Published:Updated:

ஆயிரக்கணக்கான விலங்குகள் பலி... நேபாள நாட்டு காதிமாய் விழாவில் பரிதாபம்

கோயில் வளாகத்தில் பலியிடப்பட்ட விலங்குகள்
கோயில் வளாகத்தில் பலியிடப்பட்ட விலங்குகள்

நேபாளத்தில் 80 சதவிகித மக்கள் இந்துக்கள். இந்த விழாவில் பங்கேற்பதை அவர்கள் பெருமையாகக் கருதுவதும் வழக்கமாக உள்ளது. இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விலங்குகளைப் பலியிடுவது வாடிக்கை.

நேபாளத்தின் பரியார்பூர் இந்திய எல்லையையொட்டியுள்ள கிராமம். இங்கேதான், காதிமாய் தேவி கோயில் உள்ளது. இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எலி, பன்றி, கோழி, ஆடு, எருமை, மாடுகள், புறா ஆகிய விலங்குகளும் பறவைகளும் ஆயிரக்கணக்கில் பலியிடப்படும். 2014-ம் ஆண்டு நடந்த விழாவின்போது, 2,00,000 விலங்குகள் பலியிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த டிசம்பர் 3-ம் தேதி தொடங்கியது. இந்தியா, நேபாளத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஆடு, மாடு, கோழிகளுடன் கோயில் வளாகத்தில் திரண்டனர். இதுவரை, ஆயிரக்கணக்கான விலங்குகள் பலியிடப்பட்டுள்ளன. விலங்குகளின் தலையை வெட்டுவதற்காக மட்டும் 200 பேர் பெரிய அரிவாளுடன் கோயில் வளாகத்தில் தங்கியுள்ளனர்.

காதிமாய் தேவி கோயில்
காதிமாய் தேவி கோயில்

ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகள் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடப்பது உயிரின ஆர்வலர்களைக் கவலைக்குள்ளாக்கின. 2015-ம் ஆண்டு நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றத்தை விலங்கின ஆர்வலர்கள் அணுகினர். நீதிமன்றமும் விலங்கினங்களைப் பலியிடுவதற்குத் தடை விதித்ததோடு, தடுக்கவும் அரசுக்கு ஆணையிட்டது. ஆனாலும், விலங்குகள் பலியிடப்படுவதைத் தடுக்க முடியவில்லை. கடந்த 3-ம் தேதி விழா தொடங்கிய முதல் நாளில் மட்டும் 3,500 எருமைகள் வெட்டப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகமும் விலங்குகள் பலியிடப்படுவதை, தடுக்க முயன்றாலும், மக்கள் ஆண்டாண்டு காலமாகக் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக விலங்குகளைப் பலியிடுவதைத் தடுக்க முடியாத நிலையே உள்ளது.

கோயிலின் வரலாறு

சிறையில் அடைபட்டுக் கிடந்த ஒருவரின் கனவில் தோன்றிய காளியின் அவதாரமாகக் கருதப்படும் காதிமய் தனக்குக் கோயில் கட்ட உத்தரவிட்டதாம். அதோடு, சிறைவாசியின் கால்களில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியும் தானாகவே அவிழ்ந்து, சிறைக்கதவுகளும் திறந்தன. அம்மன் உதவியால், சிறையில் இருந்து வெளியேறிய அவர் பாரியார்பூரில் காதிமாய்க்குக் கோயில் கட்டியுள்ளார்.

விலங்குகள் பலியிடப்படுவதைத் தவிர்க்கச் சொல்லலாமே தவிர, எங்களால் கட்டாயப்படுத்த முடியாது.
நோபள அதிகாரி

பிறகு, நன்றிக் கடனுக்காக, எருமை ஒன்றைப் பலி கொடுத்துள்ளார். அதன்படி, இந்த அம்மனுக்கு விலங்குகளைப் பலி கொடுத்தால் தங்களின் கஷ்டங்கள் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே திருவிழா காலத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை மக்கள் பலி கொடுக்கின்றனர். நேபாளத்தில் 80 சதவிகித மக்கள் இந்துக்கள். இந்த விழாவில் பங்கேற்பதை அவர்கள் பெருமையாகக் கருதுவதும் வழக்கமாக உள்ளது. இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று விலங்குகளைப் பலியிடுவது வாடிக்கை.

நேபாள நாட்டு சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அதிகாரி ராஜன் நேபாள் கூறுகையில், ''பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, இங்கே விலங்கினங்களைப் பலியிட்டு வருகின்றனர். காதிமாய் கோயில் மீது கொண்டுள் நம்பிக்கையால் காலங்காலமாக இந்த விழா நடைபெறுகிறது. இதனால், நீதிமன்றம் உத்தரவிட்டாலும் எங்களால் விலங்குகள் பலியிடப்படுவதைத் தடுக்க முடியவில்லை. எங்களால் அறிவுறுத்த முடியுமே தவிர பக்தர்களை கட்டாயப்படுத்த முடியாது. ஆனாலும் , விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் கடந்த விழாவைக் காட்டிலும் இந்த முறை விலங்கினங்கள் பலியிடுவது குறைந்துள்ளது'' என்கிறார்.

இந்தக் கோயிலின் தலைமை பூசாரி மங்கல் சௌத்திரி, ''கோயிலில் விலங்கினங்களைப் பலியிட நாங்கள் ஊக்கப்படுத்துவதில்லை. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கள் விருப்பப்படி பக்தர்கள் செய்வதை நாங்கள் தடுக்க இயலாது'' என்று தெரிவித்துள்ளார்.

கோயில் திருவிழாவுக்காக திரண்ட பக்தர்கள்
கோயில் திருவிழாவுக்காக திரண்ட பக்தர்கள்

காதிமாய் கோயிலில் பலியிடப்படும் விலங்கினங்களின் தலைகளை பெரிய குழியில் போட்டு புதைத்துவிடுகிறார்கள். இறைச்சியை சமைத்து உண்கிறார்கள். வீட்டுக்கும் பங்கிட்டு எடுத்துச் செல்கிறார்கள். விலங்கினங்களின் தோல்களை வாங்குவதற்கும் ஏராளமான வியாபாரிகள் விழாக்காலத்தில் இங்கே முற்றுகையிடுவர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு