Published:Updated:

தாக்குதல் நடத்திய 25 ட்ரோன்கள்... எங்கே கோட்டைவிட்டது சவுதி அரேபியா?

லோ ரேஞ்ச் ஆயுதங்களின் தாக்குதலிலிருந்து தன் எண்ணெய் ஆலைகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழலுக்கு சவுதி தள்ளப்பட்டுள்ளது. என்ன செய்வதென்று சவுதி மூளையைக் கசக்கிக்கொண்டிருக்க, ரஷ்யாவுக்கு உடனடியாக மூக்கு வியர்த்துவிட்டது.

Drone Attack in Saudi
Drone Attack in Saudi

ட்ரோன் தாக்குதலால் பதைபதைத்துப்போய் கிடக்கிறது சவுதி. அதுவும், சவுதிக்குள் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணித்து ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியிருப்பது, சவுதியின் உள்நாட்டுப் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள கோளாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 14-ம் தேதி காலை 4 மணிக்குத் தலைநகர் ரியாத் அருகேயுள்ள அப்கைஸ் மற்றும் குரேஸ் பகுதியில் அராம்கோவுக்குச் சொந்தமான இரு ஆலைகளை ட்ரோன்கள் அலை அலையாகத் தாக்க, வெடித்துத் தீப்பற்றியது. இங்கே, நாள் ஒன்றுக்கு 9.8 லட்சம் பேரல்களை உற்பத்தி செய்ய முடியும். தாக்குதலுக்குப் பிறகு, தினசரி 5.7 லட்சம் பேரல்களைத்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. சவுதியின் எண்ணெய் உற்பத்தி பாதிக்குப் பாதி குறைய, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எகிறியது. இந்த ஆலைகள் சகஜ நிலைக்குத் திரும்ப இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகும்.

Saudi Aramco oil facility attacked
Saudi Aramco oil facility attacked

உலகிலேயே அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு சவுதி அரேபியா. இந்த நாடுதான் ஆயுதங்கள் இறக்குமதியிலும் உலகில் முதலிடத்தில் இருக்கிறது. விஷயம் இப்படியிருக்க, சாதாரண ட்ரோன் தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனது ஏன் என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒன்றல்ல, இரண்டல்ல 25 ட்ரோன்கள் கொண்டு, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் உறங்கி வழியும் நேரத்தில், ட்ரோன்கள் ஒவ்வொன்றாகப் பொறுமையாகத் தாக்கியுள்ளன.

ஏமனில் உள்ள இரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதலுக்குப் பின்னணியில், இரான் இருப்பதாக அமெரிக்காவும் சவுதியும் குற்றம் சாட்டியுள்ளன. அப்படியானால், ஏமனிலிருந்து ரியாத்துக்குக் கிட்டத்தட்ட 1,000 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ரேடார்களின் கண்களிலிருந்து இந்த ட்ரோன்கள் தப்பியது எப்படி?

இராக் போரின்போது ஸ்கட் - பேட்ரியாட் ஏவுகணைகளின் போர் பிரசித்தம். மிக உயரத்தில் பறந்து வரும் இராக்கின் ஸ்கட் ஏவுகணையை அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை துல்லியமாகத் தாக்கும். பேட்ரியாட்டின் பலமே அதுதான். மிக உயரத்தில் பறந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள் அவற்றின் ரேடார் வளையத்தைத் தாண்டாது. அதே , பேட்ரியாட் சிஸ்டம்தான் சவுதி அரேபியா ஆயில் கம்பெனியான Saudi Aramco-வில் பொருத்தப்பட்டுள்ளது. பேட்ரியாட், ஸ்கட் இரண்டுமே மிக உயரத்தில் பறந்து வரும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் வல்லமை கொண்டது. இங்கேதான், சவுதி தவறு செய்துவிட்டது!

Wave of attack
Wave of attack

பேட்ரியாட் சிஸ்டம் மிக உயரத்தில் பறந்து வரும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் அல்லவா... அதை யோசித்த கிளர்ச்சியாளர்கள் தாழப்பறக்கும் ட்ரோன்களைக் களத்தில் இறக்கத் தீர்மானித்தனர். பேட்ரியாட்டின் ரேடாரில் மெதுவாகத் தாழப்பறந்து வரும் ட்ரோன்களைக் கண்டுபிடிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ட்ரோன்கள் அளவில் சிறியதாக இருப்பதால், ரேடாரில் சிக்காது என்றும் சொல்லப்படுகிறது. Aramco நிறுவனத்தின் பாதுகாப்பு விவகாரத்தில், அதிகாரிகள் அலட்சியம் காட்டியதும் இன்னொரு காரணம். சாதாரணமாக ஒரு ட்ரோன் பறந்தாலே சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுவிடுகிறது. அப்படியிருக்கையில், 25 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதும், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பேட்ரியாட் ஏவுகணை அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் மற்றும் ரேதியோன் நிறுவனத்தின் தயாரிப்பு. இப்போது, லோ ரேஞ்ச் ஆயுதத் தாக்குதலிலிருந்து தன் எண்ணெய் ஆலைகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழலுக்கு சவுதி தள்ளப்பட்டுள்ளது. என்ன செய்வதென்று மூளையை சவுதி கசக்கிக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவுக்கு உடனடியாக மூக்கு வியர்த்துவிட்டது.

Patriot
Patriot

அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகின் இரு பெரும் ஆயுத வியாபாரிகள். சவுதி அரேபியாவோ அமெரிக்காவின் ரெகுலர் கஸ்டமர். சவுதியைத் தன் பக்கம் இழுக்க வேண்டுமென்பது ரஷ்யாவின் நீண்ட கால கனவு. இதன் காரணமாகவே, சவுதியின் பிரச்னைக்குத் தங்களிடம் தீர்வு இருப்பதாகத் துருக்கி தலைநகர் அங்காராவில் ரஷ்ய பிரதமர் புதின் பேசியிருக்கிறார்.

`ரஷ்ய தயாரிப்பான எஸ். 300 அல்லது எஸ். 400 ரக ஏவுகணைகளை வாங்கிக்கொள்ளுங்கள். நாங்கள் இரானுக்கு விற்றுள்ளோம். துருக்கிக்குக் கொடுத்துள்ளோம். இந்தியாவும் வாங்கப்போகிறது. உங்கள் பிரச்னைக்கு எங்கள் ஆயுதங்கள் வழியாகவே தீர்வு காண முடியும். சவுதி ஆட்சியாளர்கள் மாற்றி யோசிக்க வேண்டும்'' என்று புதின் தன் பேச்சினூடே குறிப்பிட்டார்.

உங்கள் பிரச்னைக்கு எங்கள் ஆயுதங்கள் வழியாகவே தீர்வு காண முடியும். சவுதி ஆட்சியாளர்கள் மாற்றி யோசிக்க வேண்டும்.''
ரஷ்ய அதிபர் புதின்

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ரியாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சவுதி பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தர்கி அல் மார்கி, ``ட்ரோனில் பொருத்தப்பட்ட ஏவுகணைகள் நிச்சயம் இரான் நாட்டு தயாரிப்புதான். தாக்குதலுக்குப் பின்னணியில் இரான் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன. எங்கள் பதிலடி உடனடியாக இருக்காது. ஆனால், உறுதியாக இருக்கும்'' என்று கூறியிருக்கிறார்.

இரான், சவுதி நாடுகளின் மோதலால், வளைகுடாவில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

சவுதி அராம்கோ மீது தாக்குதல்.... கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு நீடிக்குமா?