. இவர் தாய்லாந்தின் முன்னாள் ராணுவத் தளபதி. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் கலகம் செய்தே பிரயுத் சான்-ஓ-சா பிரதமரானார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போதிலிருந்தே மக்கள் இவர்மீது அதிருப்தியிலிருந்தனர்.

“நாங்கள் அனைவருமே தலைவர்கள்தான்!”

ஏன் போராட்டம்?

முடியாட்சிக்கு எதிராகப் பேசுவதும், மன்னரை விமர்சித்துப் பேசுவதும் தாய்லாந்தில் பெருங்குற்றம். அப்படிப் பேசுபவர்களுக்கு நீண்டகால சிறைத் தண்டனை வழங்கப்படும். இருந்தும், கடந்த சில ஆண்டுகளாக, வான்சலம் சட்சக்ஸிட் என்ற சமூகச் செயற்பாட்டாளர் அரசுக்கு எதிரான ஜனநாயக இயக்கத்தை தாய்லாந்தில் முன்னெடுத்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் கம்போடியாவில் காணாமல்போனார். அவரை, தாய்லாந்து காவல்துறையினர் கடத்தியிருக்கலாம் என்று அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்ட, தாய்லாந்து அரசு இதை மறுத்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதலே அவரைக் கண்டுபிடிக்கக் கோரி மாணவர்கள் ஆங்காங்கே வீதியில் இறங்கிப் போராடினர்.

இந்தநிலையில்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் அனோன் நம்பா என்பவரும் முடியாட்சிக்கு எதிரான விமர்சனங்களை வெளிப்படையாகப் பேசியிருந்தார். பூனைக்கு மணிகட்டியதுபோல இவரது பேச்சு, அதுவரை முடியாட்சிக்கு எதிராகப் பேசு வதற்கு நிலவிவந்த இறுக்கத்தைப் போக்கியது. அனோன் வலியுறுத்திப் பேசிய முடியாட்சி சீர்திருத்தம் தொடர்பான 10 அம்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொடுத்தவர், பனுசாயா என்ற பெண் செயற்பாட்டாளர். இதையடுத்து தாய்லாந்து முழுவதும் மக்கள் பலரும் முடியாட்சிக்கு எதிராகப் பேசத் தொடங்கினர்.

மகா வஜிரலோங்கார்ன் - பிரயுத் சான்-ஓ-சா
மகா வஜிரலோங்கார்ன் - பிரயுத் சான்-ஓ-சா

முடியாட்சிக்கு எதிராக முணுமுணுப்பாகத் தொடங்கிய எதிர்ப்பலை கடந்த வாரத்தில், மிகப்பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்தது. ‘முடியாட்சி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்; பிரதமர் பதவி விலக வேண்டும்’ என்று ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். போராட்டம் வலுக்கவே, அரசுக்கு எதிரான ஜனநாயக இயக்கத்தை முன்னெடுத்த அனோன் நம்பா, பனுசாயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தலைவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கைதுக்குப் பிறகு போராட்டம் மேலும் தீவிரமடையத் தொடங்கியது. கைது செய்யப் பட்டவர்களை விடுவிக்கக் கோரி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அரசுக்கு எதிரான அடையாளக்குறியாக, மூன்று விரல்களை உயர்த்திக் காண்பிக்கிறார்கள். இது `ஹங்கர் கேம்ஸ்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் இடம்பெறும் போராட்ட முறை. அதாவது சுதந்திரம், சுயம், சகோதரத்துவம் ஆகியவற்றைக் கேட்டு, வலிமையானவர்களுக்கு எதிராகப் போராடுவது என்பதே மூன்று விரல் குறியீட்டின் பொருள்.

“நாங்கள் அனைவருமே தலைவர்கள்தான்!”

‘தாய்லாந்தில், சிறிய அளவிலான மக்கள் மட்டுமே பெரும் சக்திகொண்டவர்களாக இருக்கி றார்கள். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கு மிடையே பெரிய இடைவெளி இருக்கிறது. இதற்கெல்லாம் முடியாட்சிதான் காரணம்’ என்ற கருத்து மக்கள் மனதில் நீண்டகாலமாகவே இருக்கிறது. ‘தற்போதிருக்கும் தாய்லாந்து மன்னர், அரசுப் பணத்தில் பெரும்பாலான நாள்களை ஜெர்மனியிலேயே உல்லாசமாகக் கழிக்கிறார். அங்கிருந்தே தாய்லாந்து அரசையும் கட்டுப்படுத்து கிறார் என்பது பொன்ற காரணங்களால்தான் இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மார்ச் மாதம் ஜெர்மனி சென்ற மன்னர் வஜிரலோங்கார்ன், தன் தந்தையின் நினைவு நாளையொட்டி கடந்த வாரம் தாய்லாந்து திரும்பினார். மன்னர் பவனி வந்தபோது காரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த மக்கள் முயன்றனர். இதையடுத்து போராட்டம் நடைபெற்ற தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. இதன்படி நான்கு பேருக்கு மேல் பொதுஇடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும், மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தண்ணீரைப் பீய்ச்சி கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் முயன்றனர். மக்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தற்போது அரசுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதித்திருக்கிறது தாய்லாந்து அரசு. அதையும் மீறிப் போராட்டம் குறித்து செய்திகள் வெளியிட்ட நான்கு ஊடகங்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர உத்தரவிட்டிருக் கிறது அரசு.

‘தலைவர்களைக் கைதுசெய்துவிட்டால் போராட்டம் நின்றுவிடும் என்று நினைக்கிறார்கள். இன்று நாங்கள் அனைவருமே தலைவர்கள்தான்’ என்று போராட்டக்களத்தில் கைகோத்து நின்றபடி குரல் கொடுக்கிறார்கள் தாய்லாந்து மக்கள்!.