Published:Updated:

என்னை வியக்க வைத்த பெர்லின் சுவர்! - வாசகி பகிர்வு #MyVikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெர்லின் சுவர் அருகே றின்னோஸா
பெர்லின் சுவர் அருகே றின்னோஸா

பெர்லின் சுவரை நேரில் பார்த்த போது எனக்கு அதன் முழுமையான சரித்திரம் எதுவும் தெரியாது. ஏதோ பத்தோடு பதினொன்றாகவே அதைச் சுற்றிப் பார்த்து வந்தேன்.

நான் றின்னோஸா (Rinnozah), உலகில் பல நாடுகளுக்கும் வேலை நிமிர்த்தம் இடம்பெயர்ந்து, தற்போது வசிப்பது கோப்பன்ஹேகன் - டென்மார்க்.

போன வருடம் பெர்லின் போனபோது நான் காலடி வைப்பது குருதியும் குரூரமும் ஒரு சேரக் கலந்து லட்சக்கணக்கான மனித உயிர்களின் உணர்வுகள் ஊசலாடிய மண் என்பதை அறிந்திருக்கவில்லை. ஹிட்லர் எனும் ஒரு தனிமனிதனின் ருத்ர தாண்டவத்தில் ஒரு காலம் கட்டுண்டிருந்த பெர்லின் நகரில் நகருமிடமெல்லாம் இதிகாசத்தின் எஞ்சியிருக்கும் எச்சங்கள் எண்ணற்ற வலியையும் வடுக்களையும் தாங்கி நிற்கின்றன.

பெர்லினைப் பற்றி எழுத சுவாரஸ்யமான பல விடயங்கள் கொட்டிக்கிடந்தாலும் என்னை உணர்வு ரீதியாக இழுத்தது, இறுதிக்காலங்களில் ஹிட்லர் பதுங்கியிருந்த பங்கரும் பெர்லின் சுவரும் (Berlin Wall) தான்.

பெர்லின் சுவர்
பெர்லின் சுவர்

பலநூறு அடிகளுக்குப் பரவியிருக்கும் இந்த பெர்லின் சுவர் கட்டப்பட்டிருப்பதென்னவோ வெறும் மண்ணாலும் கல்லாலும் தான். ஆனால், அதில் பல்லாயிரக்கணக்கான மனித மனங்களின் குமுறலும் குதூகலமும் உறைந்து நிற்கின்றது! பெர்லின் சுவரை நேரில் பார்த்த போது எனக்கு அதன் முழுமையான சரித்திரம் எதுவும் தெரியாது. ஏதோ பத்தோடு பதினொன்றாகவே அதைச் சுற்றிப் பார்த்து வந்தேன். ஆனால், கடந்த நவம்பர் 9, பத்திரிகைகளில் பெர்லின் சுவர் உடைக்கப்பட்ட 30வது ஆண்டு நினைவுதினம் என்ற செய்தி பார்த்தேன். அதன் பின் ஒரு சோம்பலான மாலைவேளையில் பெர்லின் சுவரின் அருகில் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட உந்துதலால், அதைப் பற்றித் தேட ஆரம்பித்தேன். அதைப் பற்றியான ஒவ்வொரு விடயமும் என்னுள் ஏதோ ஒரு ஏக்கத்தையும் தாக்கத்தையும் உண்டு பண்ண அடுத்த வாரமே மீண்டுமொருமுறை பெர்லின் நோக்கிப் பயணப்பட்டேன்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், நேச நாடுகளின் சக்திகள் ஜெர்மனியை நான்கு மண்டலங்களாகப் பிரித்தன. ஜூலை 1945 போட்ஸ்டாம் மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி, ஒவ்வொன்றும் அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினிலும் இதேபோல் செய்யப்பட்டது.

பெர்லின் சுவர்
பெர்லின் சுவர்

சோவியத் யூனியனுக்கும் மற்ற மூன்று நேச சக்திகளுக்கும் இடையிலான உறவு விரைவில் சிதைந்தது. இதன் விளைவாக, ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கூட்டுறவு சூழ்நிலை போட்டி மற்றும் ஆக்கிரமிப்புக்கு மாறியது. 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெர்லின் முற்றுகை என்பது மிகவும் பிரபலமான சம்பவங்களில் ஒன்றாகும்!

இதன்போது சோவியத் யூனியன் அனைத்துப் பொருள்களையும் மேற்கு பேர்லினுக்கு வருவதை தடுத்து நிறுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆகஸ்ட் 13, 1961 அன்று ஓர் உறைந்த இரவில் கட்டப்பட்ட பெர்லின் சுவர் (Berliner Mauer) மேற்கு ஜெர்மனிக்கும் (West Germany) கிழக்கு ஜெர்மனிக்கும் (East Germany) இடையிலான ஒரு உடல் பிரிவு போன்றதாகும். அதிருப்தியும் விரக்தியுமடைந்த கிழக்கு ஜெர்மனியர்கள் மேற்கு நோக்கித் தப்பிச் செல்வதைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருந்தது! இச்சுவர் இரண்டு பகுதிகளையும் 28 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்தது.

பெர்லின் சுவர் 140 கிலோமீட்டர்க்கும் மேல் நீளம் கொண்டது. ஜூன் 1962 -ல், இரண்டாவது சுவர் சுமார் 100 மீட்டர்கள் தூரம் கிழக்கு ஜெர்மன் பிரதேசத்தில் கட்டப்பட்டது. சுவர்களுக்கு இடையே இருந்த வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்தப் பகுதி Death Strip என்றழைக்கப்பட்டது. மணல் அல்லது சரளைக் கற்களால் மூடப்பட்டிருந்த இப்பகுதி தப்ப நினைக்கும் மக்களின் கால்தடங்களை கண்டறிய உதவியது.

பெர்லின் சுவர் அருகே றின்னோஸா
பெர்லின் சுவர் அருகே றின்னோஸா

பல ஆண்டுகளாக, பெர்லின் சுவர் நான்கு பதிப்புகளை கண்டது:

கம்பி வேலி (1961)

மேம்படுத்தப்பட்ட கம்பி வேலி (1962-1965)

கான்கிரீட் சுவர் (1965-1975)

Grenzmauer 75 (எல்லைச் சுவர் 75) (1975-1989)

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, பனிப்போர் கரையத் தொடங்கியதும், நவம்பர் 9, 1989 அன்று கிழக்கு பெர்லினின் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தனது நகரத்தின் மேற்கு நாடுகளுடனான பயணத் தடையில் மாற்றத்தை அறிவித்தார். அந்த நாளில் தொடங்கி, கிழக்கு ஜெர்மனியின் குடிமக்கள் நகரின் எல்லைகளை கடக்க சுதந்திரமாக அனுமதிப்பதாக அவர் கூறினார். கிழக்கு மற்றும் மேற்கு பெர்லினர்கள் சுவரில் திரண்டு, பீர் மற்றும் ஷாம்பெயின் குடித்துவிட்டு, ‘டோர் ஆஃப்!’ (வாயிலைத் திற!) என்று கோஷமிட்டனர். ஒரு பத்திரிகையாளர் எழுதியது போல், 'உலக வரலாற்றில் மிகப் பெரிய தெரு விருந்து' என்று இது அறியப்படுகிறது! இக்கொண்டாட்டத்தில் பங்கேற்க கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியிலிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கூடினார்கள்.

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட தேதி 9 நவம்பர் 1989 எனக் கருதப்படுகிறது! ஆனால் அது முழுமையாக ஒரே நாளில் தகர்க்கப்படவில்லை. அன்று மாலை தொடங்கி தொடர்ந்து வந்த நாள்களில், மக்கள் சுத்தியல் மற்றும் உளிகளைக்கொண்டு சுவரை தகர்த்தனர். இந்த மக்கள் ``Mauerspechte" (சுவர் மரங்கொத்தி பறவைகள்) எனச் செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்டனர். பின்னர் வந்த வாரங்களில் கிழக்கு ஜெர்மனி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் (போட்ஸ்டேமெர் பிளாட்ஸில், Glienicker Brücke, Bernauer Strabe) பத்து புதிய எல்லைகளை திறப்பதாக அறிவித்தது.

இருபுறமும் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவர் பகுதி தகர்க்கப்படுவதையும் பழைய சாலைகள் மீண்டும் ஏற்படுத்தப்படுவதையும் கண்டுகளித்தனர். 1945 க்குப் பிறகு முதன்முறையாக ஜெர்மனி மீண்டும் இணைந்தது. பெர்லின் சுவரின் வீழ்ச்சி, இரண்டாக உடைபட்டிருந்த ஜெர்மனி இரண்டும் இணைவதற்கு அடிப்படையாக அமைந்தது. இவை 1990 அக்டோபர் 3 இல் இணைந்தன.

பெர்லின் சுவர்
பெர்லின் சுவர்

முன்பு சுவர் நின்ற இடத்தில் இன்று, பிஸியான பரபரப்பான ஒரு நகரம் இயங்குகிறது! இன்றும், பெர்லின் சுவர், நகரின் சில பகுதிகளில் ஒரு நினைவுச்சின்னமாக உள்ளது. அதன் வீழ்ச்சியுற்று முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவர், பெர்லினின் கொந்தளிப்பான கடந்த காலத்தையும் அதன் வெற்றிகரமான மீட்பையும் எப்போதும் நினைவூட்டுகிறது!

1316 மீட்டர் நீளத்தில், Friedrichshainஇல் உள்ள ஸ்ப்ரீகரையில் உள்ள திறந்தவெளி கலைக்கூடம் பெர்லின் சுவரின் மிக நீண்ட தொடர்ச்சியான பகுதியாகும். சுவர் கீழே இறங்கிய உடனேயே, 21 நாடுகளைச் சேர்ந்த 118 கலைஞர்கள் கிழக்குப் பக்க கேலரியை வரைவதற்குத் தொடங்கினர். இது அதிகாரபூர்வமாக ஒரு திறந்தவெளி கேலரியாக செப்டம்பர் 28, 1990 அன்று திறக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, அதற்கு பாதுகாக்கப்பட்ட நினைவு அந்தஸ்து வழங்கப்பட்டது. முதல் தடவை நான் சென்றபோது அச்சுவரின் மேல் வரையப்பட்டிருந்தவற்றை வெறும் சுவரோவியமாகமே பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால் இரண்டாவது முறை சென்றபோது அந்த ஓவியங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் ஒவ்வொரு வரலாறும் என்னை ஆச்சர்யத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்றது! குறிப்பாக, கிழக்கு பக்க கேலரியில் உள்ள சில படைப்புகள் பிரபலமாக உள்ளன. அதாவது டிமிட்ரி வ்ரூபலின் (Dmitri Vrubel’s) சகோதரத்துவ முத்தம் மற்றும் பிர்கிட் கைண்டர்ஸின் (Birgit Kinders’s) டிராபண்ட் சுவரை உடைப்பது போன்றவை மிகவும் பிரசித்தி பெற்றது!

ஒரு காலத்தில் பயமும் பீதியும் காவலும் கட்டுப்பாடும் நிறைந்திருந்த பெர்லின் சுவர் அமைந்திருந்த இடம் நான் சென்றபோது, மக்கள் நிம்மதியும் சுதந்திரமுமாக வாழும் ஒரு பரபரப்பு மிகுந்த நகரமாக மாறியிருந்தது. அவ்விடத்தில் நான் சந்தித்த மூன்று நான்கு வயதான மூத்த ஜெர்மனியர்கள் தட்டுத் தடுமாறிய ஆங்கிலமும் ஜெர்மன் பாஷையிலுமாக அக்காலத்து அனுபவத்தைப் பகிர்ந்தது கேட்கும் போது எனக்குள்ளும் ஓர் அதிர்வலை! தானே ஒரு விமானம் தயாரித்து சுவரைக் கடந்து சென்ற சகோதரர்கள், hot air ballon மூலம் தப்பிச் செல்ல முயன்று தோற்றுப் போனவர்கள், சுரங்கவெளி அமைத்து தப்பிக்கப் பார்த்தவர்கள், அமெரிக்க ஜனாதிபதி John.F.கென்னடியின் Ich bin ein Berliner (I am a Berliner) பேச்சு, எனப் பல பல சுவாரஸ்யமான விடயங்கள் தெரிந்து கொண்டேன்!

பெர்லின் சுவர்
பெர்லின் சுவர்

அதிகார ஆட்சியும், சதிகார அடக்குமுறையும் அவர்களது மனதில் இன்றுவரை ஆறா வடுவாக உறைந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது!! அப்பகுதியில் தற்போது வசிக்கும் மக்களுக்கு அது வெறும் நினைவுச் சின்னம்! அங்கு குவியும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கு அது ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஓர் உலக அதிசயம்! ஆனால் உயிறற்ற அந்த உயர்ந்த சுவரின் பின்னால் உறைந்திருக்கும் வலியும் வரலாறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது!

கடைசியாக ஒருமுறை அந்தச் சுவரை கரங்களால் தொட்டுப் பார்த்து சிலிர்த்து, டென்மார்க் திரும்பினேன்....!!!

- றின்னோஸா

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு