Published:Updated:

178 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலாக என்ன காரணம்?

இங்கிலாந்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தாமஸ் குக் நிறுவனத்தில் 21,000 பேர் பணியாற்றிவருகிறார்கள். இன்று திவால் அறிவிப்பு வெளியானதையடுத்து, அனைவரும் வேலையை இழந்துள்ளனர்.

திவால் நடவடிக்கை
திவால் நடவடிக்கை ( vikatan )

இங்கிலாந்தைச் சேர்ந்த, 178 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சுற்றுலா சேவை நிறுவனம், 'தாமஸ் குக்'. இந்த நிறுவனம் திவாலானதாக இன்று (23, செப்டம்பர், 2019) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் வர்த்தகம், விமானச்சேவை உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

தாமஸ் குக்
தாமஸ் குக்
you tube

கடந்த சில ஆண்டுகளாகச் சரிவைச் சந்தித்துவந்த இந்த நிறுவனத்துக்கு வங்கிக்கடன் அதிகரித்தது. தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கு 250 மில்லியன் டாலர் தேவைப்பட்டது. அதைத் தனியாரிடம் திரட்டுவதற்காக, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும் கடனுதவி தருவோருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை பலனளிக்காததால், இன்று இந்த திவால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தாமஸ் குக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சுற்றுலா சேவைக்காகவே, 'தாமஸ் குக் ஏர்லைன்ஸ்' நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இங்கிலாந்திலுள்ள தாமஸ் குக் நிறுவனங்களில் பணியாற்றும் 9,000 பேர் உட்பட, மொத்தம் 21,000 பேர் உலகெங்குமுள்ள இதன் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இன்று திவால் அறிவிப்பு வெளியானதையடுத்து அனைவரும் வேலையை இழந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின்மூலம், தற்போது சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள 1,50,000 பேரையும் பத்திரமாக அவரவர் இடங்களுக்குத் திருப்பியனுப்ப இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தப் பணியில் நிறைய விமானங்களை ஈடுபடுத்தி, இலவசமாகவே அவர்களைத் திருப்பியனுப்பிவருகிறது. இந்த நிறுவனத்தின் சுற்றுலா சேவையைப் பயன்படுத்துவதற்காக 6 லட்சம் பேர் ஏற்கெனவே செய்திருந்த புக்கிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாமஸ் குக் நிறுவனம், 'மிகுந்த சோகமான நாள்' என்று குறிப்பிட்டுள்ளது. தங்களுடைய லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். தாமஸ் குக் நிறுவனத்தின் இணையதளத்தில் இதுகுறித்து விரிவான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்துக்கும் தற்போது திவாலான தாமஸ் குக் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை. தாமஸ் குக் (இந்தியா) நிறுவனம், கடந்த 2012, ஆகஸ்ட் மாதத்தில், கனடாவைச் சேர்ந்த ஃபேர்பாக்ஸ் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த நிறுவனம் மிகவும் நல்ல நிலையில் இயங்கிவருகிறது. 'இங்கிலாந்து தாமஸ் குக் நிறுவனத்தின் தற்போதைய சூழலுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று தாமஸ் குக் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ட்வீட் செய்துள்ளார்.