Published:Updated:

‘முற்றிலும் திறமையற்றவர், அவ்வளவுதான் சொல்ல முடியும்’ - பகிரங்கமாக மோதிக்கொள்ளும் ட்ரம்ப் - ஒபாமா

ட்ரம்ப் - ஒபாமா
ட்ரம்ப் - ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பும் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சித்துவருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிகப் பெரிய அளவில் வெடித்த பிறகு, அதிபர் ட்ரம்ப், பல தரப்பிலிருந்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை சந்தித்துவருகிறார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90,000-த்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அங்கு, நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தன் நாட்டில் வைரஸ் பரவலின் வீரியம் குறைந்துவருவதாக ட்ரம்ப் கூறிவருகிறார்.

ஒபாமா மற்றும் ட்ரம்ப்
ஒபாமா மற்றும் ட்ரம்ப்
AP

மேலும், அமெரிக்காவின் பொதுச் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி, ஊரடங்கைத் தளர்த்தி நாட்டில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளைத் திறக்கத் திட்டமிட்டுவருகிறார். அதிபரின் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அங்கு இன்னொரு முறை பெரும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அறிவியலாளர்கள் எச்சரித்துவருகின்றனர். ஆரம்பத்திலேயே வைரஸுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்காததே தற்போது அமெரிக்கா சந்தித்துவரும் கடினமான சூழ்நிலைக்குக் காரணம் எனப் பலரும் அதிபரை விமர்சித்துவருகின்றனர்.

`உங்கள் நடவடிக்கைக்கு நாங்கள் பரவாயில்லை!’ - ஒபாமா விமர்சனத்துக்கு ட்ரம்ப் பதிலடி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா மிகவும் அரிதாகவே, ஒருவரைப் பற்றியோ ஒரு நிர்வாகத்தைப் பற்றியோ விமர்சிப்பார் என கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களில் 2 முறை ட்ரம்ப் அரசாங்கத்தின்மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முன்னதாக, தன் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், 'கொரோனாவைத் தடுக்க ட்ரம்ப் அரசு கையாண்டது குழப்பமான மற்றும் முழுமையான பேரழிவில் முடிந்துள்ளது. இந்தப் பெரும் தொற்றைச் சமாளிக்க அமெரிக்காவுக்கு மிகவும் வலிமையான தலைமை தேவை’ என விமர்சித்திருந்தார்.

ஒபாமா
ஒபாமா
Representational image | AP

இதற்குப் பதில் அளித்திருந்த ட்ரம்ப், ‘ சில ஆண்டுகளுக்கு முன் ஒபாமாவும், தூங்கிவழியும் ஜோவும் (அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்) ஆட்சியிலிருந்தபோது உருவான ஹெச்1என்1 பன்றிக்காய்ச்சல் நடவடிக்கைகள் மிகவும் மோசமான மதிப்புகளைப் பெற்றன. அதனால் மோசமான வாக்குகள் விழுந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றைக் கையாள்வதற்கு நாங்கள் சிறந்த மதிப்புகளைப் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

‘இறுதியில் திரைச்சீலை கிழிந்துவிட்டது!’ -பகிரங்கமாக  ட்ரம்பை விமர்சித்த ஒபாமா #Coronavirus

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இணையம் மூலம் நடந்த HBCU (Historically black colleges and universities ) - வின் ஒரு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அதிபர் ஒபாமா, ட்ரம்ப் மீது மிகவும் பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதில், ‘ கொரோனா தொற்று இறுதியாக நாட்டின் திரைச்சீலையைக் கிழித்துவிட்டது. பெரும்பாலான தலைவர்களும் அதிகாரிகளும் தாங்கள் ஒரு பொறுப்பில் இருப்பதை உணரவில்லை. நாட்டுத் தலைமையிடம் இருக்கும் தோல்விகளை இந்தப் பெரும் தொற்று காட்டிவிட்டது’ எனப் பேசியிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இந்நிலையில், ஒபாமாவின் கருத்துக்கு மீண்டும் அதிபர் ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நமக்கு ஒரு சிறப்பான வார இறுதி இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் நிறைய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். நம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் இந்த கொடூரமான வைரஸுக்கு ஒரு தீர்வு காண்பது உட்பட, பல முனைகளில் மிகப்பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஒபாமா தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், “ ஒபாமா கூறிய கருத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அவர் ஒரு திறமையற்ற ஜனாதிபதியாக இருந்தார். அவ்வளவுதான் சொல்ல முடியும். முற்றிலும் திறமையற்றவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு