Published:Updated:

`நல்லவேளை இந்தியாவிலிருந்து உருவாகவில்லை’ - சர்ச்சையை ஏற்படுத்திய பொருளாதார நிபுணரின் பேச்சு #Corona

ஜிம் - கொரோனா
ஜிம் - கொரோனா

கொரோனா வைரஸ் நல்லவேளையாக இந்தியாவிலிருந்து உருவாகவில்லை என்று சர்ச்சையாகப் பேசியுள்ளார் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜிம் ஒ நெய்ல்.

உலக மக்களை ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது 123 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரொனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கிடையில் சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் நன்கு குணமடைந்து வீடு திரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.

கொரோனா
கொரோனா

வைரஸை எதிர்த்து அந்நாடு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. வைரஸ் தொடங்கியதாகக் கருதப்படும் வுகான் நகரம் முற்றிலும் மூடப்பட்டது, போக்குவரத்து முடக்கம், பொதுமக்கள் கண்காணிப்பு, மருத்துவர்கள் குவிப்பு, கட்டாய சிகிச்சை, சுற்றுப்புற தூய்மை, விழிப்புணர்வு, உடனடி மருத்துவமனைகள் என அனைத்து விதத்திலும் துரிதமாக வேலை செய்து வைரஸை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது சீனா.

கொரோனா தடுப்பு மருந்து... ஆஸ்திரேலிய வாழ் இந்திய விஞ்ஞானியின் நம்பிக்கை தரும் ஆய்வு!

தற்போது அங்கு வைரஸால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீன அரசின் நடவடிக்கையை பல்வேறு நாடுகளும் பாராட்டி வரும் நிலையில், இதே சீனாவைப் புகழ்ந்து இந்தியாவைப் பற்றி விமர்சித்துள்ளார் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச் முதலீடு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணருமான ஜிம் ஒ நெய்ல். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் மற்றும் உலக பொருளாதாரம் தொடர்பாக சி.என்.பி.சி (CNBC) தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ``சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆதிக்கம் மற்றும் வைரஸ் உருவான வுகான் நகரில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடு ஆகியவையே ஆரம்பம் முதல் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒரு நெருக்கடியை தற்போது சீனா சந்தித்து வருகிறது. இதன் அபாயத்தை உணர்ந்த அவர்கள் மிக விரைவாகவும் திறமையாகவும் கையாண்டுள்ளனர்.

'மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பியுள்ளேன்!’ - கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்த தம்பதி

வைரஸ் பரவுவது உறுதியானதும் சீனாவின் அனைத்து தொழில்துறை உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் பெரும் பகுதி மூடப்பட்டது. இது உலகளாவிய பொருளாதாரத்துக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தும் இந்த நடவடிக்கைகளால்தான் சீனாவில் தற்போது வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் இத்தாலி போன்ற நாடுகளில் இதே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நல்லவேளையாக இந்த வைரஸ் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து உருவாகவில்லை. ஏனென்றால், இந்திய நிர்வாகத்தின் தரம் சீனர்கள் செய்த அளவுக்கு இருந்திருக்காது. இது சீனாவின் நல்ல பழக்கம்” என்று பேசியுள்ளார்.

ஜிம் ஒ நெய்ல்
ஜிம் ஒ நெய்ல்

இந்தியா பற்றிய ஜிம் ஒ நெய்லின் கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு இந்திய விசா வழங்கக் கூடாது என்றும் கொரோனா பிரச்னையில் எதற்காக இவர் இந்தியாவைப் பற்றிப் பேசுகிறார் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவில் தற்போது 50-க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வைரஸ் உறுதியானதும் இந்தியாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. விமான நிலையங்கள் கண்காணிப்பு, வெளிநாட்டுப் பயணிகள் சோதனை, விழிப்புணர்வு போன்ற அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகங்கள் மக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

கொரோனா
கொரோனா

பல மாநிலங்களில் பள்ளிகள், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. அனைத்து விதத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 15-ம் தேதிவரை வெளிநாட்டினருக்கு இந்திய விசா வழங்குவதற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தாலி, இரான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வைரஸ் அதிகம் பரவியுள்ள நாடுகளிலிருந்து வரும் இந்தியர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட பிறகே விடுவிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு