Published:Updated:

மேகா,நீல் பேடி 'புலிட்சர்' விருது வென்ற இந்திய வம்சாவளி பெண் பத்திரிகையாளர்கள்! #PulitzerPrize

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 2 பெண் பத்திரிகையாளர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல், உலகை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் வீடியோவினை பதிவு செய்த இளம்பெண் பிரேசியருக்கும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகளவில் ஊடகத்துறையில் சாதனைகள் புரிபவர்களை அங்கீகரிக்கும் விருதுகளில் அமெரிக்காவின் 'புலிட்சர் விருது' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1917-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த விருதை வழங்கி பத்திரிகையாளர்களைக் கௌரவித்துக் கொண்டிருக்கிறது. சுமார் 21 பிரிவுகளில் வருடந்தோறும் வழங்கப்படும் இந்த 'புலிட்சர் விருது' ஊடகத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான விருதுகளை கொலம்பியா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்திருக்கிறது. அதில் இந்தியாவைப் பூர்வீகமாகச் கொண்ட 2 பெண் பத்திரிகையாளர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல், உலகை உலுக்கிய அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் வீடியோவினை பதிவு செய்து நீதி கிடைக்க உதவிய இளம்பெண் டார்னெல்லா பிரேசியருக்கும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விருது அறிவிக்கப்பட்டுள்ள பெண் பத்திரிகையாளர்கள் செய்தது என்ன சுருக்கமாக:

மேகா ராஜகோபாலன்
மேகா ராஜகோபாலன்

*மேகா ராஜகோபாலன்:

இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட லண்டன் பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் இயங்கி வரும் BuzzFeed செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் மேகா ராஜகோபாலன் சீனாவில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை முஸ்லீம்களைச் சீன அரசு ரகசியமாகத் தடுப்பு முகாம்கள் அமைத்து அடைத்து வைத்துள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டதற்காக 'சர்வதேச செய்தி பிரிவில்' புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேகா ராஜகோபாலன் 2017-ல் முதன் முதலாகச் சீனாவிற்குச் சென்று அங்கு சிங்கியாங் மாகாணத்தில் சீன அரசு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைத் தடுத்து வைத்திருந்ததை அறிந்து உலகிற்கு செய்தி வாயிலாக உண்மையை வெளிக்கொண்டு வந்தார். முகாம்கள் குறித்து செய்தி வெளியிட்டதால் சீன அரசு பத்திரிகையாளர் மேகாவின் விசா உள்ளிட்டவற்றை ரத்து செய்து வெளியேற்றியது. இருப்பினும், மேகா ராஜகோபாலன் தொடர்ந்து சீனாவின் மனித உரிமை மீறலை முழுமையாக வெளிக்கொண்டு வரத் தொடர்ந்து போராடினார். இன்னும் சில பத்திரிகையாளர்களின் ஆதரவுடன் மேகா சீனாவுக்கு எதிரான தரவுகளைத் திரட்டி ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை உலகிற்கு ஆதாரத்துடன் விளக்கினார்.

மேகா ராஜகோபாலனின் முயற்சியால் சீனாவின் செயல் வெட்டவெளிச்சமானது. மாபெரும் மனித உரிமை மீறலை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் மேகாவை கொலம்பியா பல்கலைக்கழக விருது தேர்வுக் குழு 2021-ம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆனால், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் விருது தனக்கு அறிவிக்கப்பட்டது கூட மேகாவுக்கு தெரியாது. நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. தொலைக்காட்சி நேரலைகளையும் பார்க்கவில்லை. மேகாவுக்கு தொலைப்பேசி வாயிலாகத் தான் விருது அறிவிக்கப்பட்டுள்ளதே தெரிய வந்திருக்கிறது. இந்திய வம்சாவளியான பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது. வாழ்த்துகள் மேகா ராஜகோபாலன்!

இளம் பெண் பத்திரிகையாளர் நீல் பேடி:

அமெரிக்காவில் இயங்கி வரும் 'Tampa Bay Times' பத்திரிகையில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியான நீல் பேடிக்கு 'Local Reporting' பிரிவில் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தில் போலீஸார் உதவியுடன் எதிர்கால குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காணக் கணினி மாடலிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 1000 பேரை அடையாளம் கண்டு குற்றங்களைத் தடுக்க நீல் பேடி உதவியிருக்கிறார். கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றங்களைத் தடுத்ததற்காக சிறந்த உள்ளூர் புலனாய்வு செய்தியாளர் பிரிவில் நீல் பேடி மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய காத்லீன் என்பவருக்கும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் நீல் பேடி!

நீல் பேடி
நீல் பேடி

டார்னெல்லா பிரேசியர்:


அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25-ம் தேதி கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி உலகளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கறுப்பின மக்களுக்கு எதிரான இந்த செயலைக் கண்டித்து உலகம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. அதன் விளைவாக ஓராண்டுக்கால விசாரணைக்குப் பிறகு கொலை செய்த காவலருக்குத் தண்டனை கிடைத்தது.

போலீஸாரின் மனிதாபிமானமற்ற செயல் அந்த கலவரக் கூட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்திருந்தால் இன்று அந்த காவலர் நிரபராதி என்று வெளியில் சுற்றிக் கொண்டிருந்திருப்பார். ஆனால், அனைவரும் சாலையில் அலறியடித்துக் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், 17 வயது இளம்பெண் டார்னெல்லா பிரேசியர் தைரியமாக காவலரின் ஈவு இரக்கமற்ற செயலை தனது செல்போனில் பதிவு செய்தார். அந்த வீடியோ ஒன்று மட்டும் இல்லாமல் போயிருந்தால் அப்பாவி ஜார்ஜ் பிளாய்ட்-ன் மரணத்திற்கு நீதி கிடைக்காமலேயே போயிருக்கும். டார்னெல்லா பிரேசியர் பதிவு செய்த வீடியோ தான் இந்த கொலை வழக்கில் தீர்ப்பைத் தீர்மானித்தது.

டார்னெல்லா பிரேசியர்
டார்னெல்லா பிரேசியர்

கலவர நேரத்தில் அந்த வீடியோவை பதிவு செய்து கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்திய டார்னெல்லா பிரேசியருக்கு உலகின் மிக உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டார்னெல்லா பிரேசியருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதைக் குறித்து புலிட்சர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள விருது குழு, "ஜார்ஜ் பிளாய்டின் கொலையைத் தைரியமாகப் பதிவு செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பிரேசியரின் வீடியோவானது, உலகம் முழுவதும் காவல்துறையின் கொடூரமான தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி, உண்மை மற்றும் நீதியை வெளி உலகிற்கு தெரிவிப்பதில் குடிமக்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டியிருக்கிறது" என்று கூறியிருக்கிறது. அநீதிக்கு எதிராகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட இந்த சமூகத்துக்கு இன்னும் பல பிரேசியர்கள் தேவைப்படுகிறார்கள். வாழ்த்துகள் பிரேசியர்..!!

புலிட்சர் விருதைப் பெற்றிருக்கும் இந்த இளம்பெண் சாதனையாளர்களுக்குப் பாராட்டு சான்றிதழும், சுமார் 15,000 அமெரிக்க டாலர்களும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு