Published:Updated:

‘6-10 வாரம் கடுமையான ஊரடங்கு தேவை!’ -அமெரிக்காவுக்கு பில்கேட்ஸ் அட்வைஸ் #Coronavirus

பில்கேட்ஸ்
News
பில்கேட்ஸ்

அமெரிக்காவில் வைரஸ் பரவலைக் குறைக்கக் குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் கட்டாயம் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மிகவும் வேகமாக மீண்டெழும்’ என நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று 85,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாசிடிவ் நோயாளிகளுடன் உலகிலேயே வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. கடந்த சில நாள்களாக இத்தாலியிலும் ஸ்பெயினிலும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த இரு நாடுகள்தான் முதலில் சீனாவை விஞ்சும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காமல் அமெரிக்கா முதல் இடத்துக்குச் சென்றுள்ளது பிற நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

கொரோனா
கொரோனா

அங்கு பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளன என்பது சற்றே நிம்மதியான விஷயம். அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மொத்த நாடும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மட்டும் 3 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளனர். கிறிஸ்துவர்கள் அதிகம் கொண்டாடும் பண்டிகையான ஈஸ்டர் வரும் ஏப்ரல் மாதத்தில் உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதற்குள் தங்கள் நாட்டு நிலையைச் சரிசெய்து ஊரடங்கைத் திரும்பப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் ட்ரம்ப்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில் அமெரிக்கா தற்போது சந்தித்து வரும் நிலையிலிருந்து மீள வேண்டுமென்றால் 6 முதல் 10 வாரங்களுக்குக் கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் நடந்த டெட் கனெக்ட் (TED connect) நிகழ்ச்சியில் பேசிய அவர், “என் வாழ் நாளில் அமெரிக்கப் பொருளாதாரம் இவ்வளவு மோசமாக இருந்ததை நான் பார்த்ததில்லை. ஆனால் மக்களின் உயிரை மீண்டு கொண்டுவருவதை விடப் பொருளாதாரம் மற்றும் பணத்தை மீட்டுவது எளிது. உயிரை மீண்டும் கொண்டுவர முடியாது. பணம் போன சம்பாதித்துக்கொள்ளலாம் உயிர் போனா வராது. நோய் மற்றும் இறப்பு வேகத்தைக் குறைப்பதற்காகப் பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

அமெரிக்கா
அமெரிக்கா
Manuel Balce Ceneta

அமெரிக்காவில் தற்போது வைரஸ் பரவலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஒரு தீவிரமான பணி நிறுத்தம் மற்றும் ஊரடங்கு தேவை. ஆறு வாரம் முதல் 10 வாரம் வரை கண்டிப்பாக மக்கள் வீட்டுக்குள் தங்கியிருக்க வேண்டும். இந்த வைரஸ் பரவலிலிருந்து மக்களை மீட்பதே தற்போது நம் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அமெரிக்கா தற்போது இருக்கும் சூழலில் ஈஸ்டர் தினத்துக்குள் நிலைமை சரியாகாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனாவில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடனேயே அமெரிக்கா செயல்பட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு விதமாக இருந்திருக்கும். அமெரிக்காவில் நூறுபேருக்கு வைரஸ் உறுதியானதுமே வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதித்து அமெரிக்க மக்களைக் கட்டுப்படுத்தியிருந்தால் நாடு இவ்வளவு பெரிய பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்திருக்காது.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

கோவிட் -19 வைரஸ் பரவலில் அமெரிக்கா வேகமாகச் செயல்படவில்லை. சுவாசத் தொற்று வைரஸ்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே பரவக்கூடியவை. ஆனால், தற்போது வந்துள்ள வைரஸ் எந்தக் காலத்துக்குரியது இன்னும் எத்தனை நாள்கள் நீடிக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், கடுமையான நடவடிக்கை எடுத்தால் இந்த நோய் தொற்றின் சக்தியை நிச்சயம் குறைக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்