இரண்டு மாத போர் சூழலுக்குப் பிறகு உக்ரைன் கிராமங்களின் நாள்கள் ஈமச்சடங்குகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. எங்கு காணிணும் பிணங்கள் என்னும் அளவுக்கு உக்ரைன் பிணக்காடாக காட்சியளிக்கிறது. ஒஸிரா கிராமம். தலையில் கறுப்பு அங்கி அணிந்து நாடியா வோஸ்னென்கோ ரஷ்ய வீரர்கள் விட்டுச்சென்ற அந்தப் பெட்டியில் காணாமல் போன மகனை கண்டெடுக்கும் காட்சி மீள முடியாத துயரம். உறவினர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் உலகம் முழுக்கவே இருக்கிறது. இறந்த தன் மகனை, கணவனை, தகப்பனை, ரத்த சொந்தத்தை... இனி என்றுமே காண முடியாத அந்த உயிரற்ற உடலை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் எனத் துடிப்பதில்தான் மனிதனின் மனிதம் இன்னும் துளிர்விட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், ரத்தப்பசியில் சாமானியர்கள் வேட்டையாடப்படும் போரில் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?
நாடியா வோஸ்னென்கோ, நாடியா ட்ரூசனிநோவா என ஒவ்வொரு தாயாருக்குப் பின்னும், ஆயுள் உள்ள வரை அழுதுத் தீர்க்க சோகக் கதைகளை விட்டுச் சென்றிருக்கிறது ரஷ்யா. 70 வயதான நாடியா ட்ரூசனிநோவா ஒன்பது நாள்களுக்குப் பிறகு இறந்த தன் மகனின் உடலை பார்த்து அழும் புகைப்படம் கடந்த மாதம் வெளியாகி பார்க்கும் அனைவரையும் கலங்கடித்தது. தன் கிராமத்திலிருந்து ஒவ்வொரு நாளும் சிதிலமடைந்த புச்சாவுக்கு வந்து தன் மகனின் உடலுக்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனார் நாடியா. 70 வயதில் ஒரு தாய் தன் மகனுக்காக எப்படியெல்லாம் காத்திருக்ககூடாதா அப்படியெல்லாம் காத்திருந்தார் நாடியா. நாடியா ட்ரூசனிநோவாவின் வாழ்க்கையைப் போலவே மன உளைச்சலை உண்டாக்குகிறது மற்றொரு பெண்மணியான நாடியா வோஸ்னென்கோவின் துயர்மிகு வாழ்க்கை.

சர்வதேச ஊடகமான வாஷிங்டன் போஸ்ட்டில் அலெக்ஸ் ஹார்டன், நாடியா வோஸ்னென்கோ தன் மகனின் கண்ணியமான உடல் அடக்கத்திற்காக நடத்திய போராட்டங்கள் குறித்து எழுதியிருந்தார். அதன் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இதோ.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஏவுகணைகளின் சிதறல்கல் துளைத்த தனது வீட்டருகே நிற்கும் வாகனத்தை நாடியா வோஸ்னென்கோவால் அடையாளம் காண முடிகிறது. அது மகன் ஆண்ட்ரியின் டெலிவரி ட்ரக். தற்போது அது ஒரு தற்காலிக சவ ஊர்தி. அதில் கறுப்பு-ஆரஞ்சு நிற அங்கியில் மூடப்பட்டிருந்தது அந்த சவப்பெட்டி. கண நேர உணர்வுகளின் சித்திரவதைகளை மறைக்க அது மூடப்பட்டிருக்கும்.
'கடவுளே...' என்ற கதறல், வாகனத்தின் உள்ளே எதிரொலிக்க தனது வீட்டின் கதவிற்கும், அந்த டெலிவரி ட்ரக்கிற்கும் மீண்டும் மீண்டும் நான்கு முறை நடக்கிறார். தவிர்க்கமுடியாத துயரத்தையும் தாங்கிக் கொள்ளும் விதமாக வோஸ்னென்கோவை தனது கைகளில் தாங்குகிறார் அவரது மகள் வேலன்டினா.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசாலையில் ஒரு வெள்ளை வேன் துயர்மிகு கூட்டங்களைக் கடந்து தேவாலய கல்லறை நோக்கிச் செல்கிறது. "இன்னைக்கு நாலு காரியம்..." யாரோ ஒருவர் கூறுகிறார்.
43 வயது ஆண்ட்ரியை இரண்டாவது முறையாக புதைக்க வோஸ்னென்கோ குடும்பம், நண்பர்களுடன் கல்லறை நோக்கி ஊர்வலமாக நடக்கிறது.

உக்ரைன் தலைநகரத்தை கைப்பற்றும் ரஷ்ய படையின் முயற்சி தோல்வியுற்றபோது கீவ் நகருக்கு வெளியே இருந்த சமூகங்களை கபளீகரம் செய்தது ரஷ்ய படை. ராணுவ வீரர்கள் பொதுமக்களை அவர்களின் கார்களில் படுகொலை செய்தனர், சமையல் அறையில் தூக்கிலிட்டனர், வீட்டின் அடித்தளத்தில் மூச்சிறைக்க கொலை செய்தனர். தெருக்களிலும், வீட்டிற்குள்ளும் அழுகத் தொடங்கிய சடலங்களை புதைத்தவர்கள் பெரும்பாலும் முகம் தெரியாதவர்களே. யார் எங்கே புதைக்கப்பட்டனர் என்பது எந்தக் குடும்பங்களுக்கும் தெரியவில்லை. எந்த மண் எந்த உடலை, மிச்சமிருக்கும் எஞ்சிய உடல் பாகத்தை சுமந்துகொண்டிருக்கிறது என்று யாரால்தான் அடையாளம் சொல்ல முடியும்; இல்லை நினைவுதான் வைத்துக்கொள்ள முடியுமா? இன்றுடன் இந்தத் துயரங்கள் முடிந்துவிடாதா என்றுதான் ஒவ்வொரு நாளும், அநாமதேயர்கள் இத்தகைய உடல்களுக்கு அதீத மன உளைச்சலுடன் இந்தக் காரியங்களைச் செய்திருக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது, நூற்றுக்கணக்கான உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன. போர் குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. தீயாகத் தொடர்ந்து பயணிக்கும் தகவல்களினால் இறந்தவர்களின் மிச்சம் சொச்சமாக அவர்களின் வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். சிலர் தோண்டி எடுக்கப்பட்டு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.
ஆண்ட்ரியின் இறுதிச்சடங்கிற்கு முந்தைய நாள். புச்சா கிராமத்தின் பிணவறைக்கு வெளியே தரையில் கறை படிந்த மருத்துவ படுக்கைகளின் வரிசையில் காத்திருந்தன மனித பிரேதங்கள். அருகிலிருந்த குளிர்சாதன வாகனத்தில் இன்னும் சில பிரேதங்கள். அருகே, தங்களது பெயர்கள் எப்போது அழைக்கப்படும் என்று பல மணி நேரம் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள்.
ட்ரக்கின் பின்புறம் கொண்டுவரப்பட்ட ஒரு நீளமான பையினுள் உற்றுப்பார்த்து உள்ளே இருப்பது ஆண்ட்ரி என்பதை உறுதி செய்கிறார் அவரது உறவினர் வோலேடிமிர் சாய்கா. அருகில் இருக்கும் இன்னொரு கிராமத்தின் கல்லறையில் ஏப்ரல் மாதம் தோண்டியெடுக்கப்பட்ட அடிபட்டு சிதைந்த உடலின் மீதம் அது. ஆண்ட்ரியை இளவயதிலிருந்தே அறிந்த சாய்காவுக்கு அந்த உடல் கூற்றிலும், பிளாஸ்டிக்காக மாறியிருந்த தோலினிலும் கழுகு டாட்டுவை கண்டெடுக்கமுடிந்தது. அது ஆண்ட்ரிதான்.

ஓஸெராவுக்கு 20 நிமிடம் பயணித்து செய்தியை சொல்லிவிட்டு மீண்டும் பிணவறைக்குத் திரும்புகிறார் சாய்கா. ஆண்ட்ரி ஏன் கடத்தப்பட்டான் என்று இரண்டு கதைகள் உருவாகியிருந்தன. ஆனால் இரண்டின் அடிப்படையும் ஒன்றுதான். ஆண்ட்ரி சுலபமாக கண்ணில் பட்டுவிட்டான்.
ஆண்ட்ரி ஒரு விவாகரத்து பெற்ற தந்தை. தடித்த பழுப்பு நிற கண்கள் கொண்டவன். தனது ட்ரக்கில் மீன் விற்றுக்கொண்டிருந்தான். பிப்ரவரி 25, ரஷ்ய படை அந்தச் சிறிய கிராமத்திற்கு வந்த பிறகு ஆண்ட்ரியின் ட்ரக்தான் அனைவருக்குமான உயிர் ஆதாரமாக இருந்தது.
வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பயத்தில் இருந்த குடும்பங்களுக்கு காய்கறிகள் வாங்கி வந்தான் ஆண்ட்ரி. காய்கறி ஏற்றும் ஒரு பதற்றமான பயணத்தில் தனது நண்பன் இவான் போய்கோவை குடும்பத்துடன் கீவ் நகரத்திற்கு அருகே உள்ள பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்துள்ளான்.
அவன் மக்கள் புரட்சியில் சேர்வதற்கு வெகு நாள்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ரஷ்ய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம், எதிரிகளின் பீரங்கிகள் சுடப்படும் திசை என்று அனைத்தையும் ஆவணப்படுத்தி உக்ரைன் அதிகாரிகளுக்கு கொடுத்து வந்தான்.
போர்ச் சூழலில் வீட்டிலிருந்து வெளியேறி சாலையில் நடக்கவே அசுரத்தனமான துணிச்சல் தேவை. இவன், பெரும்பாலான கிராமவாசிகளை விட அதிகநேரம் வெளியே செலவிடுவது ராணுவ வீரர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கும். வெடிச் சிதறல்களில் அவன் காயப்பட்டபோதுதான் அந்தச் சந்தேகம் மேலோங்கி இருக்க வேண்டும். ரத்தம் கசிந்துகொண்டிருந்த ஆண்ட்ரிக்கு ராணுவ வீரர்கள் மருத்துவ உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்ததாகச் சொல்கிறார் ஆண்ட்ரியின் சகோதரி. எதிர்பார்த்தபடி அவர்கள் ஆண்ட்ரிக்கு உதவினார்கள். ஆனால், அவன் மார்பில் குத்தியிருந்த கழுகு பச்சையை பார்த்தபோது கதை மாறியது.
மார்ச் 21, ஆண்ட்ரியுடன் ராணுவ படை கிராமத்தை விட்டு வெளியேறுவதை பார்த்திருக்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். ஒன்பது நாள்கள் கழித்து Zdvyzhivka என்ற ஊரில் ரஷ்யர்கள் தங்கியிருந்து இரவில் குடித்து, சிரித்துக்கொண்டிருந்த ஒரு வீட்டின் பின்புறத்தில் இரண்டு சடலங்கள் கிடப்பதை பார்த்திருக்கிறார் உள்ளூர்வாசி ஒருவர். அடுத்த நாள் இன்னும் மூன்று சடலங்கள். அனைவரும் பிணைக்கப்பட்டு, கொல்லப்பட்டு இருப்பது தெரிந்தது. பல முறை சுடப்பட்டு கொல்லப்பட்ட ஆண்ட்ரியும் அதில் ஒருவர்.
ரஷ்யர்கள் வெளியேறிய பிறகு யூஜின் போண்ராசனிச்னி என்பவர் உள்ளூர் பாதரியார் ஒருவரின் உதவியுடன் அனைத்து உடல்களையும் அடக்கம் செய்துள்ளார். அந்த பாதரியார் போய்கோவிற்கு சில புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையிலேயே ஆண்ட்ரியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. தோண்டியெடுக்கப்பட்ட ஆண்ட்ரியின் உடல் வீடு திரும்ப 17 நாள்கள் ஆகின.

ஆண்ட்ரியின் இறுதி ஊர்வலம் சர்ச் கல்லறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆண்ட்ரியின் தாய் ஒரு கேள்வியை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார். "நான் சொல்வதை நீ ஏன் கேட்கவில்லை?". ரஷ்யாவுடனான் சிக்கல்களைத் தவிர்த்து அவருடனே இருக்கும்படி அழைத்திருக்கிறார். ஆண்ட்ரி ஏனோ அதை கேட்கவில்லை.
குழி தோண்டியவர்கள் குழியை மூட காத்திருக்கிறார்கள். உடல் பெட்டியுடன் அடக்கம் செய்யப்படுகிறது. பரபரப்பான வாரத்தில் ஒரு பரபரப்பான நாள் அது. கடந்த இரண்டு நாள்களில் ஏழுபேர் புதைக்கப்பட்டுள்ளார்கள்.
துக்கம் அனுசரிப்பவர்கள் வோஸ்னென்கோ குடும்பத்தின் பின்னால் கூடியிருக்கிறார்கள். இறுதி மரியாதையை மேற்கொள்ளும் பாதிரியார் அந்தத் தருணத்தின் கொடுமையை விளக்குவதை அனைவரும் கவனிக்கிறார்கள். பெட்டியின் மீது புனித நீர் தெளித்து உள்ளே இறக்கப்படுகிறது ஆண்ட்ரியின் உடல். ஒவ்வொருவரும் மூன்று பிடி மண்ணை கல்லறையில் வீசுகிறார்கள். மூடிய குழியின் மேல் பாதியாக வெட்டப்பட்ட ஒரு சோடா பாட்டில் வைத்து அதில் மலர்கள் வைக்கப்படுகின்றன.
வோஸ்னென்கோ குடும்பம் மைக்கைலிவ்ஸ்கா தெருக்குள் தன் வீட்டை நோக்கி திரும்புகிறது. ஆண்ட்ரியின் இடத்தை நிரப்புவது சிரமம்தான். திரும்பிய குடும்பத்தினர் ஒரு நீண்ட மேசையில் உணவோடு அமர்கிறார்கள். நீல-மஞ்சள் கண்ணாடி டம்ளாரில் ஊற்றப்பட்ட ஒரு ஷாட் உக்ரைன் வோட்கா அந்த மேசையில் ஆண்ட்ரிக்கு படைக்கப்படுகிறது. "ஆண்ட்ரியின் கல்லறையை கவனித்துக்கொள்ள நான் முடிந்தவரை வாழ முயல்கிறேன்" என்று தன் வெறுமையின் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் முதியவரான அந்த நாடியா வோஸ்னென்கோ.