Published:Updated:

`மொத்த அன்பையும் தன் தம்பிக்குக் கொடுத்தாள்!' - கேன்சர் குழந்தையின் நிலை குறித்து தாயின் வேதனை

கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையால் அவரது வீட்டில் இருக்கும் மற்ற குழந்தைகளின் நிலை எப்படி இருக்கும் என்ற ஒரு தாயின் பதிவு வைரலாகியுள்ளது.

 Beckett - Aubrey
Beckett - Aubrey ( Facebook/@beatitlikebeckett )

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த கைட்லின் பர்க் (Kaitlin Burge) என்ற தாய் பதிவிட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவு மொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள தன் 4 வயது மகன் பெக்கெட் (Beckett) மற்றும் அவருக்குத் துணையாக இருக்கும் தன் 5 வயது மகள் ஆப்ரி (Aubrey) பற்றிய பதிவுதான் அது. ’கேன்சர் நோயால் தன் குடும்பத்தின் நிலை இப்படித்தான் உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 Beckett - Aubrey
Beckett - Aubrey
Facebook/@beatitlikebeckett

கடந்த வருடம், லுகேமியா (leukemia) என்ற எலும்பு மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெக்கெட், மிகவும் மெலிந்த உடலுடன் கழிவறையில் நிற்கிறான். அவனைத் தட்டிக்கொடுத்த படி அவனுக்குப் பின்னால் நிற்கிறார் ஆப்ரி. இந்தப் புகைப்படம்தான் கடந்த இரண்டு வாரங்களாக சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. இவர்கள் பற்றி அவரது தாய் வெளியிட்டுள்ள பதிவில், ``குழந்தைகளுக்கான கேன்சர் மொத்தக் குடும்பத்தையும் பாதிக்கும் என யாரும் கூறவில்லை. கேன்சரால் பொருளாதார பாதிப்பு, உடல் ரீதியிலான பாதிப்பு போன்றவற்றை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் கேன்சர் உள்ள ஒரு குழந்தையை அதே வீட்டில் உள்ள மற்ற குழந்தைகள் எப்படி எதிர்கொள்ளும். அந்தப் போராட்டம் குறித்து கேட்டிருக்கிறீர்களா... இதைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் சிலருக்குக் கடினமாக இருக்கலாம். 15 மாத இடைவெளியில் பிறந்த என் இரு குழந்தைகளும் சேர்ந்தே விளையாடுவார்கள், சேர்ந்தே பள்ளிக்குச் செல்வார்கள். தற்போது இவரும் இணைந்தே குளிரான மருத்துவமனையின் அறையில் அமர்ந்துள்ளனர்.

 Beckett
Beckett
Facebook/@beatitlikebeckett

தன் நான்கு வயது தம்பி, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை என் மகள் (5 வயது) வியந்தபடி நேரில் பார்த்தாள். ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டிருந்த அவனுக்கு, ஒரு டஜன் டாக்டர்கள் இணைந்து மாற்றி, மாற்றித் தொடர்ந்து ஊசி குத்தியதையும் பல மருந்து, மாத்திரைகளை அவன் உட்கொண்டதையும் பார்த்து செயலற்று நின்றாள். அங்கு என்ன நடக்கிறது என அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் தன் தம்பி, சிறந்த நண்பனுக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்பதை மட்டும் அவள் உணர்ந்திருந்தாள்.

`ஏய் தள்ளி நின்னு பேசு. எனக்கும் ஒட்டிக்கும்!' - டிராஃபிக் போலீஸாரின் செயலால் கலங்கிய இயக்குநர் ரமணா

ஒருமாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து பெக்கெட் வீடு திரும்பினான். அவனால் எழுந்து நிற்க முடியவில்லை, விளையாடமுடியவில்லை என்பதை ஆப்ரி கண்காணித்துக் கொண்டிருந்தாள். ஒரு மாதத்துக்கு முன்னர் வரை துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்த அவளின் தம்பி தற்போது விளையாட விரும்பாமல் நோய்வாய்ப்பட்டுள்ளான். தாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடச் சென்ற பூங்காவுக்குத் தற்போது ஏன் செல்லவில்லை.. தம்பி ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை.. அவனுக்கு என்ன ஆனது போன்ற எந்தக் கேள்விகளையும் அவள் கேட்கவில்லை.

ஒன்று மட்டும் செய்தாள், அவனுக்குத் துணை நின்றாள். தன் தம்பிக்கு நடக்கும் அனைத்தையும் அவள் தெரிந்துகொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவும் ஒற்றுமையும் தேவை. அவர்களைப் பிற குழந்தைகளிடமிருந்து தொலைவில் வைக்கக் கூடாது. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். என் குழந்தைகளும் அப்படிதான், பெக்கெட் ஒவ்வொரு முறை வாந்தி எடுக்கும்போது ஆப்ரி அவனுக்குப் பின்னால் துணை நிற்பாள்.

`குளிர்பானங்களைப் பருகினால் புற்றுநோய்?'- எச்சரிக்கும் ஆய்வு முடிவு

ஆப்ரி, மொத்த அன்பையும் தன் தம்பிக்குக் கொடுத்தாள். அவனை ஆதரித்தாள். நேரம், காலம் பார்க்காமல் அவனைக் கவனித்துக்கொள்கிறாள். இப்போது அவர்கள் முன்பைவிட நெருக்கமாக உள்ளனர். விளையாட்டுக்கு நடுவில் அவன் வாந்தி எடுக்கும் போது முதுகில் தேய்த்து விடுவது, தூங்கி எழுந்ததும் அவன் அருகில் இருப்பது. இதுதான் குழந்தைகள் கேன்சரின் உண்மையான நிலை” எனக் குறிப்பிட்டுள்ளார் கைட்லின் பர்க்.

 Beckett
Beckett
Facebook/@beatitlikebeckett

`தம்பிக்காக தன் வாழ்வில் நிறைய நேரத்தைத் தியாகம் செய்துள்ளார் ஆப்ரி. குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுங்கள் அதுவே இருவருக்கும் சிறந்தது” என கைட்லின் கூறியுள்ளார்.

அந்தக் குழந்தைகளின் புகைப்படமும் ஃபேஸ்புக் பதிவும் காண்பவர்கள் மனதைக் கலங்கச் செய்வதாக உள்ளது. கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவு குவிந்து வருகிறது.