Published:Updated:

அட்லான்டாவில் பொழிந்த பண மழை!- அள்ளிய மக்கள்; கெஞ்சிய அதிகாரிகள்

சத்யா கோபாலன்

சாலையில் பணம் சிதறிக்கிடக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

சிதறிய பணத்தை அள்ளும் மக்கள்
சிதறிய பணத்தை அள்ளும் மக்கள்

பணத் தேவை இருக்கும் அனைத்து மக்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த வார்த்தையை உச்சரித்திருப்பார்கள். `ச்சே... இப்போ பண மழை பெய்தால் எப்படி இருக்கும்’ என்று. வெறும் வார்த்தையாக மட்டுமே நாம் அறிந்த இந்த ‘பண மழை’ அட்லான்டா மக்களுக்கு நிஜமாகியுள்ளது.

சாலையில் சிதறிய பணம்
சாலையில் சிதறிய பணம்

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லான்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் பண மழை பொழிந்துள்ளது. எங்கும் கொட்டிக் கிடந்த பணத்தைப் பார்த்ததும் அந்த வழியாகச் சென்றவர்கள் தங்கள் கார்களை அப்படியே நடுரோட்டில் நிறுத்திவிட்டு, சிதறிக் கிடந்த பணத்தை அள்ளத் தொடங்கியுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறைக்குச் செல்ல, அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பணம் சிதறிக்கிடப்பது தொடர்பாக விசாரணையில் இறங்கினர்.

விசாரணையின் முடிவில் அந்த வழியாகப் பணம் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு ட்ரக்கின் கதவு எதிர்பாராத விதமாகத் திறந்ததால் உள்ளே இருந்த பணம் காற்றில் பறந்து சாலையில் சிதறியது தெரியவந்தது. அமெரிக்கப் பண மதிப்பில் 1,75,000 டாலர் சாலையில் கிடந்துள்ளது. இந்திய மதிப்பில் இது 1.2 கோடி ரூபாயாகும்.

ரூ.200 கடனுக்காக 30 ஆண்டுகள் மன உறுத்தல்! கடனைச் செலுத்த இந்தியா வந்த கென்ய எம்.பி

இந்தச் சம்பவம் பற்றிப் பேசியுள்ள டன்வூடி (Dunwoody) காவல்துறையினர், ``சாலையில் பணம் சிதறிக் கிடப்பதாக எங்களுக்கு போன் வந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், ஆயுதம் ஏந்தி பணம் கொண்டு செல்லும் ட்ரக்கில் இருந்து தவறுதலாகச் சிதறிவிட்டதாகத் தெரியவந்துள்ளது. பணம் சிதறியதை உணர்ந்த பிறகு, அந்த ட்ரக்கில் இருந்த சில நூறு டாலர் பணம் மட்டுமே அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள மொத்த பணத்தையும் மக்கள் அள்ளிச் சென்றனர்’ எனத் தெரிவித்துள்ளனர். பணத்தை எடுத்தவர்கள் அதை மீண்டும் காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு கிடைத்த மீதி பணம்
அதிகாரிகளுக்கு கிடைத்த மீதி பணம்
Twitter/@DunwoodyPolice

‘நான் அந்த இடத்தில் இல்லையே’ ‘ எங்கள் ஊரில் இப்படி நடப்பதில்லையே’ என்பதுபோல நெட்டிசன்கள் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பல வீடியோக்கள், புகைப்படங்கள் மூலமும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அஜாக்கிரதையாக இருந்த அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டதா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அந்தச் சாலையில் நீங்கள் இருந்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்!