Published:Updated:

`ஃபேஸ்புக்கில் செல்ஃபி; தானியங்கி துப்பாக்கிகள்!' - தாய்லாந்து வணிக வளாகத்தை அதிரவைத்த ராணுவ வீரர்

தாய்லாந்து வணிக வளாகம்
தாய்லாந்து வணிக வளாகம் ( AP )

தாய்லாந்து வணிக வளாகம் ஒன்றில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ வீரரை அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

தாய்லாந்தின் நகோன் ரட்சஸிமா (Nakhon Ratchasima) நகரத்தின் டெர்மினல் 21 என்ற வணிக வளாகத்தில் நேற்று புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவம் மற்றும் போலீஸார், அங்கிருக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தாய்லாந்து துப்பாக்கிச்சூடு
தாய்லாந்து துப்பாக்கிச்சூடு
AP

விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ராணுவ வீரர் என்பதும் அவரது பெயர் ஜக்ரபந்த் தொம்மா (Jakraphanth Thomma) என்பதும் தெரியவந்தது. அவர் வணிக வளாகத்துக்கு வருவதற்கு முன்பாக, தான் பணிபுரிந்து வந்த சுதாம் பிதக் (Suatham Phithak) ராணுவத் தளத்தில் உயரதிகாரியான ஆனந்தரோட் கிராஸே என்பவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு ஆயுதங்களுடன் வெளியேறியிருக்கிறார். அங்கிருந்த ராணுவ வாகனம் ஒன்றில் தப்பிய அவர், ஷாப்பிங் மாலுக்கு வரும் வழியில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தாய்லாந்து போலீஸார் தெரிவிக்கிறார்கள். புத்தமதக் கோயில் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய அவர், இறுதியாக வணிக வளாகத்துக்குள் புகுந்ததாகச் சொல்கிறார்கள்.

ராணுவ சீருடையில் வணிக வளாகத்துக்குள் நுழைந்த அவர், திடீரென அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார். இதில், 21 பேர் உயிரிழந்ததாகவும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் அவரை தாய்லாந்து பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

தாய்லாந்து துப்பாக்கிச்சூடு - ஜக்ரபந்த்
தாய்லாந்து துப்பாக்கிச்சூடு - ஜக்ரபந்த்
AP

இந்தத் தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அனுடின் (Anutin Charnvirakul) உறுதிப்படுத்தியிருக்கிறார். வணிக வளாகத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தாய்லாந்து பாதுகாப்புத்துறை கருதுகிறது.

`அதிகரிக்கும் உயிரிழப்புகள்; சார்ஸை விஞ்சிய கொரோனா! - அச்சத்தில் சீனா #Corona

வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது ராணுவ வீரர் ஜக்ரபந்த், சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டதாகவும் தெரிகிறது. பார்க்கிங் பகுதியில் எடுக்கப்பட்ட செஃல்பி ஒன்றையும், `மரணத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது' என்றும் அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். இந்தநிலையில், அவரது பக்கத்தை ஃபேஸ்புக் நீக்கியிருக்கிறது. வன்முறைக்குக் களமாக ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜக்ரபந்த் பயன்படுத்திய துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன தானியங்கி வகை துப்பாக்கிகள் என்று கூறப்படுகிறது.

தாய்லாந்து துப்பாக்கிச்சூடு
தாய்லாந்து துப்பாக்கிச்சூடு
AP

உலக அளவில் தனிநபர்கள் அதிக பேர் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் அளிக்கப்பட்டுள்ள நாடுகளில் தாய்லாந்து முக்கியமானது. அதேநேரம், இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அங்கு நடைபெறுவது மிகவும் அரிதானது.

அடுத்த கட்டுரைக்கு