உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா சுமார் 170 கிலோமீட்டர் தூரத்திற்கு 'The line' என்ற திட்டத்தின் பெயரில் ஒரு பிரமாண்ட நகரத்தை உருவாக்கி வருகிறது.
சவுதி அரேபியாவின் எதிர்கால பொருளாதாரத்தையும் சுற்றுச் சூழலையும் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கிட்டத்தட்ட 500பில்லியன் அமெரிக்கா டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இந்த நகரத்திற்கு 'NEOM' என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த 'The line' திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் பணிகள் 2030-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த புதிதாக அமையவுள்ள 'NEOM' நகரம் மாசு ஏற்படுத்தக்கூடிய வாகனங்கள் ஏதும் இல்லாமல் ஜீரோ-கார்பன் நகரமாக முழுக்க முழுக்க 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் உருவாக்கப்பட உள்ளது. இதன் கட்டுமானங்கள் வழக்கமாகக் கிடைமட்டமாகக் கட்டப்படும் கட்டுமானமாக இல்லாமல் செங்குத்தான அடுக்குகள் கொண்ட கட்டுமானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது மேல் அடுக்கில் மக்கள் நடந்து செல்வதற்கான சாலைகள், பூங்காக்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள். அதற்குக் கீழ் அடுக்கில் பள்ளிகள், காலேஜ் மற்றும் ஐடி போன்ற வணிக வளாகங்கள். அதற்கும் கீழே கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் 170 கிலோமீட்டரைக் கடக்கும் வகையில் அதிவேக ரயில்களுடன் கூடிய போக்குவரத்துச் சேவைகள் என சுமார் 9 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்த 'NEOM' நகரம் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த நகரத்திற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் அர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் பயன்படுத்தி உருக்கப்படவுள்ளது. இப்படி முழுக்க முழுக்க 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் ஜீரோ-கார்பன் நகரமாக உருவாகவும் சவுதி அரேபியாவின் இந்த 'NEOM' நகரம் மாசு இல்லாத உலகை உருவாக்க முன்மாதிரியான நகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.