Published:Updated:

சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று ஆஃப்கன் பெண் ஊடகவியலாளர்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Guns (Representational Image)
Guns (Representational Image) ( Image by Clker-Free-Vector-Images from Pixabay )

ஊடகங்களில் பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஒரு நாடாக ஆஃப்கானிஸ்தான் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் ஊடகத் துறையில் பணியாற்றும் 15 பேர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு ஒரு பக்கம் உலகம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டு இருந்தாலும், வேலைக்குச் செல்வதில் ஆரம்பித்து வாகனம் ஓட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதுவரை ஒவ்வோர் அடிப்படை உரிமைக்கும் பெண்களில் பலர் போராடவேண்டிய நிலையில்தான் உள்ளனர்.

இதற்கெல்லாம் உச்சமாக அண்டை நாடான ஆஃப்கானிஸ்தானில் உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் வேலை செய்துவந்த மூன்று பெண் ஊழியர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது உலகம் முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஃப்கான் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் ஊடகத்தில் இந்த மூன்று பெண்களும் பணிபுரிந்ததால் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அத்தீவிரவாதக் குழு தெரிவித்துள்ளது.

Stop Terrorism (Representational Image)
Stop Terrorism (Representational Image)
Image by Gerd Altmann from Pixabay

இப்படி அப்பாவிப் பெண்கள் கொல்லப்பட்டதற்கு ஆஃப்கான் அதிபர் அஷ்ரப் கனி தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் ‘எனிகாஸ்(ENIKASS TV AND RADIO)' என்கிற வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆன்மிகம், கல்வி, அரசியல், பொழுதுபோக்கு போன்ற பல பிரிவுகள் சார்ந்த நிகழ்ச்சிகளை 'எனிகாஸ்' ஊடகம் வழங்கி வருகிறது. குறிப்பாக வேற்று மொழிகளில் உருவாகும் உணர்வுபூர்வமான நாடகங்களை டாரி(DARI) மற்றும் பாஷ்து(PASHTU) ஆகிய ஆஃப்கானிஸ்தானின் உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம்செய்து ஒளிபரப்புவது இவ்வூடகத்தின் வழக்கம்.

இந்த நாடகங்களுக்கு டப்பிங் குரல் கொடுப்பவர்களாகப் பணியாற்றிக்கொண்டிருந்த மூன்று பெண்களைத்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.

முர்ஸால், ஷானாஸ், ஸதியா ஆகிய இந்த மூன்று பெண்களும் தங்களது அலுவலகப் பணியை முடித்துவிட்டு அவரவர் வீட்டிற்கு நடந்து வந்தபோது, இரண்டு தனித்தனியான தாக்குதல்களால் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்கள் மூன்று பேர் தவிர நான்காவதாக ஒரு பெண்ணும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Woman Journalist (Representational image)
Woman Journalist (Representational image)
Image by mohamed Hassan from Pixabay

ஊடகங்களில் பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஒரு நாடாக ஆஃப்கானிஸ்தான் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் ஊடகத் துறையில் பணியாற்றும் 15 பேர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு ஏன்... கடந்த டிசம்பர் மாதம் கூட ஆஃப்கானிஸ்தானில் மலாலா மைவாந்த் என்கிற பெண் ஊடகவியலாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலராகவும் செயல்பட்டுவந்த இவர், ஒரு பெண் பத்திரிகையாளராக ஆஃப்கானிஸ்தானில் செயல்படுவது எவ்வளவு சவாலான ஒரு விஷயம் என்பதை வெளிப்படையாகப் பேசிவந்த ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு