Published:Updated:

வட கொரியா: வெளிநாட்டுப் படங்களுக்குத் தடை; மீறினால் மரணதண்டனை - கிம் ஜாங் உன் அதிரடி... காரணம் என்ன?

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ( AP )

சில தினங்களுக்கு முன்பு, வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கில் தான் லீ என்ற இளைஞருக்கு சுமார் 500 வட கொரியர்கள் மத்தியில் மரண தண்டனை மிகக் கொடூரமாக நிறைவேற்றப்பட்டது.

உலகமே தினம் தினம் கொரோனா ஏற்படுத்திவரும் கோரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடைமுறைகளையும், கடுமையான விதிகளையும் பின்பற்றி ரும் சூழலில் ‘எங்கள் நாட்டில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை!’ என்று தில்லாகக் கூறிக்கொண்டு, வழக்கம்போல் உலக நாடுகளின் கவனத்தைத் தனது புதுப்புதுச் சட்டங்களின் மூலம் வடகொரியாவின் பக்கம் ஈர்த்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.

என்ன நடக்கிறது அங்கே?!

சில தினங்களுக்கு முன்பு, வட கொரியாவின் தலைநகரான பியோங்யாங்கில் தான் லீ என்ற இளைஞருக்கு சுமார் 500 வடகொரியர்கள் மத்தியில் மரண தண்டனை மிகக் கொடூரமாக நிறைவேற்றப்பட்டது. காரணம், அவர் வெளிநாட்டுத் திரைப்படங்களின் சி.டி-க்களை வட கொரியாவில் கள்ளச்சந்தையில் விற்றார் என்பதே! ‘இதற்கு எதற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்?’ என்று தோன்றினால் அந்நாட்டின் சட்ட விதிகள் அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதுதான் காரணம்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது சர்வாதிகாரப் போக்கால் உலக நாடுகள் அனைத்திலும் அறியப்படுபவர். அவ்வப்போது சைலன்ட் மோடில் போவது, பிறகு மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பிப்பது என சர்வதேச ஊடகங்களின் எவர் கிரீன் டிரெண்டிங் மெட்டீரியல் இவர்தான். வடகொரியாவை பொறுத்தவரையில் அங்கு இணையதளம் கிடையாது, சமூக வலைதளங்கள் கிடையாது, தொலைக்காட்சி சேனல்களிலும் மிகவும் கட்டுபாடுகளுடன் கூடிய குறைவான சேனல்கள் மட்டுமே இன்றும் இயங்கிவருகின்றன. நாட்டின் ஒவ்வொரு நகர்வும் அதிபர் கிம் ஜாங் உன்னின் மிகக் கடுமையான கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. மக்கள் எந்தவிதமான முற்போக்கு எண்ணங்களாலும், அயல்நாட்டுச் சிந்தனைகளாலும் ஆட்கொண்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். மீறி அதில் ஈடுபடுவோருக்கே இந்தக் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

ஜீன்ஸ் - image
ஜீன்ஸ் - image
LaylaBird

சமீபத்தில் இறுக்கமான ஜீன்ஸ்களையும், அயல்நாட்டு டீ- ஷர்ட்களையும் அணியக் கூடாது என செக் வைத்தார். அதேபோல், வெளிநாட்டு கலாசாரத்தை ஒட்டிய அலங்காரம், ஹேர் ஸ்டைல், மூக்குத்தி அணிவது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதித்தார். அதைத் தொடர்ந்து, தற்போது வெளிநாட்டு படங்கள் மற்றும் வெப்-சீரீஸ்களைப் பார்க்க தடை விதித்துள்ளார். மீறிப் பார்ப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சிறைவாசம் மற்றும் அதை அதிக அளவில் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவை எல்லாவற்றையும் கண்காணிக்கத் தனிக்குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.

வட கொரியாவும் வெளிநாட்டுத் திரைப்படங்களும்

வடகொரிய மக்கள் உலக நடவடிக்கைகளிலிருந்து தனித்தே வாழ்ந்துவருவதால், அவர்களுக்குப் பொழுதுபோக்கு அம்சம் மிகவும் குறைவே. சினிமா போன்ற எவற்றுக்கும் அங்கு அனுமதியில்லை. இதனால், சீனா மற்றும் தென் கொரியாவின் சினிமா, வெப் சீரீஸ்களின் சிடிக்களை சீன எல்லையின் வழியாக மறைமுகமாகக் கொண்டுவந்து அதை வாங்கிப் பார்ப்பார்கள்.

வட கொரியா: வெளிநாட்டுப் படங்களுக்குத் தடை; மீறினால் மரணதண்டனை - கிம் ஜாங் உன் அதிரடி... காரணம் என்ன?

சில சமயங்களில், இதைப் பாதுகாப்பாக எடுத்துவர ரகசியமான பாஸ்வேர்டுகள் மற்றும் குறிப்பிட்ட சாதனங்களில் மட்டும் இயங்கும் வகையில் இதைக் கொண்டு வந்து மக்கள் ரகசியமாக சினிமாவைப் பார்த்துள்ளனர். இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்விதமாக அமைந்துள்ளது அதிபர் கிம்மின் புதிய சட்டங்கள். இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் தான் லீக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான விதை கடந்த 2002-ம் ஆண்டே போடப்பட்டுவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2002-ம் ஆண்டு பியோங்யாங் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டுப் படங்களின் சி.டி-க்களை மாணவர்கள் பயன்படுத்துவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவற்றைப் பிடிப்பதற்கு நாட்டின் அனைத்து ராணுவத்தினரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன் முடிவில் சுமார் 20,000 சி.டி-க்கள் பிடிபட்டன.

இந்தச் சட்டங்கள் தொடர்பாக, அந்நாட்டு அரசு ஊடகத்துக்கு கிம் ஜாங் உன் எழுதியுள்ள கடிதத்தில், “ஒரு நிறுவனத்தில் ஊழியர் தவறு செய்தால், அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதேபோல், ஒரு குடும்பத்தில் குழந்தைகள் தவறு செய்துவிட்டால் பெற்றோர்களுக்கும் தண்டனை உண்டு” போன்றவற்றை குறிப்பிட்டிருந்தார். மேலும், வெளிநாட்டு கலாசாரங்கள் யாவும் நஞ்சை விதைக்கும் என்று கூறியுள்ளார். அந்தக் கண்ணோட்டத்திலேயே இந்தப் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தூக்கு -Representational Image
தூக்கு -Representational Image

வெளிநாட்டு கலாசாரங்கள் நாட்டுக்குள் வேரூன்றிவிட்டால் இளைஞர்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனநிலை உருவாகிவிடும் என்பதால் தனக்கும், தனது அரசாங்கத்துக்கும் எந்தவித எதிர்ப்பு குரலும் எழுந்திடாத வண்ணம் மிகவும் பாதுகாப்பாக ஒவ்வொரு நகர்வையும் எடுத்துவருகிறார் அதிபர் கிம் ஜாங் உன்.

ஏற்கெனவே, கொரோனா தொற்று காரணமாக வட கொரியா, சீனாவுடனான தனது எல்லையை முழுவதுமாக மூடியுள்ளது. சீனாவிலிருந்து வந்துகொண்டிருந்த அத்தியாவசியப் பொருள்கள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். நாட்டின் பெரும்பாலான நிதி அணு ஆயுத ஆராய்ச்சிக்கே செலவிடப்படுவதால், பொருளாதாரரீதியாகவும் நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த இரண்டாண்டுகளில் வட கொரியர்கள் அதிகப்படியான நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றனர்.ஏற்கெனவே, உலக நடவடிக்கைகளிலிருந்து துண்டிக்கப்பட்டு வாழ்ந்துவரும் வட கொரியர்களின் வாழ்வை இவை மேலும் தனிமைப்படுத்தும். இது கிம் ஜாங் உன் நிகழ்த்திவரும் சர்வாதிகாரப் போக்கின் உச்சம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு