மைக்ராசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான சத்யா நாடெல்லாவின் மகன் ஜைன் நாடெல்லா நேற்று (திங்கள் கிழமை) காலை காலமானார். 26 வயதேயான இவர் பிறப்பிலிருந்தே 'Cerebral palsy' என்ற பெருமூளை வாத நோயின் பாதிப்பிற்குள்ளானவர்.
ஜைன் காலமான இந்தச் செய்தியை சத்யா நாடெல்லா அதன் நிர்வாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார். மேலும் சத்யா நாடெல்லாவின் குடும்பம் இந்தத் துக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கான கால அவகாசத்தையும் தரவேண்டி மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.
சத்யா நாடெல்லா மற்றும் அவரது மனைவி அனுபமா நாடெல்லா ஆகிய இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஜைன் நாடெல்லா எனும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர். ஜைன் நாடெல்லா பிறக்கும் போதே 'cerebral palsy' என்ற பெருமூளை வாத நோயின் பாதிப்பிற்குள்ளானவர்.

இதன் காரணமாகவே சத்யா நாடெல்லா 2014 இல் மைரோசாப்ட்டில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவதற்கான தயாரிப்புகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் நாடெல்லா, அவரின் மகன் சிகிச்சைப் பெற்று வந்த அந்தக் குழந்தைகள் நல மருத்துவமனையுடனே இணைந்து மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டில் பல ஆராய்ச்சிகளையும் தயாரிப்புகளையும் உருவாக்கவேண்டும் என்று செயல்பட்டு வந்தார்.
ஜைன் சிகிச்சைப் பெற்றுவந்த அந்தக் குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் ஸ்பெரிங் ஜைன் குறித்துப் பேசுகையில், "இசையில் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட ரசனைக்காகவும், அவரது பிரகாசமான புன்னகைக்காகவும், அவரது குடும்பத்தினருக்கும் அவரை நேசித்த அனைவருக்கும் அவர் அளித்த அபரிமிதமான மகிழ்ச்சிக்காகவும் அவர் என்றும் நினைவுகூரப்படுவார்" என்று தெரிவித்தார். அதை மைக்ரோசாப்ட் நிர்வாகிகளுடனும் பகிர்ந்து கொண்டார்.
